ரூ.400 கோடி நிதிநிறுவன மோசடி வழக்கில் பறிமுதல் செய்த நிலத்திலிருந்து ரூ.10 கோடிக்கு மணல் திருட்டு: உள்துறை செயலர், டிஜிபியிடம் புகார்

மதுரை: நிதி மோசடி வழக்கில் பறிமுதலாகி, நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்ட நிலத்தில் மணல் திருட்டை தடுக்க வேண்டுமென மனு அளிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் மணக்குடியைச் சேர்ந்த சுப்பையா, உள்துறை செயலர், டிஜிபி, சிவகங்கை டிஆர்ஓ, பொருளாதார குற்றப்பிரிவு ஏடிஜிபி உள்ளிட்டோருக்கு அனுப்பியுள்ள புகார் மனு: சிவகங்கை மாவட்டம், காரைக்குடியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட ஆலயம் நிதி நிறுவனத்தில் ரூ,2 லட்சம் முதலீடு செய்துள்ளேன். ரூ.400 கோடி வரை வசூலித்த நிலையில், முதிர்வுத் தொகையை திருப்பி தராமல் மோசடி செய்தனர். இந்த நிறுவனத்திற்கு ெசாந்தமாக ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகேயுள்ள பரப்புவயல் என்ற இடத்தில் 37 ஏக்கர் நிலம் உள்ளது. இதன் அருகே 40 ஏக்கர் அனுபவ மேய்ச்சல் நிலமும் உள்ளது. இந்தநிலம் பொருளாதார குற்றப்பிரிவினரால் கைப்பற்றப்பட்டு, நிலத்தின் ஆவணங்கள் மதுரை டான்பிட் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த நிலத்தில் அதிகளவில் மணல் நிறைந்துள்ளது.

இதை கடந்த சில மாதங்களாக கனரக வாகனங்கள் மூலம் சிலர் வெட்டி எடுத்து கடத்தி வருகின்றனர். இதுவரை சுமார் ரூ.10 கோடி மதிப்பிலான மணல் எடுத்து கடத்தப்பட்டுள்ளது. அருகிலுள்ள ஊர்களுக்கு கொண்டு சென்று இரவு நேரங்களில் விற்பனை செய்கின்றனர். அதிகளவு மணல் அள்ளப்பட்டுள்ளதால், நிலத்தில் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. மணல் திருட்டால் நீதிமன்றத்தின் மூலம் விற்பனை செய்யும் போது இந்த நிலம் குறைவான விலைக்கே போகும். இதனால், முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பி கொடுக்கும் போது தேவை அதிகரிக்கும். நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்ட நிலத்தில் மணல் திருட்டில் ஈடுபட்டுள்ளவர்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

 

Related posts

2018 தேர்தல் வேட்பு மனுவில் ரகசிய மகளின் பெயரை மறைத்த இம்ரான் கான்: உச்ச நீதிமன்றத்தில மேல்முறையீடு

காசா மக்களுக்கு உதவிகள் கிடைப்பதற்கு பகல் நேரத்தில் சண்டை நிறுத்தம்: இஸ்ரேல் அறிவிப்பு

காதலுக்கு வயது தடையில்லை 80 வயது தாத்தாவை காதலித்து மணந்த 23 வயது இளம்பெண்