இட நெருக்கடியால் திணரும் கோத்தகிரி பேருந்து நிலையம்-விரிவாக்கம் செய்ய பொதுமக்கள் கோரிக்கை

ஊட்டி : ஊட்டி மண்டல அரசு போக்குவரத்து கழகம் கோத்தகிரி கிளையில் இருந்து கோவை, திருப்பூர், திருச்சி, பெரம்பலூர், ஈரோடு, மைசூா் உள்ளிட்ட பகுதிகளுக்கும் கோடநாடு, பேரகணி, கப்பச்சி, கக்குச்சி, கேசலாடா உள்ளிட்ட பல்வேறு கிராமப்புறங்கள் என 50க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதுதவிர, உள்ளூர் கிராம பகுதிகளுக்களுக்கு தனியார் மினி பஸ்களும் இயக்கப்பட்டு வருகின்றன.

கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கோத்தகிரியில் அறிஞர் அண்ணா பஸ் நிலையம் அமைக்கப்பட்டது. இந்த பஸ் நிலையம் கோத்தகிரி பேரூராட்சி நிர்வாகத்தால் பராமரிக்கப்பட்டு வருகிறது.
ஆரம்பத்தில் மக்கள் தொகை குறைவாக இருந்த கால கட்டத்தில் அரசு பஸ்கள் இயங்கும் வழித்தடங்கள் குறைவாக இருந்தது. இதனால் அப்போது பஸ் நிலையத்தில் போதுமான இடவசதி இருந்தது. தற்போது மக்கள் தொகை அதிகரிப்பு காரணமாக அரசு பஸ்கள் செல்லும் வழித்தடங்களும் அதிகரித்துள்ளன. இதனால் கோத்தகிரி பஸ் நிலையத்தில் அனைத்து பஸ்களையும் நிறுத்துவதற்கு போதுமான இடவசதி இல்லாமல் நெருக்கடி ஏற்பட்டு வருகிறது.

இதனால் பஸ் நிலையத்திற்குள் மேட்டுப்பாளையம், கோவை போன்ற தொலை தூரங்களுக்கு செல்ல கூடிய அரசு பஸ்களும், சில மினி பஸ்களும் மட்டுமே நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்கின்றன. குன்னூர், ஊட்டி மற்றும் திருச்சிக்கடி, கக்குச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல கூடிய பஸ்கள் மேட்டுப்பாளையம் – கோத்தகிரி பிரதான சாலையோரத்தில் நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்கின்றன. இந்த பஸ்களில் சீட் பிடிப்பதற்காக பொதுமக்கள் சாலையின் குறுக்கே ஓடுவதால் விபத்துகள் ஏற்பட கூடிய அபாயமும் நீடிக்கிறது.

மேலும் பஸ் நிலைய வளாகத்தில் போதுமான இருக்கை வசதிகள் இல்லாததால் பயணிகள் நின்று கொண்டே இருக்க வேண்டிய சூழலும் உள்ளது. இதனால் கோத்தகிரி பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்து அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கடந்த பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர். இதற்கிடையே பஸ் நிலையத்தை ஒட்டி ேபரூராட்சிக்கு சொந்தமான இடம் உள்ளது. இந்த இடத்தையும் பயன்படுத்தி கோத்தகிரி பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

கோத்தகிரி பகுதி பொதுமக்கள் கூறுகையில், ‘‘கோத்தகிரியில் இருந்து உள்ளூர் கிராமப்புறங்களுக்கு மட்டுமின்றி வெளியூர்களுக்கும் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
ஆனால் அதற்கேற்ப இங்குள்ள பஸ் நிலையத்தில் போதிய இடவசதி இல்லை. எனவே கூடுதலாக பஸ்கள் நிறுத்திடும் வகையில் பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Related posts

சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் தவறி விழுந்து மேற்கூரையில் சிக்கி உயிருக்கு போராடிய குழந்தை மீட்பு!

கிருஷ்ணகிரி அடுத்த பெரியபனமுட்லு பகுதியில் நடந்த சாலை விபத்தில் 3 பேர் உயிரிழப்பு!

தேர்தல் ஆணையம் முறையாக பணி செய்ய வேண்டும்: எல்.முருகன் வலியுறுத்தல்