பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்; தமிழ்நாட்டில் நிபா வைரஸ் பாதிப்பு யாருக்கும் இல்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

ஊட்டி: ‘தமிழ்நாட்டில் நிபா வைரஸ் பாதிப்பு யாருக்கும் இல்லை’ என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். நீலகிரி மாவட்டம் கூடலூர் அரசு மருத்துவமனை, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்ட நிலையில் ரூ.31 கோடியில் புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்த பேட்டி: தமிழ்நாட்டை பொறுத்தவரை மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு என ஏற்கனவே 19 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள் உள்ளன. இந்த அரசு பொறுப்பேற்றதற்கு பிறகு புதிதாக 19 மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைகள் அமைப்பதற்கும், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு இணையாக 6 மருத்துவமனைகள் அமைக்கவும் என 25 புதிய தலைமை மருத்துவமனைகள் அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்காக ரூ.1100 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன.

அண்டை மாநிலமான கேரளாவில் நிபா வைரஸ் தாக்கம் உள்ளது. ஆனால், தமிழகத்தில் யாருக்கும் பாதிப்பு இல்லை. இருப்பினும், முதல்வர் உத்தரவின்பேரில் தமிழ்நாடு- கேரளா எல்லையில் அமைந்துள்ள நீலகிரி, கோவை, திருப்பூர், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்ட எல்லைகளில் கேரளாவில் இருந்து வருபவர்களுக்கு காய்ச்சல் அறிகுறிகள் ஏதேனும் உள்ளதா? என சுகாதாரத்துறை மூலம் விரிவாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சோதனையில் காய்ச்சல் அறிகுறிகள் கண்டறியப்பட்டால் அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. எனவே பொதுமக்கள் பெரிய அளவில் அச்சம் கொள்ளத் தேவையில்லை.

தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் கட்டுப்பாட்டில் உள்ளது. கடந்த 9 மாதங்களில் 2.5 லட்சத்திற்கு மேற்பட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. ஜனவரி முதல் தற்போது வரை தமிழ்நாட்டில் 3 பேர் டெங்குவால் இறந்துள்ளனர். 2017ல்
ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டிருந்தனர். தற்போது தமிழ்நாடு முதல்வர் எடுத்துள்ள நடவடிக்கையால் டெங்கு பாதிப்புகள் மிகவும் கட்டுக்குள் உள்ளது. உள்ளாட்சி அமைப்புகளுடன் சேர்ந்து இதனை கட்டுப்படுத்துவது, மருந்து தெளிப்பது போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

Related posts

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் லண்டனில் பயிற்சி முடித்து சென்னை திரும்பிய மாணவர்களுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு..!!

உலகின் தலைசிறந்த நிறுவனங்களின் பட்டியலில், முதல் 100 இடங்களுக்குள் இந்தியாவைச் சேர்ந்த 4 நிறுவனங்கள்

பாக்கெட் சைஸ் அரசியல் சாசன புத்தகத்தின் விற்பனை அதிகரிப்பு: EBC தகவல்