செங்கோல் அரசாட்சியின் அடையாளம்: தருமபுரம் ஆதீனம் பேட்டி

சென்னை: செங்கோல் அரசாட்சியின் அடையாளம் என்று தர்மபுரம் ஆதீனம் ல மாசிலாமணி தேசிக ஞானசம்பந்தம் கூறினார். டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்புவிழா இன்று நடக்க இருக்கிறது. அதில் கலந்து கொள்வதற்காக, தருமபுரம் ஆதீனம் தலைமையில் 57 ஆதீனங்கள் நேற்று காலை 11:30 மணி அளவில் சென்னை விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா தனி விமானத்தில் டெல்லி புறப்பட்டு சென்றனர். அதைப்போல் திருவாவடுதுறை ஆதீனம் தலைமையில் மற்றொரு தனி விமானத்தில் மேலும் சில ஆதீனங்கள் நேற்று பகல் 11:50 மணிக்கு டெல்லி புறப்பட்டு சென்றனர். புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் கலந்துகொள்ள டெல்லி செல்வதற்காக தருமபுரம் ஆதீனம், ல மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் வந்தார். அப்போது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

சென்னை விமான நிலையத்தில் தருமபுரம் ஆதீனம் அளித்த பேட்டி: நாட்டில் 300 ஆண்டுகளுக்கு முன்பாக தர்மபுரம் ஆதீனம் சார்பிலே, காசியிலே இருந்த ஆளுமைக்கு, இங்கிருந்து குமரகுருபரரை சிங்கத்தின் மீது அமர வைத்து அரசவைக்கு அனுப்பிவைத்தோம். இப்போது மீண்டும் தவராஜசிங்கமான மோடியை, புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு அனுப்புவதற்காக, இப்போது நாங்கள் செல்கிறோம். அவருடைய பணியில் இந்த நாடு மேலும் செம்மையாக அடைந்து, இது புண்ணிய பூமி என்பதை நிரூபிக்கும் விதத்தில், அந்த நாடாளுமன்ற கட்டிடம் திகழும். வள்ளுவர், செங்கோலை பற்றி கூறி இருக்கிறார். செங்கோலில் இருக்கும் நந்தி தர்மதேவதை. தர்மம் என்பது எல்லா மதத்திற்கும், எல்லா சமயத்திற்கும் பொதுவானது தான் தர்மம். செங்கோல் என்பது எந்த ஒரு மதத்தின் அடையாளமும் அல்ல.

அது அரசாட்சி செய்யும் மன்னர்களின் அடையாளம். இப்போது நமது நாட்டின் அரசராக பாரத பிரதமர் மோடி இருப்பதால், அவருக்கு இந்த செங்கோலை வழங்குகிறோம். செங்கோல் ஒரு சமயம் சார்ந்தது என்றால், நம் நாட்டின் சின்னமான அசோக சக்கரமும், ஒரு சமயம் சார்ந்ததாகும். நமது நாடு ஒரு புண்ணியபூமி. எல்லா சமயத்தவருக்கும் இடம் கொடுத்த ஒரு பூமி. புத்தம் இங்கு தான் தோன்றியது. ஆதீனங்கள் சார்பில், வெள்ளியில் செய்யப்பட்டு, தங்கம் முலாம் பூசிய தாமரை மலரை, பிரதமருக்கு பரிசாக வழங்க உள்ளோம். அதோடு அவருக்கு நினைவுச் சின்னமும் ருத்ராட்ச மாலையும் அணிவிப்போம். செங்கோல் ஆதீனம் என்று, ஒரு ஆதீனம் இருக்கிறது. இவ்வாறு தர்மபுரம் ஆதீனம் கூறினார்.

Related posts

காலி இடத்தை சுத்தம் செய்யும்போது குப்பையில் இருந்த பாம்பு கடித்ததில் பெண் உயிரிழப்பு!

தமிழகத்தில் மதியம் 1மணி வரை 8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுப்பு

புதிய பிராட்வே பேருந்து நிலைய மாதிரி படம் வெளியீடு!!