தாம்பரம் மாநகராட்சி குப்பை கிடங்கில் பயோ மைனிங் முறையில் திடக்கழிவுகளை அகற்ற ₹35.99 கோடிக்கு நிர்வாக அனுமதி: தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை: தூய்மை இந்தியா 2.0 திட்டத்தின் கீழ், ஒன்றிய, மாநில அரசுகள் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி பங்களிப்புடன் தாம்பரம் மாநகராட்சி குப்பை கிடங்கில் உள்ள திடக்கழிவுகளை பயோ மைனிங் முறையில் அகற்ற ₹35.99 கோடிக்கு நிர்வாக அனுமதியளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தாம்பரம், பல்லாவரம், அனகாபுத்தூர், பம்மல், செம்பாக்கம் ஆகிய நகராட்சிகளும், பெருங்களத்தூர், பீர்க்கன்காரணை, மாடம்பாக்கம், சிட்லபாக்கம், திருநீர்மலை ஆகிய பேரூராட்சிகளும் ஒன்றாக இணைக்கப்பட்டு கடந்த 2021ம் ஆண்டு தாம்பரம் மாநகராட்சியாக உருவாக்கப்பட்டது. இதில், 5 மண்டலங்கள் மற்றும் 70 வார்டுகள் உள்ளன. இங்கு 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

தற்போது, மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள வீடுகளில் இருந்து தினசரி சேகரிக்கப்படும் குப்பை, கழிவுகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தூய்மை பணியாளர்கள் தரம் பிரித்து சேகரித்து வருகின்றனர். இவ்வாறு பெறப்படும் குப்பை கழிவுகள் அனைத்தும் தாம்பரம் மற்றும் கிழக்கு தாம்பரம் பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து தரம் பிரிப்பது, குப்பைகளில் இருந்து உரம் தயாரிப்பது போன்ற பணிகளை மாநகராட்சி அதிகாரிகள் செய்து வருகின்றனர். இது போன்ற தூய்மை பணிகளுக்காக தாம்பரம் மாநகராட்சியில் நிரந்தர பணியாளர்களாக 513 பேரும், ஒப்பந்த அடிப்படையில் 1625 பேரும் என மொத்தம் 2138 பேர் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது, தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து தினமும் சேகரிக்கப்படும் பல டன் குப்பை கழிவுகள் மாடம்பாக்கம், விசேஷபுரம், சீனிவாசபுரம், கன்னடபாளையம் பகுதியிலுள்ள மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு பின்னர் அங்கிருந்து மறைமலைநகர் அருகே உள்ள ஆப்பூர் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது.

பல ஆண்டுகளாக பல்வேறு பகுதிகளில் இருந்து சேகரித்து கொண்டுவரப்பட்டு கன்னடபாளையம் பகுதியில் கொட்டப்பட்ட குப்பை கழிவுகள் மலை போல் குவிந்து கிடந்ததால் அப்பகுதி முழுவதும் கடுமையான துர்நாற்றம் வீசுவதுடன், கொசு உற்பத்தி அதிகரித்து தொற்றுநோய் பரவும் அபாயம் இருப்பதுடன், நிலத்தடி நீர் பாதிப்பு ஏற்படுவது என புகார் எழுந்தது. அதோடு அங்கு குப்பை கொட்டக்கூடாது எனவும் அங்குள்ள குப்பைகளை அகற்ற வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுத்தனர்.
இதனை தொடர்ந்து குப்பைமேடுகளாக இருந்த பகுதி பயோ மைனிங் முறையில் பல கோடி செலவு செய்து குப்பை முழுமையாக அகற்றப்பட்டது. பின்னர் தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சேகரித்துக் கொண்டு வரப்படும் குப்பை கழிவுகள் கன்னடபாளையம் குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு அவை உடனடியாக அகற்றப்படாததால் மீண்டும் மலை போல் குப்பை தேங்கி நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் மீண்டும் குப்பை கிடங்கில் உள்ள குப்பை கழிவுகளை நிரந்தரமாக அகற்ற வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் சார்பில் தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகளிடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் அதே பகுதியில் குப்பை கொட்டி வந்ததால் கடந்த மாதம் அப்பகுதி பொதுமக்கள் அங்கு வந்த குப்பை வண்டிகளை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் நடந்த பேச்சுவார்த்தைக்கு பின்பு 4வது மண்டலத்துக்குட்பட்ட பகுதிகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பை கழிவுகளை மட்டுமே அங்கு கொட்டப்படும் என தெரிவிக்கப்பட்டு அதிலிருந்து 4வது மண்டலத்துக்குட்பட்ட பகுதிகளில் இருந்து சேகரித்து கொண்டுவரப்படும் குப்பைக் கழிவுகளை மட்டுமே கொட்டி வருகின்றனர்.

இருப்பினும் தாம்பரம் மாநகராட்சி உடனடியாக அங்கு குவிந்துள்ள குப்பை மலையை அகற்ற வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், தாம்பரம் மாநகராட்சியில் உள்ள ஆப்பூர் குப்பை கிடங்கில் உள்ள திடக்கழிவுகளை அகற்ற ₹35.99 கோடிக்கு நிர்வாக அனுமதியளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பாதவது:
தூய்மை இந்தியா திட்டத்தின் தொடர்ச்சியாக, தூய்மை பழக்க வழக்கங்களை நீடித்து நிலைநிறுத்தும் பொருட்டு 2021ம் ஆண்டு அக்.1ம் தேதி, தூய்மை இந்தியா திட்டம் (நகர்ப்புரம்) 2.0 தொடங்கப்பட்டுள்ளது. அனைத்து நகரங்களையும் தூய்மையாகவும் மற்றும் குப்பை இல்லாத நகரங்களாகவும், திறந்தவெளியில் மலம் கழித்தலற்ற நகரங்களாகவும் திட்டமிடப்பட்டது.
மேலும், 100 சதவீதம் திடக்கழிவுகளை அறிவியல் முறையில் தீர்வு செய்தல், உருவாகும் இடத்திலேயே தரம் பிரித்தல், கட்டுமானம் மற்றும் இடிப்பு கழிவுகளை திறம்பட மேலாண்மை செய்தல், நெகிழி கழிவு மேலாண்மை மற்றும் அனைத்து தேக்கத்திடக் கழிவுகள் கொட்டும் இடங்களையும் சரிசெய்வதே தூய்மை இந்தியா திட்டத்தின் முதன்மையான நோக்கங்களாகும்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் தேங்கியுள்ள திடக்கழிவுகளை உயிரியல் அகழ்ந்தெடுத்தல் (பயோ மைனிங் முறையில்), சுற்றுச்சூழலுக்கு இணக்கமான வகையில் முழுமையாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அரசு, மீட்டெடுக்கப்பட்ட நிலத்தின் ஒரு பகுதியை நிலத்தின் தன்மைக்கேற்ப நகர்வனங்களாகவோ, பூங்காக்களாகவோ மாற்ற உறுதி பூண்டுள்ளது.
அதனடிப்படையில், தாம்பரம் மாநகராட்சியில் உள்ள ஆப்பூர் குப்பை கிடங்கில் 10 ஆண்டுகளுக்கு மேலுள்ள பழைய திட கழிவுகளை உயிரி அகழாய்வு முறையில் அகற்ற, ₹35.99 கோடி மதிப்பீட்டில் பணி மேற்கொள்ளவும் மற்றும் கோவை மாநகராட்சி வெள்ளலூர் குப்பை கிடங்கில் பத்தாண்டுகளுக்கு மேலுள்ள பழைய திட கழிவுகளை உயிரி அகழாய்வு முறையில் அகற்ற, ₹58.54 கோடி மதிப்பீட்டில் பணி மேற்கொள்ளவும் மொத்தம் ₹94.53 கோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிர்வாக அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

இந்த திட்டங்களை செயல்படுத்துவதால் தாம்பரம் மற்றும் கோவை மாநகராட்சிகளை தூய்மையாகவும், குப்பை இல்லா நகரமாகவும் மாற்றலாம். இதன் மூலம் பசுமை வெளிகள், பூங்காக்கள், அந்நகர மக்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கான வாய்ப்புகளை மேம்படுத்தவும் வழிவகுக்கும். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

கர்நாடக மாநிலத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு

சுற்றுலா வாகனம் ஆற்றில் கவிழ்ந்ததில் உயிரிழந்தோருக்கு குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு

தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி 40 தொகுதிகளில் வெற்றி பெற்றதற்கு காரணம் முதலமைச்சர் ஸ்டாலின்: திருமாவளவன் பேச்சு