8 ஆண்டில் 9,753 சிறுபான்மை மாணவர்கள் பயனடைந்தனர் வெளிநாட்டு உயர்கல்வி திட்டம் ஒன்றிய அரசு அதிரடி முடக்கம்: ஆர்டிஐயில் அதிர்ச்சி தகவல்

மதுரை: தேசிய அளவில் கடந்த 8 ஆண்டுகளில் 9,753 சிறுபான்மை மாணவர்கள் பயனடைந்து வந்த ‘பதோ பர்தேஸ்’ வெளிநாட்டு உயர்கல்வி திட்டத்தை ஒன்றிய அரசு அதிரடியாக முடக்கி இருக்கும் தகவல் ஆர்டிஐ மூலம் தெரிய வந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த நலிவடைந்த மாணவர்கள் வெளிநாட்டிற்கு சென்று, பட்ட மேற்படிப்புகள் மற்றும் முனைவர் பட்டம் பயில்வதற்கு, ஒன்றிய அரசால் கடந்த 2006ல் ‘பதோ பர்தேஸ்’ கல்வித் திட்டம் அறிமுகப்படுத்தபட்டது. தேசிய அளவில் சிறப்பாக செயல்பட்டு வந்த இத்திட்டத்தை கடந்த 2021 – 2022ம் கல்வியாண்டோடு ஒன்றிய அரசு நிறுத்தியுள்ளது. 2022 – 2023 கல்வியாண்டில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறவில்லை.

இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாநிலத்திலும் கடந்த 8 ஆண்டுகளில் எவ்வளவு மாணவர்கள் பயனடைந்துள்ளனர் என்கிற ஒப்பீடு ஆய்விற்காக, ஆர்டிஐயில் ஒன்றிய அரசிடம் தகவல்களை, மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் செ.கார்த்திக் கேட்டடிருந்தார். இதில் கிடைத்த தகவல்களின் படி சிறுபான்மையினர் பயனடைந்து வந்த இத்திட்டம் முடக்கப்பட்டிருக்கும் அதிர்ச்சித் தகவலும், பயனடைந்தோர் பட்டியலும் தெரிய வந்திருக்கிறது. இத்திட்டத்தில் கடந்த 2014-2015 கல்வியாண்டு முதல் 2021-2022 கல்வியாண்டு வரையான 8 ஆண்டுகளில், தேசிய அளவில் அனைத்து மாநிலங்களையும் சேர்த்து மொத்தம் 9,753 மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.

கேரளாவில் மட்டும் 5,510 பேர் பயனடைந்துள்ளனர். ஒட்டுமொத்த மாநிலங்களின் பயனாளர்களில், 50 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். அதுமட்டுமல்லாமல், தேசிய அளவில் அனைத்து மாநிலங்களிலும் பெண்களே இந்தத் திட்டத்தின் கீழ் அதிக பயனடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக 2021-2022 கல்வியாண்டில் மட்டும் 2,550 பேர் பயனடைந்து வந்த நிலையில் திடீரென ஒன்றிய அரசு எவ்வித முன்னறிவிப்புமின்றி இத்திட்டத்தை நிறுத்தியிருப்பது மாணவர்கள், கல்வியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் வெளிநாடுகளில் உயர்கல்வி கனவோடு இருக்கும் ஆயிரக்கணக்கான மாணவர்களின் எதிர்பார்ப்புகள் கேள்விக்குறியாகியுள்ளது. தேசிய அளவில் மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது கேரள மாநிலம் முதல் இடம் வகிக்கிறது. எனவே, பாரபட்சம் பார்த்து இத்திட்டத்தை ஒன்றிய அரசு முடக்கியுள்ளதா என்கிற கேள்வியும் எழுகிறது. மதுரை சமூக ஆர்வலர் செ.கார்த்திக் கூறும்போது, ‘‘ஒன்றிய அரசு சிறுபான்மையின மாணவர்களின் கல்வி நலனை கருத்தில்கொண்டு மீண்டும் பதோ பர்தேஸ் திட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும்.

ஒன்றிய அரசு ஏற்கனவே தமிழ்நாட்டு சிறுபான்மையினர் நலத்துறைக்கென நிதி ஒதுக்கீட்டில் 2018-19ல் துவங்கி 2021-22 வரை 4 ஆண்டுகளுக்கும் சேர்த்து ரூ.12 ஆயிரம் (ஆண்டுக்கு ரூ.3 ஆயிரம்) ஒதுக்கி வஞ்சித்திருந்தது ஆர்டிஐ மூலம் தெரிந்தது. இந்நிலையில், சிறுபான்மையினர் மாணவர்களுக்கான வெளிநாட்டு உயர்கல்விக்கான திட்டத்தையே நடப்பாண்டில் முடக்கி இருக்கின்றனர். நாடு முழுவதும் பல்வேறு நிலைகளிலும் பின்தங்கியுள்ள சிறுபான்மையினருக்கு கூடுதல் திட்டம், நிதி ஒதுக்கி இருக்க வேண்டும். ஆனால், இருக்கும் திட்டத்தையே ஒன்றிய அரசு பறித்திருப்பது அனைத்து தரப்பினரிடமும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது’’ என்றார்.

Related posts

துபாயில் உயிரிழந்த கணவரின் உடலை மீட்டு தரக் கோரி மனைவி, மகன் ஆட்சியரிடம் மனு..!!

வெயிலில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு 3 மணி நேரம் கட்டாயம் ஓய்வு வழங்க வேண்டும் :டெல்லி துணை நிலை ஆளுநர் உத்தரவு!!

லஞ்சம் வாங்கிய வருவாய் உதவியாளர், ஆய்வாளர் கைது..!!