மன அழுத்தத்தை குறைக்க நாய்குட்டிகளுடன் யோகா: பிரான்ஸ் நகரத்தில் தொடங்கப்பட்டுள்ள மையத்திற்கு வரவேற்பு..!!

பாரிஸ்: மனஅழுத்தத்தை குறைக்கும் வகையில் யோகாவுடன் சேர்ந்து நாய்குட்டிகளுடன் கொஞ்சி விளையாடும் வகையில் பிரான்சில் தொடங்கப்பட்டுள்ள மையம் வரவேற்பை பெற்றுள்ளது. சர்வதேச அளவில் உடல்நலத்திற்காக யோகா செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தண்ணீர் யோகா, கடற்கரை யோகா, கயிறில் தொங்கியபடி யோகா என பல வகைகளில் யோகா சனம் கற்றுக்கொடுக்கப்படுகிறது. அந்த வரிசையில் பிரான்ஸ் நாட்டில் புதுவிதமான யோகா மையம் திறக்கப்பட்டுள்ளது. பரபரப்பான பாரிஸ் நகரில் தொடங்கப்பட்டுள்ள இந்த மையத்தில் மன அழுத்தத்தை குறைக்க யோகாவுடன் இணைந்து நாய்குட்டிகளுடன் கொஞ்சி விளையாடவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

பப்பி யோகா பாரிஸ் என்ற இந்த மையத்திற்கு பாரிஸ் நகர் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக கல்லூரி மாணவிகள் பலர் இந்த மையத்தில் ஆர்வத்துடன் சேர்ந்து வருகின்றனர். நெருக்கமான குடியிருப்புகளை கொண்ட பாரிஸில் பெரும்பாலான வீடுகள் சிறியதாக இருக்கும் என்பதால் அங்கு நாய்கள் வளர்ப்பதும், யோகா செய்வதும் கடினமாக உள்ளது. எனவே இந்த இரண்டு அனுபவத்தையும் சேர்த்து தருவதற்காக இந்த மையத்தை தொடங்கியதாக கூறுகிறார் அதன் உரிமையாளர். இந்த மையத்தில் பிறந்து 6 முதல் 12 வாரங்களாக நாய் குட்டிகள் மட்டுமே இருக்கின்றன.

அருகில் உள்ள செல்லப்பிராணி வளர்ப்பு மையத்தில் இருந்து வாடகை அடிப்படையில் அழைத்து வரப்படுகின்றன. இந்த மையம் மூடப்பட்டதும் மாலை நேரத்தில் மீண்டும் வளர்ப்பு மையத்திற்கே நாய் குட்டிகள் அழைத்து செல்லப்படுகின்றன. தற்பொழுது இந்திய ரூபாய் மதிப்பில் 3,000 வரை இந்த மையத்தில் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதற்கு வரவேற்பு அதிகரித்து இருப்பதால் வரும் நாட்களில் கட்டணத்தை உயர்த்தவும், மேலும் பல கிளைகளை தொடங்கவும் இவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

 

Related posts

சென்னையில் இதுவரை இல்லாத வகையில் நேற்று உச்சபட்ச மின் நுகர்வு பதிவு: மின்சார வாரியம் தகவல்

டெல்லியில் இந்தியா கூட்டணி தலைவர்கள் ஆலோசனை தொடங்கியது

தமிழ்நாட்டில் கோயம்புத்தூர், திருப்பூர், தேனி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்