கூட்டுறவு சங்கங்களில் சோலார் பேனல் திட்டம்: மாதம் ரூ.30 கோடி மின்கட்டணம் மிச்சமாகும்; விரைவில் பணிகள் துவக்கம்

வேலூர்: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வகையான கூட்டுறவு சங்கங்களில் மின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் சோலார் பேனல் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாதம் ரூ.30 கோடி வரையில் மின் கட்டணம் மிச்சமாகும். இதற்காக திட்ட மதிப்பீடு தயாராகிறது என்று துறை சார்ந்த அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழ்நாட்டில் கிராமப் பொருளாதார வளர்ச்சியில் கூட்டுறவு சங்கங்கள் இன்றியமையாத பங்கை ஆற்றிவருகின்றன. கடன் வழங்குதல், விவசாய விளைபொருட்கள் விற்பனை மேற்கொள்ள வசதிகளை ஏற்படுத்துதல் மற்றும் இடுபொருள், நுகர்பொருள் ஆகியவற்றை நியாயமான விலையில் விற்பனை செய்தல் ஆகிய பணிகளை கூட்டுறவு சங்கங்கள் செய்து வருகின்றன.

தமிழ்நாட்டில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் கூட்டுறவுச் சங்கங்கள் பொதுவாக கடன் கூட்டுறவு சங்கங்கள், விற்பனைக் கூட்டுறவு சங்கங்கள், நுகர்வோர் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கூட்டுறவு கல்வி மற்றும் பயிற்சி அளிக்கும் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகள் என பல்வேறு வகையான கூட்டுறவு சங்கங்கள் கிராம மற்றும் நகரக் கடன் தேவைகளை நிறைவு செய்கின்றன. விவசாய விளைபொருள் விற்பனையில் கூட்டுறவு விற்பனைச் சங்கங்கள் உதவியாக உள்ளன. நுகர்வோர் கூட்டுறவு சங்கங்கள் மாநிலத்தில் உள்ள தங்களது பரவலான அலகுகள் மூலம் அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்துவதில் உதவி புரிகின்றன.

இத்தகைய கூட்டுறவு சங்கங்கள் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் நியாய விலைக் கடைகளை நடத்தி வருகின்றன. கூட்டுறவுக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள், பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடையே கூட்டுறவுக் கொள்கைகளைப் பரப்புதல், கூட்டுறவுச் சங்கப் பணியாளர்களுக்கு தக்க பயிற்சி வழங்கி செயல் திறனை மேம்படுத்துதல் ஆகிய பணிகளைச் செய்கின்றன. பொதுமக்களின் தேவைகளைச் சிறந்த முறையில் நிறைவு செய்யவும் கிராமப் பொருளாதார வளர்ச்சிக்கு கணிசமான அளவிற்கு பங்காற்றவும் ஏதுவாக கூட்டுறவு சங்கங்களை நவீன மயமாக்கி வலிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது. தமிழ்நாட்டில் 23 ஆயிரத்து 149, அனைத்து வகை கூட்டுறவு சங்கங்கள் செயல்படுகின்றன.

இந்த கூட்டுறவு சங்கங்களில் மின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், சோலார் பேனல் அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக மாவட்டம் தோறும் முதற்கட்டமாக 10 முதல் 15 கூட்டுறவு சங்கங்களில் சோலார் பேனல் அமைப்பதற்கான திட்ட மதிப்பீடு தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பணிகள் நிறைவு பெற்று சோலார் பேனல்கள் பயன்பாட்டிற்கு வந்தால் மாதம் ரூ.30 கோடி மின்கட்டணம் மிச்சமாகும். இதுகுறித்து கூட்டுறவுத்துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழ்நாட்டில் தனி நபர்கள் சூரிய சக்தியை பயன்படுத்தி மின் உற்பத்தி செய்து, அதனை மின்வாரியத்திற்கு வழங்கும் திட்டத்தை, தமிழ்நாடு எரிசக்தி வளர்ச்சி முகமை மற்றும் தமிழ்நாடு மின் துறையும் இணைந்து செயல்படுத்துகிறது.

அதேநேரம், அரசுத்துறைக்கு சொந்தமான கட்டிடங்களில், சூரிய சக்தியைக் கொண்டு மின் உற்பத்தி செய்யப்பட்டும் வருகின்றன. குறிப்பாக மாநகராட்சிகளில் உள்ள அரசு அலுவலகங்களில் சோலார் பேனல் அமைத்து மின்சார பயன்பாட்டை குறைத்து, ஆண்டுக்கு லட்சக்கணக்கில் மின் கட்டணம் சேமிக்கப்படுகிறது. தற்போது, கூட்டுறவு சங்கங்களில் சோலார் பேனல் அமைப்பதற்கான நடவடிக்கையை கூட்டுறவு துறை மேற்கொண்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் சொந்த கட்டிடத்தில் இயங்கும் கூட்டுறவு சங்கங்களில் சோலார் பேனல் அமைப்பதற்கான திட்ட மதிப்பீடு தயாரித்து, அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதற்கான நிதி ஒதுக்கீடு 2 மாத்திற்குள் கிடைத்துவிடும். பின்னர் பணிகள் விரைவில் தொடங்கும். தமிழ்நாடு முழுவதுமாக தற்போது கூட்டுறவு சங்கங்களில் மின்கட்டணம் மாதம்தோறும் தலா ஒரு சங்கத்திற்கு ரூ.7ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை செலவாகிறது. மொத்த சங்கங்களுக்கு கணக்கிட்டால் மாதம்தோறும் மின்கட்டணம் சுமார் ரூ.30 கோடி வரை செலவாகிறது. இந்த மின்கட்டணம் இனி சோலார் பேனல்கள் மூலம் மிச்சமாகும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related posts

கேரளாவில் இன்று மீண்டும் நில அதிர்வு: பொதுமக்கள் பீதி

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது

உளுந்தூர்பேட்டை அருகே மூதாட்டி வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் 6 பேர் கைது: 50 பவுன் நகை பறிமுதல்