தை மாத முதல் முகூர்த்தம்; திருவந்திபுரம் தேவநாதசாமி கோயிலில் இன்று ஒரே நாளில் 77 திருமணங்கள்

கடலூர்: தை மாத முதல் முகூர்த்த நாளான இன்று திருவந்திபுரம் தேவநாதசாமி கோயிலில் 77 திருமணங்கள் நடைபெற்றது. கடலூர் அருகே உள்ள திருவந்திபுரத்தில் தேவநாதசாமி கோயில் உள்ளது. 108 வைணவ திருத்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலாக இது உள்ளது. திருப்பதியில் உள்ள வெங்கடாஜலபதிக்கு திருவந்திபுரம் தேவநாதசாமி அண்ணன் என்பதால் திருப்பதிக்கு வேண்டிக்கொண்டு அங்கு செல்ல இயலாதவர்கள் திருவந்திபுரத்தில் வந்து நேர்த்திக் கடனை செலுத்தலாம்.

இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த கோயிலில் திருமணம் செய்து கொண்டால் தங்கள் வாழ்க்கை சிறக்கும் என்பதால் ஏராளமானோர் முகூர்த்த நாட்களில் திருமணம் செய்து கொள்வர். பொதுவாக மார்கழி மாதத்தில் இந்துக்கள் திருமணம், கிரகப்பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்த மாட்டார்கள்.

இந்நிலையில் தை மாத முதல் முகூர்த்த நாளான இன்று கோயிலில் உள்ள அவுஷதகிரி மலையில் உள்ள திருமண மண்டபத்தில் திருமணம் செய்து கொள்ள ஏராளமான மணமக்கள் தங்கள் உறவினர்களுடன் குவிந்தனர். முகூர்த்த நாளான இன்று திருவந்திபுரம் தேவநாத சாமி கோயிலில் 77 திருமணங்கள் நடைபெற்றதாக கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனால் கோயிலை சுற்றிலும் பொதுமக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. திருமணம் முடிந்து சாமி தரிசனம் செய்ய சென்ற மணமக்களால் கோயிலிலும் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. மேலும் கடலூர் பண்ருட்டி சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்பட்டது.

Related posts

குவைத் தீ விபத்தில் உயிரிழந்த ராயபுரம் சிவசங்கரின் உடல் காசிமேடு மயானத்தில் தகனம்: குடும்பத்தினருக்கு ரூ5 லட்சம் உதவி

பிரிட்ஜில் மாட்டிறைச்சி வைத்த 11 பேரின் வீடுகள் இடிப்பு

ஹேக் செய்து விடுவார்கள்; தேர்தல்களில் மின்னணு எந்திரங்கள் வேண்டாம்: எலான் மஸ்க் பரபரப்பு டிவிட்