பொது இடத்தில் விதிமீறி கழிவுநீரை வெளியேற்றிய வாகனம் பறிமுதல்: தாம்பரம் மாநகராட்சி நடவடிக்கை

தாம்பரம்: தாம்பரம் – மதுரவாயல் புறவழிச் சாலையின் சர்வீஸ் சாலையில், விதிமீறி கழிவுநீரை வெளியேற்றிய வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கழிவுநீர் உந்து வாகனங்கள் இயங்க மாநகராட்சியிடம் உரிமம் பெற வேண்டும். அவ்வாறு உரிமம் பெறாத வாகனங்கள் தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இயங்க அனுமதி இல்லை. தமிழ்நாடு நகர்ப்புறம் மற்றும் சென்னைப் பெருநகர் பகுதிகள் கசடு மேலாண்மை விதிகள் 2022 மற்றும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசாணையின்படி, மாநகராட்சி உரிமம் பெற்ற கழிவுநீர் உந்து வாகனங்கள் மட்டுமே இயங்க அனுமதி வழங்க முடியும்.

மேலும், தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கழிவுநீர் அகற்றும் வாகனங்களை முறைப்படுத்தும் விதமாக கசடு கழிவு மேலாண்மை ஒழுங்கு விதி 2022ன்படி திறந்த வெளியில் கழிவுநீர் கொட்டுவது தடை செய்து சுத்திகரிப்பு நிலையங்களில் மட்டுமே கழிவுநீர் வெளியேற்ற வேண்டும் என கடந்த 12.1.2023 மற்றும் 24.1.2023 ஆகிய தேதிகளில் கூட்டம் நடத்தி தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், தாம்பரம் – மதுரவாயல் புறவழி சாலையின் சர்வீஸ் சாலையில் சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும் வகையில், லாரியில் இருந்து திறந்த வெளியில் கழிவுநீரை வெளியேற்றிய ஆர்.பி.என்டர்பிரைசஸ் நிறுவனத்தை நடத்தி வரும் எஸ்.ரவி என்பவருக்கு சொந்தமான (வாகன எண்: TN-46-0477) கழிவுநீர் லாரியை தாம்பரம் மாநகராட்சி பணியாளர்கள் பறிமுதல் செய்தனர்.

அதனைத் தொடர்ந்து தாம்பரம் மாநகர காவல் ஆணையராக எல்லைக்குட்பட்ட சங்கர் நகர் காவல் நிலையத்தில், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், கழிவுநீர் உந்து வாகன உரிமையாளர்கள் கழிவுநீரினை அப்புறப்படுத்திட அதற்கென அனுமதிக்கப்பட்டுள்ள இடத்தில் மட்டுமே அப்புறப்படுத்திட வேண்டும், பொது கால்வாய்களிலோ, நீர்நிலைகளிலோ, ஆற்றுப்படுகைகளிலோ கொட்டப்படுவது கண்டறியப்பட்டால் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு, உரிமையாளர் மீது சட்ட விதிகளுக்குட்பட்டு நடவடிக்கைகள், மாநகராட்சி மற்றும் காவல் துறை மூலம் மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

Related posts

உரம் பயன்பாட்டு திறனை அதிகரிக்கும் உத்திகள்: வேளாண்துறை அட்வைஸ்

திருச்சுழி-உடையானம்பட்டி இடையே குண்டாறு குறுக்கே உயர்மட்ட பாலம்: கட்டுமான பணிகள் விறுவிறுப்பு

பெண் அடித்து கொலை? கண்மாயில் உடல் மீட்பு