தமிழகத்தில் சுட்டெரிக்கும் வெயில் அடுத்த 4 நாளில் 5 டிகிரி அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தில் வெயில் வெளுத்து வாங்கி வரும் நிலையில், அடுத்த 4 நாட்களுக்கு 5 டிகிரி வரை படிப்படியாக வெயில் அதிகரிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழகத்தில் கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பதிவாகும் வெப்பத்தின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெயில் இப்போதே மண்டையை பிளக்கும் அளவுக்கு உள்ளது. பகலில் மக்கள் வெளியில் நடமாட முடியாத அளவுக்கு வெயில் தாக்கம் உக்கிரமடைந்துள்ளது.

வீடுகளில் ஏசி இல்லாமல் இருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வெப்பத்தையே தாங்க முடியாத நிலையில் இன்னும் வெயில் தாக்கம் அடுத்த 4 நாட்களுக்கு படிப்படியாக அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவி உள்ளது. குறிப்பாக சேலத்தில் அதிகபட்சமாக 101.6 பாரன்ஹீட் வெப்ப நிலை பதிவாகி உள்ளது என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, இன்று முதல் மார்ச் 30ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று தெரிவித்துள்ளது. அதேநேரம், வரும் 28ம் தேதி வரை, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை அடுத்த 4 நாட்களுக்கு 5 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசவுகரியம் ஏற்படலாம் என்றும் தெரிவித்துள்ளது.

Related posts

ஆட்டத்திறன் மீதும் நம்பிக்கை கொண்டிருந்தால் எதுவும் எளிதே: இந்தியா – பாகிஸ்தான் போட்டி குறித்து பேசிய பாபர் அசாம்

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க 24 மணிநேரம் பக்தர்கள் காத்திருப்பு

தாம்பரம் அருகே மதுபோதையில் தாறுமாறாக கார் ஓட்டிய போலீஸ்காரர்: வீடியோ வைரலால் பரபரப்பு