தமிழகம் முழுவதும் சோதனை போலீசாருக்கு 10 கட்டளைகள்: புதிய போலீஸ் அதிகாரிகள் அதிரடி உத்தரவு

சென்னை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு டிஜிபி, சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி ஆகியோர் புதிதாக பதவி ஏற்றதும் போலீசாருக்கு 10 கட்டகளைகளை பிறப்பித்துள்ளனர். அதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் ரவுடிகள், குற்றவாளிகளுக்கு எதிராக வேட்டை தொடங்கியுள்ளது. தமிழக டிஜிபி சைலேந்திரபாபு கடந்த ஜூன் 30ம் தேதியுடன் ஓய்வு பெற்றார். இதனால் புதிய டிஜிபியாக சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த சங்கர் ஜிவால் பதவி ஏற்றார். அதேபோல சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக இருந்த சங்கர் மாற்றப்பட்டு ஆவடி கமிஷனராக நியமிக்கப்பட்டார். அந்தப் பதவியில் அருண், நியமிக்கப்பட்டார். புதிதாக பதவி ஏற்ற இரு அதிகாரிகளும் கடந்த இரு நாட்களாக தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுவது, குற்றங்களை குறைப்பது குறித்து தீவிர ஆலோசனை நடத்தினர்.

அந்த ஆலோசனையைத் தொடர்ந்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அருண், சென்னை, தாம்பரம், ஆவடி தவிரமாநிலத்தில் உள்ள மற்ற போலீஸ் கமிஷனர்கள், மண்டல ஐஜிக்கள், சரக டிஐஜிக்கள், எஸ்பிக்களுக்கு ஒரு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில், டிஎஸ்பி மற்றும் உதவி கமிஷனர்களாக உள்ளவர்கள் பகல் நேர பணியுடன் நள்ளிரவு 2 மணி வரை பணியில் இருக்க வேண்டும். இன்ஸ்பெக்டர்கள் ஒரு நாள் விட்டு ஒரு நாள் இரவு பணிகளை நேற்று (3ம் தேதி) வரை கவனிக்க வேண்டும். ரவுடிகள் பட்டியலில் உள்ளவர்கள் ஜாமீனில் வெளியில் வந்திருந்தால் அவர்களை கண்காணித்து கைது செய்ய வேண்டும். மீண்டும் அவர்கள் குற்றங்களில் ஈடுபடாமல் இருக்க குற்றவியல் நடைமுறைச்சட்டம் 110 விதியின் கீழ் கைது செய்ய வேண்டும்.

பகல் மற்றும் இரவு நேரங்களில் கண்டிப்பாக வாகனச் சோதனை நடத்த வேண்டும். அப்போது குற்றப் பட்டியலில் உள்ளவர்களை கைது செய்ய வேண்டும். குடிபோதையில் வாகனம் ஓட்டுகிறவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். மதுவிலக்கு குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்ய வேண்டும். குறிப்பாக வட மாவட்டங்களில் மது விற்பனையை கண்டறிந்து கைது நடவடிக்கை எடுக்க வேண்டும். லாட்ஜ்கள், ஒட்டல்களில் சோதனை நடத்தி சரியான முகவரியை கொடுத்து தங்கியுள்ளார்களா என்பதை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். லாட்ஜ் உரிமையாளர்கள் அல்லது நிர்வாகிகளுக்கு உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்.

டாஸ்மாக் கடைகள் இரவு 10 மணிக்கு மேல் திறந்து இருக்கக் கூடாது. காலையில் 12 மணிக்கு முன் திறக்கக் கூடாது. சில்லறை விற்பனை செய்யக்கூடாது. உரிமம் இல்லாமல் பார் நடத்தினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த பாருக்கு சீல் வைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 10 கட்டளை களைபிறப்பித்துள்ளனர். அதில் ரோந்துப் பணிகள் மற்றும் வாகனச் சோதனைகள், இரவுப் பணிகளை நேற்று வரை செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இன்று முதல் பணிகள் மாற்றியமைக்கப்படும் என்றும் கூறியுள்ளனர். இதனால் மாநிலம் முழுவதும் கடந்த 4 நாட்களாக போலீசார் தீவிர வாகனச் சோதனைகளை நடத்தி பழைய குற்றவாளிகளை கைது செய்து வருகின்றனர். இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related posts

2018 தேர்தல் வேட்பு மனுவில் ரகசிய மகளின் பெயரை மறைத்த இம்ரான் கான்: உச்ச நீதிமன்றத்தில மேல்முறையீடு

காசா மக்களுக்கு உதவிகள் கிடைப்பதற்கு பகல் நேரத்தில் சண்டை நிறுத்தம்: இஸ்ரேல் அறிவிப்பு

காதலுக்கு வயது தடையில்லை 80 வயது தாத்தாவை காதலித்து மணந்த 23 வயது இளம்பெண்