யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க வனப்பகுதியில் தொட்டி அமைத்து தண்ணீர் நிரப்பும் வனத்துறையினர்


தேன்கனிக்கோட்டை: ஜவளகிரி வனப்பகுதியில் தொட்டி அமைத்து தண்ணீர் நிரப்பும் பணியை வனத்துறை மேற்கொண்டுள்ளனர். இதனால், தண்ணீர் தேடி யானைகள் ஊருக்குள் வருவது தடுக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வனக்கோட்டத்தில் தேன்கனிக்கோட்டை, ஜவளகிரி, அஞ்செட்டி, உரிகம், ராயக்கோட்டை, ஓசூர் வனச்கரகத்தில் கோடை வெயிலால் வனத்தில் செடி, கொடிகள் தீப்பற்றி எரிந்து நாசமடைந்து வருகிறது. கோடை வெயிலால் வனப்பகுதியில் உள்ள நீர்நிலைகளில் தண்ணீர் வற்றி விட்டதால், வனப்பகுதியில் வாழும் யானைகள், மான், காட்டு எருமைகள், பன்றிகள், மயில் உள்ளிட்ட விலங்குகள் உணவு, தண்ணீர் கிடைக்காமல் கிராமங்கள் நோக்கி படையெடுக்கின்றன. குறிப்பாக யானைகள் கூட்டம், அடிக்கடி விவசாய நிலங்களில் புகுந்து தக்காளி, பீன்ஸ், முட்டைகோஸ், வாழை உள்ளிட்ட பயிர்களை நாசம் செய்து வருகின்றன.

இதனையடுத்து, ஓசூர் வன கோட்ட உயிரின காப்பாளர் கார்த்திகேயினி மேற்பார்வையில், ஜவளகிரி வனச்சரக அலுவலர் அறிவழகன், தேவர்பெட்டா, உலிபண்டா, ஜவளகிரி ஆகிய பகுதிகளில், யானைகள் நடமாட்டம் உள்ள இடங்களில் தண்ணீர் தொட்டிகள் அமைத்து, மின்மோட்டார் மற்றும் சோலார் மின்மோட்டார்கள் மூலம் தொட்டிகளில் தண்ணீர் நிரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் யானைகள் குட்டிகளுடன் கூட்டமாக வந்து, தண்ணீர் குடித்து செல்லும் காட்சி அப்பகுதியில் அமைத்துள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. கர்நாடக மாநில எல்லையை ஒட்டி அமைந்துள்ள ஜவளகிரி வனப்பகுதியில், தொட்டிகள் அமைத்து தண்ணீர் நிரப்பி வருவதால், யானைகள் தண்ணீர் தேடி தேன்கனிக்கோட்டை வனப்பகுதி நோக்கி செல்வது தடுக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Related posts

திருவள்ளூர் காக்களூர் சிப்காட் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4-ஆக உயர்வு

வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் தொடங்கியது!!

தாய்ப்பால் விற்பனை.. 18 குழுக்கள் அமைத்து மாநிலம் முழுவதும் கண்காணிப்பு தீவிரம்: உணவு பாதுகாப்புத்துறை தகவல்