தாம்பரம் மாநகராட்சியில் சாலைகளில் சுற்றித்திரிந்த 48 மாடுகள் பிடிபட்டன: உரிமையாளர்களுக்கு ரூ.96 ஆயிரம் அபராதம்

தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்துகின்ற வகையில் சுற்றித் திரியும் மாடுகளின் உரிமையாளர்கள் மீது அபராதத்துடன் கூடிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதாவது, சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகள் பிடிக்கப்பட்டு அதன் உரிமையாளர்களுக்கு பிடிக்கப்பட்ட மாடுகளை 2 நாட்களுக்கு பராமரிக்கும் செலவினத்துடன் அபராத தொகையாக நாள் ஒன்றிற்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது.

இந்நிலையில், தாம்பரம் மாநகராட்சியின் 5 மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த மாதம் 23ம் தேதி முதல் கடந்த 1ம் தேதி வரை சாலையில் சுற்றித் திரிந்த 48 மாடுகள் மாநகராட்சி சுகாதாரத்துறையினரால் பிடிக்கப்பட்டு, அதன் உரிமையாளர்களுக்கு ரூ.96 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. டிபட்ட மாடுகளை விடுவித்து எடுத்து செல்ல மாடுகளின் உரிமையாளர்கள் நகர்நல அலுவலர், சுகாதார ஆய்வாளர் மற்றும் மாடு வளர்ப்பவர்களின் வீடு அல்லது மாடு பிடிபட்ட எல்லைக்குட்பட்ட காவல் ஆய்வாளரின் பரிந்துரை கையொப்பத்தை பெற்று சமர்ப்பித்து தங்களுடைய மாடுகளை விடுவித்துக்கொள்ள வேண்டும்.

மேலும், தாம்பரம் மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட சாலைகள் மற்றும் வீதிகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கொண்டமங்களம் ஊராட்சி புதிய மாட்டு கொட்டகையில் ஒப்படைக்கப்படும். மாடு உரிமையாளர்கள் மாடுகளை திரும்ப பெற நாள் ஒன்றிற்கு ரூ.2 ஆயிரம், தீவண செலவு ரூ.250 என மொத்தம் ரூ.2,250 அபராதம் கட்டணம் செலுத்த வேண்டும். மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மாடுகளின் உரிமையாளர்கள், தங்கள் மாடுகளை பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக தெருக்கள் மற்றும் சாலைகளில் சுற்றித்திரிய விடாமல் முறையாக பராமரித்துக்கொள்ள வேண்டும், அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

Related posts

மின் கம்பி அறுந்து 7 ரயில்கள் நடுவழியில் நிறுத்தம்

அமித்ஷா நாளை மதுரை வருகை

தங்கையிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதை கண்டித்ததால் பள்ளி மாணவன் கழுத்தறுத்து கொலை: 17 வயது சிறுவன் வெறிச்செயல்