ஸ்டெர்லைட் விவகாரத்தில் விரைவில் இறுதி விசாரணை: உச்ச நீதிமன்றம் ஒப்புதல்

சென்னை: ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கை விரைவில் இறுதி விசாரணையாக விசாரிக்கப்படும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்துள்ளார். ‘தூத்துக்குடியில் இருக்கும் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும். அதேப்போன்று ஆலையின் உள்ளே இருக்கும் பராமரிப்பு பணியை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும்’ என வேதாந்தா நிறுவனத்தின் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு முன்னதாக தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, ‘ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழ்நாட்டு தரப்பின் அனைத்து கோரிக்கைகளையும் ஏற்பதாகவும், ஆலையை மூடியதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் தொடர்புடைய அரசாணைகள், ஆவணங்கள் மற்றும் குறுகிய எழுத்துப்பூர்வ வாதங்கள் அனைத்தையும் தாக்கல் செய்ய வேண்டும்’ என உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, ‘கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் ஸ்டெர்லைட் ஆலையை ஒருபோதும் அனுமதிக்க முடியாது’ என உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு திட்டவட்டமாக தெரிவித்து அதுதொடர்பான எழுத்துப்பூர்வ மனுவையும் தாக்கல் செய்திருந்தது.

இந்த நிலையில் வேதாந்தா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கை விரைந்து பட்டியலிட்டு விசாரிக்க வேண்டும்’ என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் முன்னிலையில் கோரிக்கை வைத்தார். அதற்கு பதிலளித்த தலைமை நீதிபதி, ‘ஸ்டெர்லைட் வழக்கை விசாரிக்கும் தேதி திட்டமிடப்பட்டுள்ளது. அதனை பின்னர் வெளியிடுகிறோம்’ என தெரிவித்தார். அப்போது மீண்டும் குறுக்கிட்ட வேதாந்தா தரப்பு வழக்கறிஞர், ‘வழக்கை இறுதி விசாரணையாக எடுத்து விசாரிக்க வேண்டும்’ என தெரிவித்தார். அதற்கு தலைமை நீதிபதி ஒப்புதல் வழங்கி உத்தரவிட்டார்.

Related posts

சென்னை விமான நிலையத்தில் குண்டு வெடிக்கும் என்று இ-மெயில் மூலம் மிரட்டல் வந்ததால் பரபரப்பு

விரைவில் பயன்பாட்டுக்கு வரும் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள்!

கோவையில் காட்டு யானை தாக்கி இளைஞர் காயம்