தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தின் ஒருங்கிணைந்த இணையதளம்: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!!

சென்னை: தமிழ்ப் பரப்புரைக் கழகத் திட்டத்தின் கீழ், தமிழ் கற்பிக்கும் தன்னார்வலர்களுக்கான ஆசிரியர் பட்டயப் பயிற்சி பதிவு செய்வதற்கான இணைய இணைப்பு மற்றும் தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தின் ஒருங்கிணைந்த இணையதளத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் தமிழ்ப் பரப்புரைக் கழகத் திட்டத்தின் கீழ், தமிழ் கற்பிக்கும் தன்னார்வலர்களுக்கான ஆசிரியர் பட்டயப் பயிற்சியில் பதிவு செய்வதற்கான இணைய இணைப்பு மற்றும் தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தின் ஒருங்கிணைந்த இணையதளத்தினையும் தொடங்கி வைத்தார்.

தமிழ்ப் பரப்புரைக் கழகத் திட்டத்தின் கீழ், தமிழ் கற்பிக்கும் தன்னார்வலர்களுக்கான ஆசிரியர் பட்டயப் பயிற்சியில் பதிவு செய்வதற்கான இணைய இணைப்பு தொடங்கி வைத்தல்

அயலக மாணவர்களின் தமிழ்க்கற்றல் கற்பித்தலுக்காக தமிழ்ப் பரப்புரைக் கழகத்தை செப்டம்பர் 2022-இல் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் பணிகளைத் தமிழ் இணையக் கல்விக்கழகம் செயல்படுத்தி வருகிறது. இதில் திறன்கள் அடிப்படையிலான பாடப்புத்தகங்கள், கற்றல் துணைக்கருவிகள், கட்டணமில்லா இணையவழி வகுப்புகள் முதலான பல வசதிகள் 34 நாடுகளிலும் 16 இந்திய மாநிலங்களிலும் தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் 160 தொடர்பு மையங்கள் வாயிலாக வழங்கப்பட்டு வருகின்றன.

இந்தத் தொடர்பு மையங்களில், மாணவர்களுக்குத் தன்னார்வலர்கள் தமிழ் பயிற்றுவித்து வருகின்றனர். தமிழ் மொழியின் அடிப்படைகளையும் முறையான கற்பித்தல் பயிற்சியையும் இவர்களுக்கு வழங்கினால் தமிழ் மொழிக் கற்பித்தலை இன்னும் மேம்படுத்த முடியும் எனப் பல அயலகத் தமிழ்ச்சங்கங்களும் பள்ளிகளும் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில், தமிழ் பரப்புரைக்கழகத்தின் மற்றொரு முக்கியமான முன்னெடுப்பாகத் தமிழ் கற்பிக்கும் தன்னார்வலர்களுக்கான இணையவழி ஓராண்டு ஆசிரியர் பட்டயப்பயிற்சி வழங்கத் திட்டமிடப்பட்டது.

இந்தப் பட்டயப்பயிற்சியைத் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்துடன் இணைந்து வழங்க 2023 ஜனவரி 12ம் தேதி நடைபெற்ற அயலகத் தமிழர் தினவிழாவில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. தற்போது இந்தப் பட்டயப்பயிற்சியைத் தொடங்குவதற்கான பணிகள் முடிவடைந்து, இந்தக் கல்வித்திட்டத்தில் பதிவு செய்வதற்கான இணைய இணைப்பை (<http://tva.reg.payil.app/>) மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்றைய தினம் தொடங்கி வைத்தார். மேலும், இப்பட்டயப் பயிற்சி குறித்த குறிப்பேட்டினை தமிழ்நாடு முதலமைச்சர் வெளியிட, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பெற்றுக்கொண்டார்.

தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தின் ஒருங்கிணைந்த இணையதளத்தினை தொடங்கி வைத்தல்

எல்காட் நிறுவனம் தகவல் தொழில்நுட்ப வன்பொருள் கொள்முதல், தகவல் தொழில்நுட்ப பூங்கா மேலாண்மை, தகவல் தொடர்பு உள்கட்டமைப்பு சேவைகள், ஆதார் பதிவு சேவைகள், மாநில தரவு மையத்தில் மென்பொருள் பதிவேற்றம் மற்றும் தரவு பதிவேற்றம் சேவைகளுக்கான முகமை ஆகும். எல்காட் நிறுவனம் மின்னாளுகை சேவைகளின் முதுகெலும்பாக இருக்கும் மாநில தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு சேவைகளையும் வழங்கி வருகிறது. தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களுக்கு வழித்தட அனுமதி வழங்குவதற்கான ஒரு இணையதளத்தை எல்காட் நிறுவனம் உருவாக்கியுள்ளது.

எல்காட் நிறுவனத்திற்கும், அரசுத் துறைகளுக்கும், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் சேவைகளை வழங்குவதில் ஈடுபட்டுள்ள பிற பங்குதாரர்களுக்கும் இடையே வெளிப்படையான, விரைவான மற்றும் திறமையான முறையில் சேவைகளை வழங்குவதற்கு தானியங்கு நெறிப்படுத்தப்பட்ட தொடர்புகளை (Automated streamlined interactions) வழங்கும் ஒருங்கிணைந்த இணையதளத்தை (<https://erp.elcot.in/>) தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

இந்த ஒருங்கிணைந்த இணையதளத்தின் வாயிலாக, IT/ITeS நிறுவனங்கள் நிலம் மற்றும் இட ஒதுக்கீடு, FSI மற்றும் அடமானக் கடனைப் பெற NOC வழங்குதல் ஆகியவற்றுக்கு விண்ணப்பிக்கவும், அரசுத் துறைகள் தகவல் தொழில்நுட்ப வன்பொருள் தயாரிப்புகளை விலை ஒப்பந்தம் மற்றும் குறிப்பிட்ட கொள்முதல் அடிப்படையில் வாங்கிடவும், தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்கள் புதிய ஒப்புதல்கள் மற்றும் ஏற்கனவே உள்ள தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பை முறைப்படுத்துவதற்கு விண்ணப்பிக்கவும், நிரந்தரப் பதிவு மையங்கள் மூலம் குடிமக்கள் ஆதார் பதிவு மற்றும் புதுப்பித்தல் சேவைகளைப் பெறவும், அரசு துறைகள் தங்கள் தரவு பதிவேற்ற தேவைகளுக்கு விண்ணப்பிக்கவும் வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

எல்காட் ஒருங்கிணைந்த இணையதளம் கணினிகள், மடிக்கணினிகள், (லேப்டாப்கள்), கையடக்கக் கணினிகள் (டேப்லெட்டுகள்) மற்றும் திறன்பேசிகள் (ஸ்மார்ட் போன்கள்) போன்ற அனைத்து சாதனங்களுடனும் இணக்கமானது.

தகவல் தொழில்நுட்ப பூங்கா மேலாண்மை, வன்பொருள் கொள்முதல், தரவு பதிவேற்ற தேவைகள், வழித்தட அனுமதி வழங்குதல், தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பை முறைப்படுத்துதல், ஆதார் பதிவு மற்றும் புதுப்பித்தல் சேவைகள் ஆகியவற்றுக்கான தகவல் பலகைகள் மூலம் இந்த இணையதளம் உடனடி மற்றும் பயனுள்ள சேவை வழங்கலை உறுதிப்படுத்தும்.

இந்நிகழ்ச்சியில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறைச் செயலாளர் திரு.ஜெ. குமரகுருபரன், இ.ஆ.ப., தமிழ்நாடு மின்னணு நிறுவன மேலாண்மை இயக்குநர் டாக்டர் எஸ். அனீஷ் சேகர், இ.ஆ.ப., தமிழ்நாடு மின்னணு நிறுவன செயல் இயக்குநர் திரு. எஸ். அருண் ராஜ், இ.ஆ.ப., தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் முனைவர் பி.சி. நாகசுப்பிரமணி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

இசுலாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது பக்ரீத் வாழ்த்துகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சமூக நீதிக்கு எதிரான நீட் தேர்வை ஆதரிப்பதை ஒன்றிய அரசு நிறுத்த வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

பீகாரில் கொசாய்மட் என்ற இடத்தில் கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து