ஒரே வாக்குச்சாவடியில் வாக்களித்த போது சுவாரஸ்யம்: கட்டியணைத்து அன்பை பரிமாறிய தமிழிசை- பிரேமலதா

சென்னை: இந்தியாவில் 18வது நாடாளுமன்ற தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு இன்று காலை தொடங்கியது. இதில் தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் நடைபெற்று வருகிறது. தேர்தல் ஆணையத்தால் அனுமதிக்கப்பட்ட வாக்காளர்கள் தங்களது ஆவணங்களோடு, தங்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு சென்று வாக்கு செலுத்தி வருகின்றனர். இந்தத் தேர்தலில் பொதுமக்களுடன், முக்கியத் தலைவர்களும் பிரபலங்களும் வாக்களித்து வருகிறார்கள். முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், தென் சென்னை தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறார்.

தமிழிசை சவுந்தரராஜன் வழக்கம்போல் இந்த முறையும், சாலிகிராமத்தில் உள்ள காவேரி உயர்நிலைப்பள்ளியில் தனது வாக்கை பதிவு செய்தார். அதேபோன்று, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், அவரது மகன்கள் விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் ஆகியோரும் சாலிகிராமத்தில் உள்ள அதே வாக்குச்சாவடியில் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். சென்னை சாலிகிராமத்தில் ஒரே வாக்குச்சாவடியில் வாக்களித்த பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜனும், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்தும் நேருக்கு நேர் சந்தித்து கைகுலுக்கி மகிழ்ந்து பரஸ்பரம் வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர்.

தேமுதிக சார்பில் விருதுநகர் தொகுதியில் விஜயகாந்த் மூத்த மகன் விஜய பிரபாகரன், முரசு சின்னத்தில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் எதிர் எதிர் அணியில் உள்ள நிலையில் தமிழிசை சவுந்தரராஜன், பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர், ஓட்டு போட வந்த போது நேருக்கு நேர் சந்தித்துக் கொண்ட நிலையில் இருவரும் கட்டியணைத்து அன்பை பரிமாறிக்கொண்டனர். மேலும் விஜயகாந்த் குடும்பத்துடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட தமிழிசை, ‘‘ஒரு வேட்பாளராக பெருமை மிகு வாக்காளரை சந்தித்ததில் மகிழ்ச்சி’’ என்று கூறினார்.

Related posts

புதுக்கோட்டை அருகே மின்னல் தாக்கி இளைஞர் பலி..!!

கொடைக்கானலுக்குச் செல்ல உள்ளூர் மக்களும் ஒரு முறை இ-பாஸ் எடுப்பது கட்டாயம்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

‘ஏழைகளுக்கான திட்டங்களால் மோடிக்கு வயிற்றெரிச்சல்’: கே.பாலகிருஷ்ணன் கண்டனம்