தமிழ்நாட்டில் அதிகபட்சமாக ஈரோட்டில் 108 டிகிரி வெயில்: 14 மாவட்டங்களில் 100 டிகிரி சுட்டெரித்தது

சென்னை: தமிழ்நாட்டில் அதிகபட்சமாக நேற்று ஈரோட்டில் 108 டிகிரி வெயில் கொளுத்தியது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வறண்ட வானிலை நிலவும், அதனால் வட தமிழக உள் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும். அதனால் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசும் வாய்ப்புள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், குமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் நேற்றும் சில இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. குறிப்பாக அதிகபட்சமாக நேற்று ஈரோட்டில் 108 டிகிரி வெயில் கொளுத்தியது. திருப்பத்தூர், சேலம் 107 டிகிரி, கரூர் பரமத்தி, தர்மபுரி 105.8 டிகிரி, திருத்தணி, வேலூர் 104, திருச்சி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் 103 டிகிரி வெயில் நிலவியது. தஞ்சை, கோவையில் தலா 102 டிகிரி, மதுரை, பாளையங்கோட்டையில் 101 டிகிரி, 14 மாவட்டங்களில் 100 டிகிரி மற்றும் அதற்கும் மேல் வெயில் சுட்டெரித்தது. சென்னை மீனம்பாக்கத்தில் 98 டிகிரி, நுங்கம்பாக்கத்தில் 95.72 டிகிரி வெயில் கொளுத்தியது.

இந்நிலையில், தமிழக பகுதிகளின் மேல் வளி மண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. அதனால் 2 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும். 30, மே 1ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. பிற மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும். அத்துடன், 30ம் தேதி வரை தமிழக உள் மாவட்டங்களில் இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரும் வாய்ப்புள்ளது. வட தமிழக உள் மாவட்டங்களில் 5 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் முதல் 5 டிகிரி செல்சியஸ் அதிகமாகும் வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும். 30ம் தேதி வரை தமிழக உள் மாவட்டங்களில் இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரும் வாய்ப்புள்ளது.

Related posts

இந்தூர் மக்களவை தொகுதியில் ‘நோட்டா’வுக்கு ஆதரவும் எதிர்ப்பும்…

தெலங்கானாவில் நேற்றிரவு அரசு பேருந்தில் ராகுல் பயணம்: வாக்காளர்களிடம் வாக்கு சேகரிப்பு

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு தலைமைத் தேர்தல் ஆணையம் கண்டனம்..!!