பட்டுப்புழு வளர்ப்பில் கொட்டுது வருமானம்!

தமிழகத்தின் மிக அழகிய மாவட்டங் களில் ஒன்று தென்காசி. குற்றாலச்சாரல் வீசும் இந்த தென்காசி, திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து பிரிந்து சமீபத்தில்தான் தனி மாவட்டமாகி இருக்கிறது. இந்த மாவட்டத்தில் நெல், பருத்தி, வெங்காயம் போன்ற பயிர்கள் செழித்து வளரும் ஒரு பசுமை பூமியாக விளங்கும் ஆலங்குளம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் தற்போது பட்டுப்புழு வளர்ப்பு பிரபலம் அடைந்து வருகிறது. இதற்கு ஆலங்குளம் அருகே உள்ள கோவிலூத்து பகுதியைச் சேர்ந்த அருள்குமரன் என்ற விவசாயி ஒரு முக்கிய காரணம். பட்டுப்புழு உற்பத்தியில் மாநிலத்திலேயே மூன்றாம் இடம்பிடித்ததோடு, இப்பகுதியைச் சேர்ந்த பலரையும் பட்டுப்புழு உற்பத்தித் தொழிலுக்கு அழைத்து வந்திருக்கும் இவரைச் சந்திக்க குற்றாலத்தின் குளிர்ந்த நீர் பாயும் கோவிலூத்து பகுதிக்கு சென்றோம். நம்மை வரவேற்றுப் பேசத் தொடங்கினார் அருள்ராஜன்.

“எனக்கு 55 வயது ஆகிறது. சிறுவயதில் இருந்தே விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறேன். எங்கள் பகுதியில் நெல், பருத்தி, வெங்காயம் என பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. இதில் அதிகளவில் மல்லிகை சாகுபடியும் நடைபெறும். நாங்களும் அதைத்தான் பெரும்பாலும் செய்வோம். மல்லிகைக்கு சீசன் காலங்களில்தான் நல்ல விலை கிடைக்கும் என்பதால், அதற்கு மாற்றுத்தொழிலாக பட்டுப்புழு வளர்ப்பைக் கையில் எடுத்தேன். பட்டுப்புழு வளர்ப்புத் தொழிலில் முறையாக வெற்றி பெற்றது மட்டுமில்லாமல், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் விருதும், ரூ.50 ஆயிரம் ஊக்கத்தொகையும் பெற்றிருக்கிறேன்.

பட்டுப்புழு வளர்க்கலாம் என முடிவெடுத்த பிறகு, அதுசார்ந்த யோசனைகள் பலவற்றைக் கேட்டு வந்தேன். அப்போதுதான் இளநிலை பட்டு ஆய்வாளரான சைமனின் அறிமுகம் கிடைத்தது. அவர்தான் பட்டுப்புழு வளர்ப்பு குறித்து என்னிடம் தெரிவித்தார். அப்போது எனக்கு அதுகுறித்த எந்த அனுபவமும் இல்லை. தெரியாத ஒன்றில் எப்படி இறங்க முடியும் என்ற தயக்கம் எனக்குள் இருந்தது. எனது இரண்டு மகன்களும், மகளும் பள்ளி, கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தனர். எனது மனைவி லதா உட்பட அனைவரும் என்னை நம்பி இருந்த அந்த நேரத்தில் புதிதாக பட்டுப்புழு வளர்ப்பில் ஈடுபட்டு பணத்தை இழந்து விடக்கூடாது என நினைத்தேன். ஆனால் சைமன் சார் எனக்கு பட்டுப்புழு வளர்ப்பு குறித்த சந்தேகங்களுக்கு விளக்கங்கள் அளித்தார். பலரது வருமானத்தை ஆதாரமாகக் காட்டினார். அவர் மூலம்தான் பட்டுப்புழு வளர்ப்பு குறித்த 7 நாள் பயிற்சிக்காக ஓசூருக்குச் சென்றேன். இப்படியே ஒரு 6 மாத காலம் பட்டுப்புழு வளர்ப்பில் ஈடுபடலாமா? வேண்டாமா? என்ற யோசனையில் ஓடியது. மாவட்டத்தில் பட்டுப்புழு வளர்ப்பில் ஈடுபட்ட பலரும் நல்ல வருமானம் எடுத்தனர். அந்த நம்பிக்கையில் நானும் பட்டுப்புழு வளர்ப்புத் தொழிலில் ஈடுபட முடிவெடுத்தேன்.

அதைத்தொடர்ந்து பட்டுப்புழு வளர்ப்புக்குத் தேவையான மல்பெரி இலைச்செடிகளை 3 ஏக்கர் நிலத்தில் பயிரிட்டேன். அதற்கு அருகிலேயே 1100 சதுர அடியில் பட்டுப்புழு வளர்ப்பு மனை அமைத்தேன். 5 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் ரூ.11 லட்சம் செலவு செய்து முதன்முதலாக தொழிலில் நுழைந்தேன். அப்போது ‘ரேக்’ அமைப்பைக் கொஞ்சம் நெருக்கமாக அமைத்து விட்டோம். அதனால் பால்பூச்சி எனப்படும் ஒரு வகையான பூச்சித்தொல்லை இருந்தது. இதனைத் தவிர்க்கும் விதத்தில் மீண்டும் ‘ரேக்கை’ மாற்றி அமைத்தேன். ஆரம்பத்தில் சறுக்கல்கள் இருந்தது. இழப்புகள் இருந்தது. அதையெல்லாம் சமாளித்து பட்டுப்புழுக்கள் வளர்வதற்குத் தேவையான சூழ்நிலைகள், உரம், கிருமி நாசினி போன்ற அனைத்தையும் அனுபவ ரீதியாக கற்றுக்கொண்டேன்.

அதுமட்டுமல்ல இந்த பட்டுப்புழு வளர்ப்பில் முக்கியமான காலக்கட்டத்தில், தென்காசி மாவட்ட பட்டு வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் நிஷாந்தி உட்பட பல அதிகாரிகள் வழிகாட்டியாக செயல்பட்டனர். அவ்வப்போது பட்டு வளர்ச்சித் துறை அதிகாரிகள் இங்கு வந்து ஆய்வு செய்கிறார்கள். பட்டு வளர்ச்சித் துறை சார்பில் பட்டுப்புழு முட்டைகளை விவசாயிகளுக்கு தேவைக்கு ஏற்ப வழங்குவார்கள். இதில் சமீபத்தில் ஆர்டர் செய்ததை விட பட்டுப்புழு முட்டைகள் குறைவாக எனக்கு கிடைத்தது. அதைக் கவனத்தில் கொண்டு உதவி இயக்குநர் நிஷாந்தி உடனடியாக நடவடிக்கை எடுத்தார்.

இதில் பட்டுப்புழு முட்டைகள் என்றால், நேரடியாக முட்டைகளை விவசாயிகளுக்கு வழங்குவதில்லை. விவசாயிகள் கொடுத்த ஆர்டர்களுக்கு ஏற்ப பட்டுப்புழு முட்டைகளை ஆய்வகத்தில் அடைகாக்க வைத்து, அந்த முட்டைகள் பொறித்தவுடன், வளர்ப்பதற்காக விவசாயிகளுக்கு வழங்கப்படும். அந்தப் புழுக்கள் மல்பெரி இலைகளை நன்றாக தின்று கூட்டுப்புழுவாக மாறும் வரை கண்ணும் கருத்துமாக வளர்க்க வேண்டும். 10 முதல் 12 நாட்களுக்குள் விற்பனைக்கு ஏற்ற கூட்டுப்புழுவாக மாறிவிடும். இதனை பட்டுவளர்ச்சித் துறை அதிகாரிகளிடம் தெரிவித்தால் அவர்களே நேரடியாக கொள்முதல் செய்துவிட்டு 4 நாட்களுக்குள் அதற்கான தொகையை அளித்து விடுவார்கள். நான் இந்த மாதம் 450 பட்டுப்புழு முட்டைகளை வாங்கினேன். இந்த பட்டுப்புழு முட்டைகள் தேனி மாவட்டத்தில் இருந்து இங்கு வருகிறது. முட்டைகளுக்காக மட்டுமே ரூ.8,100 செலவு செய்திருக்கிறேன். இதுவரை எனக்கு மாதந்தோறும் சராசரியாக 225 கிலோ முதல் 250 கிலோ வரை கூட்டுப்புழு மகசூல் கிடைக்கும். இந்த முறையும் 225 கிலோ மகசூல் கிடைக்கும் என நம்புகிறேன். சந்தையில் ஒரு கிலோ ரூ.400 முதல் ரூ.500 வரை விற்பனையாகிறது. சமீபத்திய நிலவரப்படி ரூ.500க்கு விற்பனையாகிறது. இதன் மூலம் 225 கிலோ கூட்டுப்புழு ரூ.1,12,500க்கு விற்பனையாகும். இதில் ஊழியர்களின் சம்பளம், உரம், கிருமிநாசினி, பட்டுப்புழு முட்டை என அதன் செலவுகள் ரூ.30 ஆகும். அதுபோக ரூ.82,500 லாபமாக கிடைக்கும். இதில் சில மாதங்கள் மகசூல் கூடுதலாக கிடைக்கும்.

சில மாதங்கள் குறையவும் செய்யும். ஆனால் சராசரியாக பட்டுப்புழு வளர்ப்பில் ரூ.70 ஆயிரம் லாபம் பார்க்கலாம். 10 முதல் 12 நாட்கள் பட்டுப்புழு வளரும் காலக்கட்டத்தில் தினசரி காலை, மாலை வேளைகளில் மல்பெரி இலைகளை உணவாக அளிக்க வேண்டும். அதுதான் இந்தத் தொழிலில் முக்கியமான வேலை. இதற்காக காலையில் 2 மணி நேரம், மாலையில் 2 மணி நேரம் செலவிட்டால் போதும். தற்போது 2 கல்லூரி மாணவர்கள் பகுதி நேரமாக வந்து இந்த வேலைகளைச் செய்கிறார்கள். அவர்களுக்கு மாதச்சம்பளமாக ரூ.7 ஆயிரம் கொடுக்கிறேன்.மல்பெரி இலைகளை வெயில் நன்றாக விழும் இடத்தில், முறையாக தண்ணீர்ப் பாய்ச்சி வளர்க்க வேண்டும். மல்பெரி இலையில் நிழல் பட்டால் தரமான கூட்டுப்புழு கிடைக்காது. பட்டுப்புழு கூடுகளின் தரம் எஸ்ஆர் 20ல் இருந்தால்தான் நல்ல தரமானது என அங்கீகரிக்கப்படுகிறது. அதனால் நான் நல்ல வெயில் படும் இடத்தில் மல்பெரி பயிரிட்டு இருக்கிறேன். இதன் காரணமாக இங்கு வளரும் கூட்டுப்புழு சராசரியாக எஸ்ஆர் 22 என்ற தரத்தில் உள்ளது. தற்போது என்னைப் பார்த்து இந்த சுற்றுவட்டாரப் பகுதியில் 10 பேர் பட்டுப்புழு வளர்ப்புத் தொழிலுக்கு புதிதாக வந்திருக்கிறார்கள். எனது மகன்கள் யோகசதீஷ், அகிலன் ஆகிய இருவரும் சென்னையில் ஐ.டி. வேலை செய்து வருகிறார்கள். அவர்களுக்கு நல்ல சம்பளம் கிடைக்கிறது. எனது மகள் வித்யா எம்எஸ்சி படித்து முடித்துவிட்டு பிஎட்., படிக்கிறாள். எனது இரண்டு மகன்களுக்கு நிகராக நான் கிராமத்தில் பட்டுப்புழு வளர்ப்பின் மூலம் சம்பாதிக்கிறேன்’’ என உற்சாகம் பொங்க கூறி முடித்தார்.
தொடர்புக்கு:
அருள்குமரன்: 94425 57957.

 

Related posts

மே-17: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

₹60 லட்சம் மதிப்புள்ள யானை தந்தம் பறிமுதல்: 2 பேர் அதிரடி கைது

இன்ஸ்பெக்டருடன் உல்லாசம் பெண் எஸ்ஐ அதிரடி டிரான்ஸ்பர்