பட்டினப்பாக்கம் லூப் சாலையில் படகுகளை நிறுத்தி மீனவர்கள் போராட்டம்: ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை நிறுத்த மீனவர்கள் கோரிக்கை

சென்னை: ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு மீனவர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து மீண்டும் போராட்டத்தில் ஈடுப்பட்டு உள்ளனர். சென்னை கலங்கரைவிளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரையிலான லூப் சாலையை, அப்பகுதி மீனவர்கள் ஆக்கிரமித்து மீன் கடைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், ஐஸ் பெட்டிகளை சாலையோரம் வைத்தும், வாடிக்கையாளர்கள் வாகனங்களை நிறுத்துவதாலும் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி, சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.

அந்த பொதுநல வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், பி.பி.பாலாஜி கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்து போது சாலை பயன்படுத்துவோருக்கு இடையூறு ஏற்படுத்தும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. மேலும், இது தொடர்பாக நடவடிக்கை எடுத்து வரும் 18-ம் தேதிக்குள் உயர்நீதிமன்றத்தில் அறிக்கையை சமர்பிக்க வேண்டும் என சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிடப்பட்டு இருந்தது. அதையடுத்து, கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரையிலான லூப் சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட மீன் விற்பனை கடைகள் மற்றும் உணவகங்களை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் காவல்துறையும் அகற்றினர்.

இந்நிலையில், கடைகளை அகற்றப்பட்ட தகவலறிந்த நொச்சிக்குப்பம் பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மீனவர்கள் சாலையில் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். தங்களது வாழ்வாதாரம் இதனால் பாதிக்கப்பட்டு வருவதாகவும், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் தங்களுக்கான உரிய விளக்கம் அளிக்கும் வரை இந்த போராட்டத்தை கைவிடப் போவதில்லை எனவு, மீனவர்கள் தெரிவித்துள்ளனர். இதை தொடர்ந்து மாநகராட்சி சார்பில் மீனர்களிடம் பேச்சு வார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related posts

மலர் கண்காட்சியில் 4 நாளில் ரூ.13 லட்சம் வசூல் கொடைக்கானலில் கனமழை படகுப்போட்டி ஒத்திவைப்பு

கஞ்சா, பணம் எப்படி வந்தது? யூடியூபர் சங்கர் திடுக் வாக்குமூலம்

பசுபதி பாண்டியன் ஆதரவாளர் கொலை குற்றவாளிகள் கேரளா ஓட்டமா?