கொடைக்கானலில் நாளை தொடங்குகிறது கோடை விழா: மலர்களின் அலங்காரத்தில் மயக்குகிறாள் மலைகளின் இளவரசி

கொடைக்கானல்: மலைகளின் இளவரசியாம் கொடைக்கானலில் நாளை தொடங்கும் கோடை விழாவை முன்னிட்டு, பிரையண்ட் பூங்காவில் பிரமாண்ட மலர்க்கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு கோடி மலர்கள் பூக்கும் இந்த கண்காட்சியை சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் மலைகளின் இளவரசி என அழைக்கப்படுகிறது. இங்கு ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் காலமாகும். குறிப்பாக மே மாதத்தில் சீசன் களைகட்டும். இந்த சீசனை அனுபவிக்க சுற்றுலாப் பயணிகள் குவிவார்கள். இவர்களை கவரும் விதமாக, அரசு துறை சார்பில் மலர்க்கண்காட்சி விழா, கோடை விழா, விளையாட்டு விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும்.

பிரையண்ட் பூங்காவில் மலர்க்கண்காட்சி
கொடைக்கானல் கோடை விழாவின் முக்கிய அம்சம் மலர் கண்காட்சியாகும். இது நகரில் உள்ள பிரையண்ட் பூங்காவில் நடைபெறும். இந்த கண்காட்சியை காண தமிழகம் மட்டுமல்லாமல், பல்வேறு மாநிலங்களிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலுக்கு வருவார்கள். இந்தாண்டுக்கான 60வது மலர்க்கண்காட்சி பிரையண்ட் பூங்காவில் நாளை (மே 26) தொடங்குகிறது. இதற்கான ஏற்பாடுகளை தோட்டக்கலைத்துறை செய்துள்ளது. வழக்கமாக 2 தினங்கள் மட்டுமே மலர்க்கண்காட்சி நடைபெறும். ஆனால், இந்த ஆண்டு 26ம் தேதி தொடங்கி, 28ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெறும். மலர் கண்காட்சியை முன்னிட்டு தோட்டக்கலைத்துறை சார்பில் பல்வேறு போட்டிகள் நடைபெறுகின்றன. சிறந்த மலர், காய்கறி தோட்டங்கள், சிறந்த பழ தோட்டங்கள் ஆகியவற்றை பராமரிப்பதற்காக பரிசுகள் வழங்கப்படும். இவற்றிற்கான போட்டிகளை தோட்டக்கலைத் துறை நடத்துகிறது.

இதில் கலந்து கொள்ள பராமரிப்பவர்கள் தோட்டக்கலைத்துறையில் முன்பதிவு செய்ய வேண்டும். தற்போது வரை 26 தோட்டங்களுக்கான முன்பதிவுகள் செய்யப்பட்டுள்ளன. அதேபோல தனியார் மற்றும் அரசு துறையினர் பராமரிக்கும் மலர் தோட்டங்களும் இந்த போட்டிகளில் கலந்து கொண்டு பரிசு பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த தோட்டங்களை தோட்டக்கலைத்துறை குழு நேரடியாக பார்வையிட்டு, சிறந்த தோட்டங்களை பராமரிப்பவர்கள் தேர்வு செய்யப்பட்டு, பரிசுகள் வழங்கப்படும். இதேபோல, பூங்காவில் 37 காட்சி அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு நான்கு மலர் உருவங்கள், பல லட்சம் கார்னேசன் மலர்களில் அமைக்கப்பட்டிருந்தன. இந்த ஆண்டு கூடுதலான மலர் உருவங்கள் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. காய்கறிகளிலும் பல உருவங்கள் அமைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என பிரையண்ட் பூங்கா மேலாளர் சிவபாலன் தெரிவித்துள்ளார்.

கோடி மலர்கள் பூக்கும்
மலர் கண்காட்சிக்காக கடந்த ஆண்டு நவம்பரில் 20 ஏக்கர் பரப்பளவு கொண்ட பிரையண்ட் பூங்காவில் முதற்கட்ட மலர் நாற்றுக்கள் நடும் பணி நடந்தது. ஜனவரியில் இரண்டாம் கட்ட மலர் நாற்றுக்கள் நடப்பட்டது. அப்போது கொல்கத்தாவில் இருந்து வரவழைக்கப்பட்ட 5 ஆயிரம் வீரிய ஒட்டுரக டேலியா நாற்றுக்கள் நடப்பட்டன. 10 வண்ணங்களில் பூக்கும் விதமாக இந்த டேலியா நாற்றுகள் நடப்பட்டு தற்போது பூத்துக் குலுங்குகின்றன. பிப்ரவரியில் 3ம் கட்ட மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டது. சிறப்பாக நெதர்லாந்து நாட்டு லில்லியம் மலர்கள் 5 வண்ணங்களில் பூக்கும் விதமாக நடப்பட்டுள்ளது. சுமார் ஒன்றரை லட்சம் புதிய மலர் நாற்றுக்கள் மூன்று கட்டங்களாக இந்த மலர் கண்காட்சி விழாவிற்காகவே நடப்பட்டுள்ளது. சால்வியா, டெல்பினியம், காலண்டூலா, பேன்சி, மேரி கோல்ட், டேலியா, அஷ்டமேரியா, பெஹோனியா, பால்சம், லில்லியம், ஸ்டார் பிளக்ஸ், ஜினியா, ஆஸ்டர் கஜானியா, பாப்பி, ஸ்வீட் வில்லியம், ஸ்டாட்டிஸ் உள்ளிட்ட இந்த பூக்கள் அனைத்தும் தற்போது பூக்கத் தொடங்கியுள்ளன. வரும் நாட்களில் சுமார் ஒரு கோடி மலர்கள் இந்த பூங்காவில் பூத்துக் குலுங்கும். சுற்றுலாப் பயணிகளை வசீகரிக்கும் வகையில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

உதவ நாங்க இருக்கோம்…
கோடை விழா ப‌ல்வேறு க‌லை நிக‌ழ்ச்சிக‌ளுட‌ன் ஜூன் 2ம் தேதி வரை 8 நாட்கள் கோடை விழா நடைபெறவுள்ளது. சுற்றுலாப்பயணிகளின் பாதுகாப்பிற்காக கொடைக்கானல் காவல் துறை சிறப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஏற்கனவே 60 கூடுதல் போலீசார் பணியமர்த்தப்பட்டுள்ளனர். தற்போது மேலும் கூடுதல் போலீசார் பணியமர்த்தப்பட உள்ளனர். தவிர சுற்றுலாப்பயணிகளுக்கு உதவ பைக் ரோந்து போலீசாரும், தன்னார்வ தொண்டர்கள் கொண்ட 30 பேர் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் மலைச்சாலையில் பழுதடைந்தால் அவர்களுக்கு உடனடியாக உதவி செய்ய 3 மெக்கானிக் குழுக்களும் தயார் நிலையில் உள்ளனர். நேற்று கொடைக்கானல் போலீஸ் டிஎஸ்பி சீனிவாசன் தலைமை வகித்து, சிறப்பு ஏற்பாடுகளை துவக்கி வைத்தார். தன்னார்வக் குழு உறுப்பினர்களுக்கு காவல்துறை சார்பில் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் கொடைக்கானல் இன்ஸ்பெக்டர் பாஸ்டின் தினகரன் மற்றும் காவல்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

Related posts

பிரபல மலையாள இயக்குநரான சங்கீத் சிவன் (61) உடல்நலக் குறைவால் மும்பையில் காலமானார்

பெங்களூரு நகரில் கடந்த ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கன மழை!

மீண்டும் மன்னிப்பு கோரினார் ஒன்றிய அமைச்சர் ரூபாலா