சித்தராமையா, சிவக்குமார் இடையே கடும் போட்டி; யார் முதல்வர் என்பது இன்று மாலை தெரியும்?

பெங்களூரு: அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் பெங்களூருவில் இன்று மாலை அக்கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் நடக்கிறது. இதில் புதிய முதல்வர் தேர்வு செய்யப்பட உள்ளார். முதல்வர் பதவியை பிடிக்க சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இவர்களில் முதல்வராகப்போவது யார் என்பது இன்று மாலை தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கர்நாடகா சட்டப்பேரவையின் பதவி காலம் வரும் 24ம் தேதி முடிகிறது. இதைத்தொடர்ந்து 224 தொகுதிகளை கொண்ட 16வது சட்டப்பேரவைக்கு கடந்த 10ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 2,615 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். ஆளுங்கட்சியான பா.ஜனதா 224 தொகுதிகளிலும், காங்கிரஸ் 223 தொகுதிகளிலும், ஜனதா தளம்(எஸ்) கட்சி 207 தொகுதிகளிலும் போட்டியிட்டன.

சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணிக்கை நேற்று பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை துவங்கியதில் இருந்தே காங்கிரஸ் கட்சி பெரும்பான்மைக்கு தேவையான இடங்களில் முன்னிலையில் இருந்தது. பெரும்பான்மைக்கு 113 இடங்கள் தேவை. இறுதியில் 136 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. 34 ஆண்டுகளுக்கு பிறகு தனிப்பெரும்பான்மை பலத்துடன் காங்கிரஸ் ஆட்சியை பிடித்துள்ளது. ஆளும் பா.ஜனதா 66 இடங்களை மட்டும் பிடித்து படுதோல்வி அடைந்தது. குமாரசாமி தலைமையிலான ஜனதா தளம்(எஸ்) கட்சி 19 தொகுதிகளில் வென்றது. இந்த தோல்வியால் தென்இந்தியாவின் நுழைவு வாயிலாக விளங்கிய கர்நாடகத்தை பாஜக இழந்துள்ளது. மேலும் தென் இந்திய மாநிலங்களில் ஒன்றில் கூட பா.ஜனதா ஆட்சி இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கர்நாடகத்தில் புதிதாக வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று (14ம் தேதி) மாலை 5.30 மணிக்கு பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடக்கிறது. வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள் உடனே பெங்களூருவுக்கு வர வேண்டும் என்று நேற்றே கட்சி மேலிடம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி வெற்றிச்சான்றிதழ் பெற்ற எம்எல்ஏக்கள் நேற்று இரவில் இருந்து பெங்களூரு வர துவங்கினர். இன்று காலை வரை சுமார் 100 எம்எல்ஏக்கள் வந்திருந்தனர். தொலை தூரத்தில் இருப்பவர்கள் இன்று பிற்பகலுக்குள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ெபங்களூருவில் தான் உள்ளார். அவர் தலைமையில் தான் இன்று மாலை எம்எல்ஏக்கள் கூட்டம் நடக்கிறது. கர்நாடக மாநில மேலிட பொறுப்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா, தேசிய பொதுச்செயலாளர்கள் கே.சி.வேணுகோபால், முகுல்வாஷ்னிக் ஆகியோரும் இக்கூட்டத்தில் பங்கேற்கிறார்கள். இந்த கூட்டத்தில் புதிய முதல்வர் தேர்வு செய்யப்பட உள்ளார். முன்னாள் முதல்வர் சித்தராமையா, கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.ேக.சிவக்குமார் ஆகியோரிடையே முதல்வர் பதவிக்கு கடும் போட்டி நிலவுகிறது. இவர்களில் முதல்வராகப்போவது யார் என்பது இன்று மாலை தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதவிர 3 பேருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என்றும், ஒக்கலிகா, லிங்காயத், முஸ்லிம் தரப்பினருக்கு துணை முதல்வர் பதவிகள் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. எனினும் இன்ைறய எம்எல்ஏக்கள் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் சோனியா, ராகுல் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். அவர்கள் முதல்வர் ேவட்பாளைரை முடிவு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய முதல்வர் பதவி ஏற்பு விழா வரும் 17ம் அல்லது 18ம் தேதி நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

பாஜ தலைவர்கள் ஆலோசனை
கர்நாடக தேர்தலில் ஆளும் கட்சியான பாஜக படுதோல்வியை சந்தித்தது. இதைத்தொடர்ந்து பெங்களூரு மல்லேஸ்வரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் தோல்வி குறித்து கர்நாடக மாநில பாஜ மூத்த நிர்வாகிகள் இன்று காலை 11 மணிக்கு ஆலோசனை நடத்தினர். இதில் அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்வர் எடியூரப்பா, சி.டி.ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related posts

ராஜஸ்தான் ராயல்சுக்கு தண்ணி காட்டும் வெற்றி

போரெல், ஸ்டப்ஸ் அதிரடி அரை சதம்; டெல்லி 208 ரன் குவிப்பு

பதஞ்சலி நிறுவன நீதிமன்ற அவமதிப்பு; வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு