சூழலியல் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை தேவை: சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தல்

சென்னை: எண்ணூர் முகத்துவார பகுதி, மீன்கள், இறால் இனப்பெருக்கத்துக்கு முக்கியமான பகுதி. இங்கு எண்ணெய் படலம் ஏற்படுவது, கடல் மீன் வளத்தையே பாதிக்கும். ஆற்றில் எண்ணெய் கழிவுகளை திறந்துவிட்ட நிறுவனத்தின் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மீனவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நேற்றுமுன்தினம் எண்ணூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கள ஆய்வு மேற்கொண்டனர். சிபிசிஎல் நிறுவனத்தின் தெற்கு வாயில் அருகே உள்ள மழைநீர் வெளியேறும் பகுதியின் அருகில் எண்ணெய் தடயங்கள் இருப்பது ஆய்வில் தெரியவந்தது. ஆனால், அந்த நிறுவனத்தின் தென் பகுதியில் இருந்து வெளியேறும் மழைநீரில் எண்ணெய் இல்லை.

மிதக்கும் எண்ணெய்யை அகற்றுமாறு சிபிசிஎல் நிர்வாகத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொருக்குப்பேட்டை பகுதியில் உள்ள பக்கிங்காம் கால்வாயிலும் எண்ணெய் படிவு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரியம் பல்வேறு விதிமுறைகளுக்கு உடன்பட்டு, அதை பூர்த்தி செய்தால் மட்டுமே நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படும். அந்த விதிகளை மீறி சூழலியல் குற்றங்களில் ஈடுபடும் நிறுவனங்கள் மீது உரிமம் ரத்து, தடை விதித்தல் போன்ற கடுமையான தண்டனைகள் கொடுக்க வேண்டும். வரும் காலங்களில் இதை நடைமுறைபடுத்த வேண்டும்’’ என்றனர்.

 

Related posts

சென்னை விமான நிலையத்தில் குண்டு வெடிக்கும் என்று இ-மெயில் மூலம் மிரட்டல் வந்ததால் பரபரப்பு

விரைவில் பயன்பாட்டுக்கு வரும் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள்!

கோவையில் காட்டு யானை தாக்கி இளைஞர் காயம்