சிவகாசி – திருவில்லிபுத்தூர் சாலையில் மக்களை பயமுறுத்தும் பட்டுப்போன மரம்

*உடனே வெட்டி அகற்ற கோரிக்கை

சிவகாசி : சிவகாசி – திருவில்லிபுத்தூர் சாலையில் சாலையோரத்தில் உள்ள 60 அடி உயரம் கொண்ட பட்டுப்போன மரத்தை அகற்ற வேண்டும் என்று வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.சிவகாசியிலிருந்து திருவில்லிபுத்தூர் செல்லும் சாலையில் ஹவுசிங் போர்டுவரை சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் சாலை உள்ளது. இந்த சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள், டூவீலர்கள் இரு மார்க்கமாக சென்று வருகின்றன. இந்த சாலை வழியாகத்தான் திருவில்லிபுத்தூர், தென்காசி செல்ல வேண்டியிருப்பதால் எப்போதும் இந்த சாலை பரபரப்பாகவே காணப்படும். குறிப்பாக பீக்அவர் சமயங்களில் ஒருவரையொருவர் முண்டியடித்துக் கொண்டு செல்வர்.

இந்த சாலையில் தனியார் மகளிர் போலீஸ் ஸ்டேசன் எதிர்புறம் சுமார் 80 ஆண்டுகள் பழமையான புளிய மரம் ஒன்று உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இம்மரம் பட்டுப்போனது. 60 அடி உயரம் கொண்ட இந்த மரம், லேசான காற்று அடித்தாலோ, மழை பெய்தாலோ உடைந்து விழும் அபாயம் உள்ளது. மேலும் காய்ந்து போன கிளைகள் உடைந்து சாலையில் செல்லும் வாகனங்கள் மீது விழுகின்றன. இதனால் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் கனரக வாகனங்களில் செல்பவர்கள் அச்சமடைந்துள்ளனர். பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ள இந்த பட்டுப்போன மரத்தை அகற்றுமாறு, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து, நெடுஞ்சாலைதுறை அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகின்றது. மரம் விழுந்து விபத்து ஏற்படுவதற்கு முன், வெட்டி அகற்ற நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

பலாப்பழக்காரரின் ரகசிய ஆலோசனை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

கொடைக்கானல் ஏரிக்குள் பாய்ந்த கார்

புதுச்சேரியில் விஷவாயு தாக்கி 3 பெண்கள் பலி 2 விசாரணைக்குழு அமைப்பு