சங்கரராமன் கொலை வழக்கில் சங்கராச்சாரியாரிடம் பேச்சு முன்னாள் மாவட்ட நீதிபதி பணி நீக்கம் சரியானதுதான்: சென்னை உயர் நீதிமன்ற அமர்வு தீர்ப்பு

சென்னை: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மடாதிபதியான சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி, சங்கர்ராமன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்தார். இந்த வழக்கு புதுச்சேரி நீதிமன்றத்தில் நீதிபதி ராமசாமி முன்பு விசாரணையில் இருந்தது. வழக்கு விசாரணை காலத்தில், அப்போது, ஈரோடு மாவட்டம், பவானியில் உள்ள ஐந்தாவது கூடுதல் மாவட்ட நீதிபதியாக பணியாற்றிய ராஜசேகரன், குற்றம் சாட்டப்பட்ட சங்கராச்சாரியார், உயர் நீதிமன்ற மதுரை கிளை பிரிவு அதிகாரி ரமேஷ்குமார் மற்றும் சங்கராச்சாரியாருக்கு வேண்டப்பட்ட கவுரி காமாட்சி ஆகியோருடன் தொலைபேசியில் பண பரிவர்த்தனை தொடர்பாக பேசியதாக புகார் கூறப்பட்டது.

இதுசம்பந்தமாக உயர் நீதிமன்றத்திற்கு 2 வழக்கறிஞர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது. மேலும், தொலைபேசியில் பேசிய பேச்சுக்கள் அடங்கிய கம்யூட்டர் டிஸ்க் மற்றும் புகார் தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்து, விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்வதற்காக அப்போதைய சைபர் கிரைம் உதவி கமிஷனர் சுதாகரை உயர் நீதிமன்றம் நியமித்தது. காவல் துறை அதிகாரி நடத்திய உண்மை கண்டறியும் விசாரணை அடிப்படையில் ராஜசேகரனுக்கு எதிராக துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.சதீஷ்குமார் விசாரணை நடத்தி உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தார்.

அதன்படி ராஜசேகரன் மீதான குற்றச்சாட்டில் முகாந்திரம் இருந்ததால் அவரை பணி நீக்கம் செய்ய உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழு அனுமதி அளித்தது. அதன்படி ராஜசேகரன் 2022 நவம்பரில் பணி நீக்கம் செய்யப்பட்டார். இந்த உத்தரவை எதிர்த்து முன்னாள் நீதிபதி ராஜசேகரன் தாக்கல் செய்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் கே.ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மிகுந்த நேர்மையுடன் நீதிபதிகள் இருக்க வேண்டும். இந்த வழக்கில் முன்னாள் நீதிபதி ராஜசேகரனின் நேர்மையை சந்தேகிக்கும் வகையில் கூறப்பட்ட குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளன. இதை உயர் நீதிமன்ற அனைத்து நீதிபதிகள் குழுவும் ஏற்றுள்ளது. எனவே, அவரை பணி நீக்கம் செய்த உத்தரவில் தலையிடமுடியாது. வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று தீர்ப்பளித்தனர்.

Related posts

குமரி மாவட்டத்தில் உணவு, காய்கறி கழிவில் இருந்து எரிவாயு தயாரிப்பு

110 ஆண்டுகளை கடந்த மண்டபம் ரயில் நிலையம் தரம் உயர்த்தப்படுமா?

ஆந்திர மாநில முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்றார்!