மழையால் பாதிக்கப்பட்ட ரோஜா மலர்களை அகற்றும் பணி தீவிரம்

ஊட்டி : மழையால் பாதிக்கப்பட்ட ரோஜா மலர்களை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.ஊட்டியில் உள்ள ரோஜா பூங்காவில் நான்காயிரம் வகைகளை கொண்ட 40 ஆயிரம் ரோஜா செடிகள் உள்ளன. இதில், பல்வேறு வண்ணங்களை கொண்ட அழகிய ரோஜா மலர்கள் பூத்துக் காணப்படும். இதனை காண நாள்தோறும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். பொதுவாக, முதல் சீசனான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அனைத்து செடிகளிலும் மலர்கள் பூத்து காணப்படும். இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்வார்கள்.

மேலும், ரோஜா கண்காட்சியும் நடத்தப்படும். அதன்பின், தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்கினால் பூங்காவில் உள்ள மலர்கள் அழுகி உதிர்ந்து விடும். அதன்பின், பூங்காவில் மலர்களை காண்பது அரிது. ஆனால், இம்முறை ஜூன் மாதம் மழை துவங்காத நிலையில் பூங்காவில் உள்ள செடிகளில் ரோஜா மலர்கள் காணப்பட்டது. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து சென்றனர்.

இந்நிலையில், கடந்த வாரம் பெய்த மழையின் காரணமாக ரோஜா பூங்காவில் உள்ள பெரும்பாலான செடிகளில் இருந்த மலர்கள் அழுகின. இது காண்பதற்கு அலங்கோலமாக காட்சியளித்த நிலையில், தற்போது இந்த அழகிய மலர்களை அகற்றும் பணியில் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் பூங்காவில் உள்ள அனைத்து மலர்களும் அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதேபோல், பல்வேறு பூங்காவில் உள்ள மலர் செடிகளும் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Related posts

கேரளாவில் இன்று மீண்டும் நில அதிர்வு: பொதுமக்கள் பீதி

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது

உளுந்தூர்பேட்டை அருகே மூதாட்டி வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் 6 பேர் கைது: 50 பவுன் நகை பறிமுதல்