கர்நாடக தேர்தலில் அடிசறுக்கி விழுந்த அண்ணாமலை ஐபிஎஸ் சாதித்த சசிகாந்த் செந்தில் ஐஏஎஸ்: பொறுப்புக் கொடுத்த இடங்கள் மொத்தமாக காலியானதால் பாஜ மேலிடம் கடும் அதிருப்தி

சென்னை: கர்நாடகா தேர்தலில் அண்ணாமலைக்கு வழங்கப்பட்ட தொகுதிகள் அனைத்திலும் பாஜ படுதோல்வியை சந்தித்துள்ளன. அதேநேரத்தில் மாநிலத்தில் ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியாக சாதித்துள்ளார் காங்கிரஸ் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட சசிகாந்த் செந்தில் ஐஏஎஸ் அதிகாரி. மக்களவை தேர்தல் நெருங்கி வரும்நிலையில், கர்நாடகாவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. குறிப்பாக பாஜ ஆட்சி செய்யும் மாநிலம் என்பதோடு, எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் அமலாக்கப்பிரிவு, வருமான வரித்துறை அதிகாரிகள் அடிக்கடி சோதனை என்ற பெயரில் ஒன்றிய அமைப்புகள் அச்சுறுத்தி வந்தன. இந்நிலையில், கர்நாடகாவில் பாஜவின் வெற்றி, தோல்வி என்பது தேசிய அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. மேலும் தென் மாநிலங்களில் பாஜ ஆட்சியில் இருக்கும் ஒரே மாநிலம் கர்நாடகாதான். இதனால்தான் இந்தமாநிலத்தின் வெற்றியை கவுரவ பிரச்னையாக ஆளும் பாஜ பார்த்தது.

அதோடு இந்த தேர்தலில் மாநில தலைவர்களை விட தேசியத் தலைவர்களான மோடி, அமித்ஷா ஆகியோரை முன்னிலைப்படுத்துவதாகவும் இருந்தது. இதனால் மாநிலத்தில் செல்வாக்காக இருந்த எடியூரப்பா மாற்றப்பட்டு பசவராஜ் பொம்மை முதல்வரானார். மேலும், தேர்தல் பொறுப்பு முழுவதும் எடியூரப்பாவிடம் ெகாடுக்காமல், ஆர்.எஸ்.எஸ்., பிரமுகரும் பாஜகவின் தேசிய பொதுச் செயலாளருமான பி.எல்.சந்தோஷிடம் வழங்கப்பட்டது. அவர், தேர்தல் பொறுப்பாளராக தமிழகத்தைச் சேர்ந்த அண்ணாமலையை நியமித்தார். அதற்கு முக்கிய காரணம், கர்நாடகாவில் அண்ணாமலை எஸ்பியாக பணியாற்றியவர். அங்கு வழக்கம்போல, ஆட்களை வைத்து தன்னை முன்னிலைப்படுத்தி, தனக்குத்தானே கர்நாடகா சிங்கம் என்று பெயர் சூட்டிக் கொண்டிருந்தார்.

இதனால் அவரை தேர்தல் பொறுப்பாளராக போட்டால், அவருடன் பணியில் சேர்ந்த பலரும் எஸ்பிக்களாக உள்ளனர். இதனால் அவர்கள் பாஜவுக்கு ஆதரவாக இருப்பார்கள். எதிரான புகார்களை கண்கொள்ளாமலும் செய்யலாம். அதோடு எதிர்கட்சிகளின் பிரசாரம் மற்றும் மற்றும் தேர்தல் பணிகளை முடக்கவும் செய்யலாம் என்று பாஜ கருதியது. இதனால் அண்ணாமலையை பொறுப்பாளராக போட்டது பாஜ மேலிடம். தேர்தல் ஒருங்கிணைப்பு, வார் ரூம் பணிகளோடு, சிவமோகா மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகள், மைசூர் மற்றம் அதை சுற்றியுள்ள 60 தொகுதிகளின் பொறுப்பாளராகவும் அண்ணாமலை நியமிக்கப்பட்டார். இதனால், கர்நாடகாவில் ஹெலிகாப்டரில் பறந்து, பறந்து பணியாற்றுவதாக சமூக வலைதளங்களில் அவரது ஆதரவாளர்கள் அள்ளி விட்டனர். ஆனால், வார் ரூம் முதல், அவருக்கு கொடுக்கப்பட்ட 67 தொகுதிகள், தேர்தல் ஒருங்கிணைப்பு பணிகள் அனைத்திலும் அவர் தோல்வி அடைந்து விட்டதாக தற்போது கர்நாடகா பாஜவினர் குற்றம்சாட்டினர்.

தேர்தலுக்கு முன்னரே, பாஜவில் இருந்து வெளியேறிய முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், என் முன்னால் கை கட்டி, எஸ்பியாக சல்யூட் அடித்த அண்ணாமலை முன்பு நான் நிற்க வேண்டுமா? சீட்டுக்காக 2வது வரிசையில் நான் உட்கார வேண்டுமா என்றெல்லாம் குற்றச்சாட்டுகளை தெரிவித்தார். இதனால் அவரது பொறுப்பில் உள்ள 67 தொகுதிகளுக்கும் அவர்தான் வேட்பாளரை தேர்வு செய்ததாகவும், அதில் பெரும்பாலான வேட்பாளர்கள் புதுமுகம் என்றும் கூறப்படுகிறது. இதனால், வேட்பாளரை அறிவித்தபோதே அவரது முடிவுக்கு எதிர்ப்பு ஏற்பட்டது. ஜெகதீஷ் ஷெட்டர் உள்பட பலரும் கட்சியில் இருந்து வெளியேறினர். அதோடு ஹெலிகாப்டரில் பணம் கொண்டு சென்றதாக அவர் மீது குற்றச்சாட்டும் எழுந்தது. அதில் முறையாக பணம் விநியோகம் நடைபெறவில்லை என்றும் குற்றம்சாட்டப்பட்டது.

தேர்தல் பணிகளிலும் பயங்கர குளறுபடி ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. தற்போது தேர்தல் முடிவுகள் வெளி வந்துள்ளன. அதில் ஷிமோகா மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளில் 5 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளன. மைசூர் மற்றும் அதை சுற்றியுள்ள 60 தொகுதிகளில் 53 தொகுதிகளில் பாஜ படுதோல்வியை சந்தித்துள்ளன. இது அண்ணாமலைக்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அவர் தமிழகத்தில் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டபோது ஒரு வார்டில் 3 வாக்குகள் மட்டுமே பெற்றதாக கூறப்பட்டது. அதேபோல இப்போது அவர் பொறுப்பாக வழங்கப்பட்ட தொகுதிகளில் 90 சதவீதத்துக்கும் மேல் பாஜ தோல்வியை சந்தித்துள்ளது. அண்ணாமலையிடம் பொறுப்பு கொடுத்ததால்தான் இந்த படுதோல்வி என்று கர்நாடகா பாஜவினர் தற்போது குற்றச்சாட்டை தொடங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் தொடர் தேர்தல் தோல்விகளை சந்தித்து வரும் அண்ணாமலை, தற்போது கர்நாடகா தேர்தலிலும் அடிசறுக்கி விழுந்து விட்டதாக தமிழக பாஜவில் உள்ள அவரது எதிராளிகளே கூறுகின்றனர்.

அதேநேரத்தில் அண்ணாமலைக்கு போட்டியாக கருதப்படும் தமிழக காங்கிரஸ் செய்தி தொடர்பாளாக உள்ள சசிகாந்த் செந்தில், கர்நாடகா மாநிலத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றியவர். பாஜ மீது அதிருப்தி ஏற்பட்டு பதவியை விட்டு விலகி காங்கிரசில் சேர்ந்தார். அவர், தற்போது ராகுலுக்கு நெருக்கமானவராக உள்ளார். இதனால் கர்நாடகாவில் வார் ரூம் பொறுப்பாளராக சசிகாந்த் செந்தில் நியமிக்கப்பட்டார். வேகமாகவும், விவேகமாகவும் செயல்படக்கூடிய சசிகாந்த் செந்தில், கலெக்டர்கள், எஸ்பிக்களுடன் ஒருங்கிணைப்பு, செல்வாக்கு இல்லாத பகுதிகளில் ராகுல், பிரியங்கா, சோனியா ஆகியோரின் பிரசாரத்தை நடத்தி, அங்கு காங்கிரஸ் அதிக இடங்களை கைப்பற்றுவதற்கு திட்டம் தீட்டி செயல்பட்டு வந்தார். ராகுலின் தேர்தல் பிரசாரத்தை ஒருங்கிணைப்பது, எப்படி பிரசாரம் செய்வது என்பதையும் அவர் திட்டமிட்டு செயல்பட்டார்.

அதோடு, கர்நாடகாவில் ‘பே-சிஎம்’ என்ற க்யூ ஆர் கோடு என்ற போஸ்டர்களை மாநிலம் முழுவதும் ஒட்டுவதற்கான ஐடியாவை சசிகாந்த் செந்தில் கொடுத்து, அதை செயல்படுத்தினார். இதனால் அந்த போஸ்டரில் உள்ள க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்தால், பாஜவினர் செய்த ஊழல், 40 சதவீதம் கமிஷன் கேட்டது என்று அனைத்து விவரங்களும் செல்போனுக்கு வந்து விடும்படி செய்தார். இந்த பிரசாரம் பெரிய அளவில் காங்கிரசுக்கு கை கொடுத்தது. இதனால் அரசை 40 சதவீதம் கமிஷன் அரசு என்று மக்களே குற்றம்சாட்டும் அளவுக்கு அவரது பிரசார திட்டங்கள் இருந்தது. இதனால் வார் ரூமில் இருந்தபடி பாஜவுக்கு எதிரான மீம்ஸ்களை போடுவது போன்ற பணிகளையும் அவர் செய்தார்.

இதற்காக கார்ப்பரேட் கம்பெனி அளவுக்கு ஒரு தனியாக அலுவலகத்தையே கர்நாடகாவில் அமைத்தார். தற்போது அவரது செயல்பாடும் வெற்றிக்கு ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது. இதனால் கர்நாடகாவில் பணியாற்றிய இரு தமிழக அதிகாரிகளுக்கு, இரு கட்சிகளும் தேர்தல் பொறுப்பு கொடுத்ததும், அதில் ஒருவரான அண்ணாமலை அடிசறுக்கி விழுந்துள்ளதும், சசிகாந்த் செந்தில் சாதித்து காட்டியதும் தற்போது வலை தளங்களில் பரபரப்பாக பகிரப்பட்டு வருகிறது. அதேநேரத்தில் கர்நாடகா மாநில தேர்தல் தோல்வியால் பொறுப்பாளராக செயல்பட்ட பி.எல்.சந்தோஷ் மற்றும் அவரது சிஷ்யரான அண்ணாமலை ஆகியோர் மீது கட்சி நடவடிக்கை எடுக்கும் என்றும் மேலிட தலைவர்கள் கூறுகின்றனர். இதுவும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

Related posts

கனகம்மாசத்திரம் சாலையில் வேரோடு பெயர்ந்து விழுந்த நூறாண்டு புளியமரம்: உயிர் தப்பிய வாகன ஓட்டிகள்

திருத்தணி முருகன் கோயிலில் தரிசனம் செய்த 750 பக்தர்களுக்கு மஞ்சப்பை

கேரளாவில் டெங்கு பரவுகிறது: 4 மாதங்களில் 43 பேர் பலி