சிறுமுகை நீலிபாளையம் பிரிவு அருகே பைக்குகள் அடுத்தடுத்து மோதி இளைஞர்கள் 6 பேர் படுகாயம்

மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் சிறுமுகை எஸ்ஆர்எஸ் நகர் பகுதியை சேர்ந்தவர் ஷேக் தாவூத் (19). இவர் நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடுவதற்காக தனது நண்பர்களை அழைத்துள்ளார்.இதனையடுத்து, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து அவரது நண்பர்கள் ராஜேஷ் (19), சதீஷ் (19), மேட்டுப்பாளையம் எஸ்.எம்.நகர் பகுதியை சேர்ந்த ஆரிப் (19), சிறுமுகை பகுதியை சேர்ந்த கிஷோர் (21) மற்றும் ஜீவா நகரை சேர்ந்த வினித் குமார் (21) உட்பட 6 பேர் 3 விலை உயர்ந்த மோட்டார் பைக்கில் சிறுமுகையில் இருந்து புறப்பட்டு மேட்டுப்பாளையம் அன்னூர்-சாலையில் உள்ள தென்திருப்பதி நால்ரோடு பகுதியில் பிறந்த நாளை கொண்டாடினர்.

பின்னர், அனைவரும் தங்களது ஊர்களுக்கு திரும்ப புறப்பட்டனர். அப்போது, 3மோட்டார் பைக்குகளில் வந்த 6 பேரும் போட்டிப்போட்டு கொண்டு, சாகசம் செய்தவாறு வாகனங்களை இயக்கியதாக கூறப்படுகிறது. சிறுமுகை நீலிபாளையம் பிரிவு அருகே வந்தபோது கிஷோர் ஓட்டி வந்த பைக் சாலையோரத்தில் இருந்த மண் மேட்டின் மீது ஏறியதில் சரிந்து கீழே விழுந்துள்ளார். இதனையடுத்து, பின்னால் வந்த இரு பைக்குகளும் ஒன்றன்பின் ஒன்றாக மோதின. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள்களில் பயணம் செய்த 6 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.

அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கிஷோர், ஷேக் தாவூத், ஆரிப் உள்ளிட்டோருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மற்ற மூவரும் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து சிறுமுகை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘அண்மையில் அதிவேகமாக மோட்டார் பைக்குகளை இயக்கி சாகசம் செய்கிறேன் என்ற பெயரில் கீழே விழுந்த டிடிஎப் வாசனின் லைசென்ஸ் 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்பட்ட நிலையில் இளைஞர்களின் இதுபோன்ற சாகச விளையாட்டுகளால் எதிரில் வரும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் போலீசார் தங்களது ரோந்து பணியினை தீவிரப்படுத்த வேண்டும். அதே வேளையில் விலை உயர்ந்த பைக்குகளில் அதிவேகமாக இயக்கி வரும் இளைஞர்களை கண்டறிந்து அவர்களுக்கு அபராதம் விதிப்பதோடு, எச்சரிக்கையும் விடுக்க வேண்டும்’’ என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் இங்கிலாந்தில் பயிற்சி முடித்த 25 மாணவர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

சென்னை பட்டினம்பாக்கம் காவலர் குடியிருப்பில் 3 நாளில் 2 போலீசார் தூக்கிட்டு தற்கொலை

டெல்லி விமான நிலையத்தில் மின் அழுத்தத்தில் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டதாலும் விமானங்கள் புறப்படுவதில் தாமதம்