தமிழ்நாடு அமைதி பூங்காவாக இல்லை என்று கூறுவது யானையின் உருவத்தை கூறும் குருடர்களை போன்றது: ஆளுநருக்கு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி கண்டனம்

சென்னை: தமிழ்நாடு விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சித் தலைவர் பொன்குமார் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் அமைதி கெட்டு விட்டது என்று அச்சம் சிறிதுமின்றி ஆளுநர் கூறியிருப்பது அவருடைய அடாவடித்தனத்தின் உச்சமாகும். தமிழ்நாட்டில் அமைதி நிலவுவதால் தான் லட்சக்கணக்கான வடமாநிலத் தொழிலாளர்கள் இங்கே வந்து வாழ்வாதாரத்திற்காக பாதுகாப்பாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். கோடிக்கணக்கான அளவு அந்நிய முதலீடுகள் தமிழ்நாட்டில் செய்யப்பட்டு, புதிய தொழிற்சாலைகள் தொடங்கப்படுகின்றன. வேலைவாய்ப்பு பெருகி, பொருளாதாரம் மேம்பாடு அடைய தொழில்துறையில் புதிய சகாப்தத்தை படைத்து வருகிறது. எனவே தமிழ்நாடு எப்போதும் அமைதி பூங்கா தான். இங்கே மத மோதல்கள் இல்லை. மத மோதல்களை ஏற்படுத்த முயலும் கயவர்கள் முயற்சி அடியோடு தகர்க்கப்படுவதற்கு காரணம் தமிழ்நாடு எப்போதும் அமைதி பூங்கா என்பதால் தான்.

விரைவில் வர இருக்கிற நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் கால் பதிக்க துடிக்கும் பாஜகவின் முயற்சிக்கு உறுதுணையாக ஆளுநர் செயல்பட்டு வருகிறார் என்பது அப்பட்டமான உண்மையாகும். ஆளுநர் அரசியல் செய்ய விரும்பினால் ஆளுநர் மாளிகையை காலி செய்து விட்டு பாஜகவில் கொள்கைபரப்பு செயலாளராக செயல்படட்டும். அதை விட்டுவிட்டு தமிழ்நாட்டு மக்களுக்கு எதிரான செயல்பாடுகளில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் ஆளுநரை உடனடியாக ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும். 8 கோடி தமிழ் மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கக் கூடிய சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 17 மசோதாக்கள் மாதக்கணக்கில் ஆளுநர் மாளிகையில் தூங்கி கிடக்கிறது. அவற்றை சரி பார்த்து ஒப்புதல் அளிக்கும் வேலையை விட்டுவிட்டு அரசியல் களத்தில் பந்தாடி கொண்டிருப்பது அநாகரிகமான செயலாகும். இவர் தமிழ்நாட்டு ஆளுநரா? பாஜகவின் அண்ணாமலையா? என்பதை ஒன்றிய மோடி அரசு விளக்கிட வேண்டும்.

Related posts

கேரளாவில் இன்று மீண்டும் நில அதிர்வு: பொதுமக்கள் பீதி

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது

உளுந்தூர்பேட்டை அருகே மூதாட்டி வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் 6 பேர் கைது: 50 பவுன் நகை பறிமுதல்