தாம்பரம் முத்துரங்கம் பூங்காவில் புதிய உடற்பயிற்சி கூடம் யோகா மையம் திறப்பு

தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சி, 4வது மண்டலம், 49வது வார்டுக்கு உட்பட்ட முத்துரங்கம் பூங்காவில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் புதிய உடற்பயிற்சி கூடம், ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் புதிய யோகா மையம் ஆகியவை கட்டப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கும் விழா நேற்று மண்டல குழு தலைவர் டி.காமராஜ் தலைமையில் நடந்தது. திமுக நாடாளுமன்ற குழு தலைவரும், பெரும்புதூர் எம்பியுமான டி.ஆர்.பாலு, தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா ஆகியோர் கலந்துகொண்டு புதிய உடற்பயிற்சி கூடம் மற்றும் புதிய யோகா மையம் ஆகியவற்றை திறந்து வைத்தனர்.

தொடர்ந்து, 49வது வார்டு, பகவத்சிங் தெருவில் ரூ.9.50 லட்சம் செலவில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், 52வது வார்டு, கன்னடபாளையம் பகுதியில் ரூ.9.50 லட்சம் செலவில் கட்டப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு டி.ஆர்.பாலு எம்.பி, எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா ஆகியோர் திறந்து வைத்தனர். பின்னர் 49வது வார்டு, அண்ணா தெருவில் நடந்த கலைஞர் நூற்றாண்டு விழா தெருமுனை கூட்டத்தில் கலந்துகொண்டு, ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன், ஆணையர் அழகுமீனா, துணை மேயர் கோ.காமராஜ், மண்டல குழு தலைவர் எஸ்.இந்திரன், மாமன்ற உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள், மாநகராட்சி ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

நீலகிரி மலை ரயிலுக்கு 125 வயது: கேக் வெட்டி கொண்டாட்டம்

டூவீலருக்கு தவணை தொகை செலுத்தாத விவகாரம்; நடுரோட்டில் இளம்பெண் மானபங்கம்: தனியார் நிறுவன அதிகாரி மீது வழக்கு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் புதிய இலச்சினை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்