தென்சென்னை மீனவ குடும்பங்களை லட்சாதிபதி ஆக்குவதே எனது குறிக்கோள் : பாஜ வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் வாக்குறுதி

சென்னை: தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி பாஜ வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் தொகுதி முழுவதும் தாமரை சின்னத்துக்கு ஆதரவு கேட்டு இறுதி கட்ட மின்னல் வேக பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறார். தொகுதி முழுவதும் வலம் வந்துள்ள அவர் மக்களோடு மக்களாக பழகி அவர்களின் அன்பை பெற்ற வேட்பாளராக களத்தில் உள்ளார். திறந்த வெளி வாகனத்தில் சென்று அவர் பிரச்சாரம் செய்தாலும், பிரச்சனைகளோடு அவதிப்படும் மக்களை பார்த்தால் வாகனத்தில் இருந்து கீழே இறங்கி அவர்களது வீடுகளுக்கு சென்று உணவருந்தி குறைகளை கேட்டு, அக்கா வந்துட்டேன்… இனி எந்த பிரச்னையும் இருக்காது என கூறி. எந்த பிரச்னையாக இருந்தாலும் அவற்றை நிவர்த்தி செய்து தருவேன் என்ற உறுதியான அவரது பேச்சு மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. நேற்று மாலை மயிலாப்பூர் பறக்கும் ரயில் நிலையத்தில் ரயில் ஏறிய அவர் வேளச்சேரி வரை ரயிலில் பயணம் செய்தார்.

அப்போது ரயில் நிலையங்களில் உள்ள குறைகளை பயணிகளிடம் கேட்டார். இந்த வழித்தடத்தில் உள்ள ரயில் நிலையங்களை நவீனமயமாக்கி தருவேன் என உறுதி அளித்து தாமரை சின்னத்துக்கு ஆதரவு திரட்டினார். இந்நிலையில், இன்று மாலையுடன் பிரச்சாரம் முடிவடைய உள்ள நிலையில், இன்று காலை முதல் தமிழிசை சவுந்தரராஜன் சோழிங்கநல்லூர், மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் கூடும் இடங்களில் மக்களை நேரில் சந்தித்து இறுதி கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பிரச்சாரத்தின் போது, தமிழிசை சவுந்திரராஜன் பேசியதாவது: தென்சென்னை தொகுதியில் உள்ள மிக முக்கியமான பிரச்னை பட்டா பிரச்னை தான். 50 ஆண்டுகளாக வாழும் மக்களுக்கு இன்னும் பட்டா வழங்கப்படவில்லை. குறிப்பாக சாமானிய மக்களுக்கு கிடைக்கவில்லை. அவர்களுக்கு ஒன்றிய அரசின் திட்டங்களை இலகுவாக பெற்று தந்துவிடுவேன். ஏனென்றால் மத்தியில் பிரதமராக மோடி தான் இருக்கப் போகிறார்.

மாநில அரசிடம் இருந்து ஏதாவது கேட்க வேண்டும் என்றால், நான் ஏற்கனவே நிர்வாகத்தில் இருந்தவள். அதனால் எதை எப்படி பெற்றுத் தர முடியும் என்பது எனக்கு தெரியும். இப்படி மக்கள் பிரச்னைக்காக மக்களோடு மக்களாக ரோட்டில் உட்கார்ந்து போராடி பெற்றுத் தருவேன். நான் அட்மினிஸ்ட்ரேட்டர் மட்டுமல்ல நான் ஒரு பைட்டர். அதனால் மக்களுக்காக எனது வாழ்க்கையை அர்ப்பணித்திருக்கிறேன். மீனவ கிராமங்களை ஒருங்கிணைத்து குழு அமைத்து அவர்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க உள்ளேன். அதாவது ஒரே இடத்தில் கருவாட்டை கலெக்ட் பண்ணி, எந்த இடத்தில் பதப்படுத்த வேண்டுமோ அதற்கான முயற்சிகளை ஏற்படுத்தி தருவேன். மீனவ குடும்பங்களை லட்சாதிபதியாக்குவதே எனது ஒரே குறிக்கோள். இவ்வாறு அவர் பேசினார்.

Related posts

சிலந்தி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவது தொடர்பாக சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்டுள்ளதா? : கேரள அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் கேள்வி

சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டும் விவகாரம்: கள்ள மவுனம்’ எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கைவந்த கலை அமைச்சர் துரைமுருகன் பதிலடி

கோயம்பேடு பேருந்து நிலையம் இருந்த இடத்தில் பெரிய பசுமை பூங்கா அமைக்க வேண்டும் : முதலமைச்சருக்கு அன்புமணி கடிதம்