கோடை மழையால் மீண்டும் பசுமையான டாப்சிலிப்-சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

பொள்ளாச்சி : பொள்ளாச்சியை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட டாப்சிலிப் பகுதிக்கு, உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து பயணிகள் தினமும் வந்து செல்கின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள், வனத்தின் அழகு மற்றும் வன விலங்குகளையும் ரசித்து செல்கின்றனர்.

இந்த ஆண்டில் கடந்த ஜனவரி இறுதி முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தால், டாப்சிலிப் வனப்பகுதியில் உள்ள மரங்களில் இருந்த இலைகள் உதிர்ந்து பசுமையிழந்து காணப்பட்டது. மேலும், பிப்ரவரி முதல் ஏப்ரல் மாதம் இரண்டாவது வாரம் வரை சுற்றுலா பயணிகள் வருகை என்பது சொற்ப அளவிலே இருந்தது. இதனால், பெரும்பாலான நாட்களில் சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடியது.

இந்நிலையில், இந்த ஆண்டில், கடந்த ஏப்ரல் மூன்றாவது வாரத்திலிருந்து பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டதையடுத்து, கடந்த இரண்டு வாரத்திற்கு மேலாக டாப்சிலிப்புக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்தது. மேலும், கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு பல நாட்கள் அவ்வப்போது பெய்த கோடை மழையால், டாப்சிலிப்பில் காய்ந்த மரங்கள் மீண்டும் துளிர்விட்டு பச்சை பசேல் என உள்ளது.

அதிலும், டாப்சிலிப் உச்சி மேட்டில் உள்ள புற்கள் தற்போது துளிர்விட்டு பச்சை பசேல் என்று இருப்பதால், அதனை காலை மற்றும் மாலை நேரங்களில் மான்கள் உண்டுசெல்வதை வழக்கமாக கொண்டுள்ளது. அவ்வாறு வரும் மான்களை, சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கின்றனர்.

டாப்சிலிப்பில் தற்போது சீதோஷ்ண நிலையில் மாற்றம் ஏற்பட்டு, பகல் நேரத்திலும் குளிர்ந்த நிலையில் இருப்பதால், கடந்த சிலநாட்களாக அங்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை வழக்கத்தைவிட அதிகமாக இருந்ததாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Related posts

விருப்ப ஓய்வு பெற மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களுக்கு நோட்டீஸ்

பெருங்குடி குப்பைக் கிடங்கில் பயோ மைனிங் முறையில் 84% குப்பை அகற்றம்: அடுத்த மாதம் பணிகளை முடிக்க மாநகராட்சி திட்டம்

தாம்பரம் பகுதிகளில் தொடரும் மின்வெட்டு: இரவில் விடியவிடிய மக்கள் அவதி