கார்டன் கஃபே!

காற்று வாக்கில் கதைகள் பேசலாம்…காரம் சாரமாக உணவை ருசிக்கலாம்…

சென்னை போன்ற பரபரப்பான நகரங்களில் மரங்கள் நிறைந்த ஒரு தோட்டத்தைப் பார்ப்பதே அரிதான விஷயமாக இருக்கிறது. தோட்டத்திற்குள் அமர்ந்து நமக்குப் பிடித்த உணவுகளை சாப்பிடுவதை நினைத்துப் பார்ப்பது அரிதினும் அரிது. இதை நாம் யோசிக்கும்போதே, நமது மனம் மரங்கள் நிறைந்த தோட்டத்தைத் தேடுகிறதுஇல்லையா? இந்த ஆவலைச் சாத்தியப்படுத்தி இருக்கிறது சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையில் இயங்கி வரும் ‘கார்டன் கஃபே’. மா மரங்களும், பூ மரங்களும் நிறைந்த இந்த கார்டன், இப்போது கஃபேவாக செயல்பட்டு வருகிறது. முழுநாளும் அமர்ந்து கதைகள் பேச, நண்பர்களோடு அரட்டை அடிக்க, பிஸினஸ் மீட்டிங், வொர்க் ஃப்ரம் கஃபே என பல்வேறு மகிழ்ச்சியான தருணங்களால் நிறைந்திருக்கும் இந்த கஃபேவுக்கு நாமும் சென்றோம். அதன் உரிமையாளர் பிரசாந்த்தை மர நிழலில் சந்தித்து மகிழ்ச்சியோடு உரையாடினோம். “ சென்னைதான் பூர்வீகம். லயோலாவில் பி.ஏ படித்தேன். கல்லூரிப்படிப்பு முடித்தவுடன் ஈவென்ட் மேனேஜ்மென்ட் செய்து வந்தேன். தொழில் நன்றாக சென்று கொண்டிருந்தபோது திடீரென கொரோனா வந்தது. அப்போது ஏற்பட்ட நெருக்கடியான சூழலால் அந்தத் தொழிலை சரியாக நடத்த முடியவில்லை.

அதனால், சொந்தமாக ஏதாவது ஒரு தொழில் தொடங்க வேண்டும் என யோசித்தேன். சென்னை மாதிரியான வளர்ந்து வரும் நகரங்களில் கார்டன் ஸ்டைல் கஃபேக்கள் ஒன்றிரண்டாக வரத் தொடங்கி இருக்கிறது. நானும் அதே மாதிரியான கார்டன் ஸ்டைல் கஃபேயைக் கொண்டு வரலாம் என நினைத்து எனது சொந்தத் தோட்டத்தையே கஃபேயாக உருவாக்கினேன். இங்கு இருக்கிற மரங்கள் அனைத்தையும் நான் எனது சிறு வயதில்இருந்து வளர்த்து வருகிறேன். அதற்குள்தான் இப்போது என்னுடைய கஃபே இருக்கிறது. இங்கு சாப்பிட வருபவர்கள் பெரும்பாலும், ஒரு தோட்டத்திற்குள் அமர்ந்து அவர்களின் பொழுதைக் கழிப்பதை மிகவும் விரும்புகிறார்கள். வார நாட்களில் வீட்டில் அமர்ந்து அலுவலக வேலைகளைப் பார்ப்பவர்கள் பலரும் இப்போது எனது கஃபேக்கு லேப்டாப் உடன் வந்து முழு நாளும் அமர்ந்து வொர்க் ஃப்ரம் கார்டனாக அவர்களது வேலையைச் செய்கிறார்கள். இன்னும் சிலர், ஏதாவது ஆன்லைன் வகுப்புகளோ அல்லது மீட்டிங் என்றாலும் கூட நமது கஃபேயில் அமர்ந்து டீ குடித்தபடியே அவர்களது பணியைத் தொடர்கிறார்கள். அந்தளவிற்கு இந்த கஃபே அவர்களுக்கு ரொம்பவே பிடித்திருக்கிறது. மாலை நேரங்களில் கல்லூரி மாணவர்கள் கஃபேக்கு வருகிறார்கள். வார இறுதி நாட்களில் எங்களுடைய கஃபேவிலே ஏதாவதொரு ஈவென்ட் நடந்தபடி இருக்கும். ஆர்ட் கேலரி வொர்க் ஷாப், இசை நிகழ்ச்சிகள் என பலரும் அவர்களது கொண்டாட்டத் தருணங்களை எங்களது கஃபேயில் வந்து கழிக்கிறார்கள்.

அந்தளவிற்கு அனைவருக்கும் பிடித்தமான கஃபேவாக எங்களது கார்டன் கஃபே இருக்கிறது. இங்கு கிடைக்கும் உணவுகள் பல வெரைட்டிகளில் இருக்கின்றன. ஒரு கஃபேக்குள் என்னவெல்லாம் இருக்க வேண்டுமோ, அவை அனைத்தையும் கொடுத்து வருகிறோம். டீயில் மட்டும் பல வகையான டீ இருக்கிறது. பிளாக் டீ, ஸ்பைசி பிளாக் டீ, கிரீன் டீ, ஆர்கானிக் டீ, மில்க் டீ என பல ெவரைட்டி இருக்கிறது. இங்கு வருபவர்களில் பலருக்கு ஐஸ் டீ ரொம்பப் பிடிக்கும். அதேபோல், காஃபியில் காரமல் கோல்ட் காஃபி இருக்கிறது. சான்ட்வெஜ், பீட்சா போன்ற உணவுகளில் பல வெரைட்டிகள் இருக்கிறது. மொஜிட்டோ, லெஸ்ஸி, லைம் என டிரிங்ஸ் இருக்கிறது. சான்ட்வெஜ்ஜில் மட்டும் சிட்னி சீஸ், டொமேட்டோ சீஸ், பனீர், சில்லி சீஸ், பட்டர் அன்ட் ஜாம், குக்கும்பர் அன்ட் சீஸ், பைனாப்பிள் என பல வெரைட்டிகளில் சான்ட்வெஜ் கொடுத்து வருகிறோம். ஹோம் ஸ்டைல் பீட்சாக்கள் செய்து கொடுக்கிறோம். தாய் கறி வெஜ், தாய் கறி சிக்கன், மிக்ஸ்டு ஹெர்ப் ரைஸ் வித் சாலட் என வெரைட்டி ஃபுட் இருக்கிறது. பிரேக் பாஸ்ட் பிளேட் ஆக சில காம்போ உணவுகளும் இருக்கின்றன. பல வெரைட்டி நூடுல்ஸும் இருக்கிறது. பனீர், தந்தூரி சிக்கன் இருக்கிறது. இதுபோக வெஜ் அன்ட் நான்வெஜ்ஜில் சாலட் இருக்கிறது. ஓரியோ பஜ்ஜி எங்கள் கஃபேயின் ஸ்பெஷல். பனானா ஐஸ்கிரீம், ப்ரவ்னி இதுபோக இன்னும் பல டெசர்ட்ஸ் இருக்கிறது. நல்ல பசுமையான இடத்தில் அமர்ந்துகொண்டு பிடித்த உணவுகளை சாப்பிடுவது, பிடித்த நபர்களிடம் உரையாடுவது, பிடித்த வேலைகளைச் செய்வது என அனைத்திற்குமே நமது கஃபே சரியான இடம். இங்கு வருபவர்களுமே கூட அதைத்தான் எங்களிடம் சொல்கிறார்கள்’’ என நெகிழ்ச்சியுடன் பேசிமுடித்தார் பிரசாந்த்.

– ச.விவேக்
படங்கள்: ஆ.வின்சென்ட் பால்

Related posts

பழைய சட்டக் கல்லூரி அருகே 5 மாடி கட்டடம் கட்ட தடையில்லை: நாளை அடிக்கல் நாட்டு விழா நடத்த சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி

வேங்கைவயல் விவகாரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய மேலும் ஒரு மாதம் அவகாசம் கோரி சிபிசிஐடி மனு

பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கியுள்ள பிரஜ்வல் ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை முடக்கக் கோரி வெளியுறவுத்துறைக்கு எஸ்ஐடி கடிதம்!!