சால்ட் and பெப்பர் ஹிஸ்டரி!

உணவுக்கும் உப்புக்கும் நீண்ட நாள் பந்தம் உண்டு. மனித கண்டுபிடிப்புகளில் மிக முக்கியமானவை என பட்டியலிட்டால் உப்புக்கு ஒரு தனியிடம் உண்டு. சமையலில் சில பொருட்களைத் தவிர்த்து, சில பொருட்களைச் சேர்ப்போம். ஆனால் தவிர்க்கவே முடியாது என சொல்லப்படுவது உப்பாகத்தான் இருக்கும். இதனால்தான் உப்பில்லா பண்டம் குப்பையிலே என சொல்லி வைத்திருக்கிறார்கள் நம் முன்னோர். நாம் அன்றாடம் சாப்பிடும் எந்த உணவாக இருந்தாலும், அதில் கட்டாயம் உப்பு இடம்பெற்றிருக்கும். சிறுநீரக பாதிப்பு உள்ளிட்ட ஒருசில நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமே உப்பைத் தவிர்க்க வேண்டி இருக்கும். ஆனாலும் அவர்கள் உப்பை ரொம்பவே மிஸ் செய்ய வேண்டி இருக்கும். மற்ற யாராக இருந்தாலும் உப்பு இல்லாமல் எந்த உணவையும் சாப்பிட மாட்டார்கள். எந்த வகை உணவாக இருந்தாலும் சரியான அளவில் உப்பு இருந்தால்தான் அதனை சுவைத்துச் சாப்பிட முடியும். உப்பு இல்லையென்றால் சில வீடுகளில் அடிதடியே நடப்பதுண்டு. சாப்பிடாமல் கோபித்துக்கொண்டு வெளியே செல்பவர்களும் இருக்கிறார்கள். ஏனென்றால் உப்பில்லாத சமையல் முறை மிக மிக தப்பு என நினைப்பவர்களே அதிகம். உப்புக்கு இவ்வளவு முக்கியத்துவம் இருக்கிறது.

இது எல்லாம் நமக்குத் தெரிந்ததுதான். உப்பு குறித்து சில சுவாரஸ்ய தகவல்கள் இருக்கின்றன. அதையும் கொஞ்சம்அறிந்துகொள்ளுங்கள். பல்லாயிரம் ஆண்டு வரலாறுஇன்று, நேற்றல்ல. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மனிதன் தனது உணவுகளில் உப்பைப் பயன்படுத்தத் தொடங்கி இருப்பதாக வரலாறுதெரிவிக்கிறது. இதற்கு பல்வேறு சான்றுகளும் இருக்கின்றன. இதற்கு ரோமானியர்களின் ஒரு சுவாரஸ்யமான கதையை முதலில் அறிவோம்.பழைய காலத்தில் இருந்தது முழுக்க முழுக்க வேட்டைச் சமூகம்தான். சுமார் 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பண்டைய ரோமானியர்களும் தங்கள் உணவிற்காக விலங்குகளை வேட்டையாடியுள்ளனர். அவர்கள் விலங்குகளை வேட்டையாடி, அவற்றை நெருப்பில் சுட்டுச் சாப்பிடும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர். அப்போது கடல்புறங்களில் வசித்தவர்கள் தங்கள் இறைச்சிகளைக் கடல் நீர் கொண்டு வேக வைத்துச் சாப்பிட்டு இருக்கிறார்கள். கடல் நீரில் இருந்த உப்புத்தன்மை இறைச்சியில் இறங்கி, இறைச்சிக்கு புது விதமான சுவையைக் கொடுத்திருக்கிறது. மேலும், தங்களின் உணவுத் தேவைக்குப் போக மீதுமுள்ள இறைச்சிகளைக் கடல் ஓரங்களில் இருந்த உப்பு படிந்த பாறைகள் மீது வைத்திருக்கிறார்கள்.

அப்படி வைத்த இறைச்சிகள் நீண்டநாள் வரை கெட்டுப்போகாமல் இருந்ததைக் கண்டு ஆச்சரியம் அடைந்து இருக்கிறார்கள். உணவுக்கு உப்பு ஒரு புதுவிதமான சுவையைத் தருவதோடு, உணவைக் கெட்டுப்போகாமலும்பாதுகாக்கும் என அப்போது அறிந்திருக்கிறார்கள். அந்த நாளில் இருந்து உப்புப் பயன்பாடு உணவில் வந்துள்ளதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உப்பு கண்டுபிடிக்கப்பட்டதற்கு இன்னொரு கதையும் சொல்கிறார்கள். சுமார் 8 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ருமேனியா நாட்டின் ஒரு பகுதியில் வாழ்ந்த மக்கள் ஊற்றுநீரை கொதிக்க வைக்கும்போது உப்பு உருவாவதை கண்டுபிடித்து இருக்கின்றனர். அந்த உப்பைப் பிரித்தெடுத்து உணவில் பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. சீனாவிலும் இதே காலகட்டத்தில்தான் உப்பு உற்பத்திப் பணிகள் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. உலகில் சீனாதான் முதன்முதலாக உப்பை உற்பத்தி செய்த நாடு எனவும் கூறப்படுகிறது. உலகம் முழுவதும் கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் கடல் நீரைக் கொண்டே உப்பு உற்பத்தி செய்கிறார்கள். உலக அளவில் உப்பு உற்பத்தியில் சீனாதான் இன்றும் முதலிடத்தில் இருக்கிறது. இரண்டாவது இடம் அமெரிக்காவுக்கு. நமது இந்தியா மூன்றாவது இடத்தில் இருக்கிறது. மொத்தம் 6.9 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பில் ஆண்டுக்கு சராசரியாக 215.86 லட்சம் டன் உப்பு உற்பத்திசெய்யப்படுகிறது. பண்டைய காலத்தில் கிரேக்கர்கள், ரோமானியர்கள், எகிப்தியர்கள், மற்றும் இந்தியர்களின் வணிகத்தில் உப்பு ஒரு முக்கியமான இடத்தைப்பிடித்திருக்கிறது.

கடல் உப்பானது நாணயத்தின் ஒரு வடிவமாகவே பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. பண்டைய ரோமில் படை வீரர்களுக்கு சில சமயங்களில் உப்புதான் ஊதியமாக வழங்கப்பட்டு இருக்கிறது. அந்தக்காலகட்டத்தில்தான் ”சம்பளம்“என்ற வார்த்தை தோன்றியதாகவும் சான்றுகள் தெரிவிக்கின்றன. தமிழகத்தைப் பொருத்தவரை உப்பிற்கும், மன்னர்களின் ஆட்சிக்கும் முக்கிய தொடர்பு இருக்கிறது. சங்க காலத்தில் உப்பு விற்பவர்களை உமணர்கள் எனக் குறிப்பிடுவார்கள். இவர்கள் ஊர் ஊராக பயணித்து உப்பை விற்பனை செய்ததுடன், ஒவ்வொரு ஊருக்கும் இடையில் தகவல்களைப் பரிமாறுபவர்களாகவும் இருந்திருக்கிறார்கள். பெண் எடுப்பது, பெண் கொடுப்பது போன்றவற்றுக்கு இவர்களே உரிய தகவல்களை வழங்கி இருக்கிறார்கள். ஆட்சிக்கு இடையூறாக இருக்கும் விஷயங்கள் குறித்து உளவாளிகள் போல கவனித்துச் சொல்வதும் உமணர்களின் வேலைதான். சோழர்களும், பாண்டிய மன்னர்களும் தங்களின் கட்டுப்பாட்டிற்கு கீழேயே உப்புத்தொழிலை வைத்திருந்து இருக்கிறார்கள். மன்னர்களின் பட்டப்பெயர்கள் உப்பளங்களுக்கு பெயர்களாக சூட்டப்பட்டு இருக்கின்றன. கிறிஸ்து பிறப்புக்கு முன்பு உப்பு யாரிடம் அதிகம் இருந்ததோ அவர்களே செல்வந்தர்களாக கருதப்பட்டு இருக்கிறார்கள்.

உப்புக்காக சீனாவில் போரே மூண்டிருக்கிறது. ஷாங்க்ஷி எனும் மாகாணத்தில் இருந்த உப்பு ஏரி ஒன்றில் படிந்திருந்த உப்பை மக்கள் சேகரித்து வாழ்ந்து வந்திருக்கிறார்கள். அந்த உப்பை தங்களின் வசமாக்கவே அரசர்கள் போர் நடத்தியதாக கூறப்படுகிறது. மதத்திற்கும் உப்புக்கும் கூட தொடர்பு இருக்கிறது. தீய சக்திகளை விரட்டும் எல்லா சடங்குகளிலும் உப்புக்கென்று ஒரு முக்கிய இடத்தை வழங்கி இருக்கிறார்கள். எகிப்தியர்கள், கிரேக்கர்கள், ரோமானியர்கள், ஜப்பானியர்கள் என பல்வேறு நாட்டினர் உப்பை கடவுளுக்கு வைத்து படைத்திருக்கிறார்கள். புத்த மதத்தில், இறந்த வீட்டுக்கு சென்று திரும்பும்போது உப்பை அள்ளி தலையைச் சுற்றி விட்டு தூர எறிவார்களாம். அப்படி செய்யவில்லையெனில், இறந்துபோனவர் உடலில் இருந்து ஆவி வெளியேறி தங்களுடைய முதுகில் ஏறி கூடவே வந்துவிடும் எனவும், அதை தடுக்க உப்பைச் சுற்றி எறிவதாகவும் கூறப்படுகிறது. இன்றும் நமது கிராமப்புறங்களில் உப்பு, மிளகாய் ஆகியவற்றை வைத்து குழந்தைகளுக்கு சுற்றிப்போடும் வழக்கத்தை வைத்திருக்கிறார்கள். ஜப்பானியர்கள் தங்களுடைய உணவகங்களுக்கு வெளியே உப்பை வைத்திருப்பார்கள். கடலுக்கு நன்றி கூறவும், மண்ணைத் தூய்மையாக வைப்பதை நினைவூட்டவும் இவ்வாறு உப்பை வெளியில் வைப்பார்களாம்.

நமது ஊர்களில் கூட பண்டைய காலத்தில் உப்பின் தேவையை மனதில் வைத்து கடைகளுக்கு வெளியில் உப்பைவைப்பார்களாம். இரவில் கடையை மூடினாலும் தேவைப்படுபவர்கள் வந்து எடுத்து கொள்ளவே இவ்வாறு செய்திருக்கிறார்கள். காலப்போக்கில் இரவில் இரவல் கொடுக்கக்கூடாது என மக்கள் கருதத் தொடங்கிய பின்னர் இந்தப் பழக்கம் குறையத் தொடங்கி இருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு மாட்டு வண்டியில் உப்பு மூட்டையை ஏற்றிக்கொண்டு வீடு வீடாக கிராமங்களில் விற்பனை செய்ய வருவார்கள். அப்போது உப்பினை வாங்கிக் கொண்டு அதற்கு மாற்றாக நெல், கோதுமை, கம்பு, கேழ்வரகு உள்ளிட்ட தானியங்களை கிராம மக்கள் கொடுப்பார்கள். இப்படி பண்டமாற்று முறையில்தான் ஆரம்பத்தில் உப்பு வியாபாரம் நடைபெற்று வந்தது. பின்னர் சைக்கிள்களில் உப்பு மூட்டையை ஏற்றிக்கொண்டு உப்பு உப்பே என விற்பார்கள். ஒரு படி உப்பு இவ்வளவு ரூபாய் என விலை கொடுத்து மக்கள் முறத்தில் வாங்கிச் செல்வார்கள். பின்னர் அந்த உப்பை சட்டியிலோ, உப்பு ஜாடியிலோ போட்டு பயன்படுத்துவார்கள். அயோடின் கலந்த உப்பே சிறந்தது என அறிவுரைகள் பெருகியதால் தற்போது அனைவரும் பாக்கெட் உப்புக்கு மாறி இருக்கிறார்கள்.

 

Related posts

திமுக இளைஞர் அணி நிர்வாகிகளுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை

லஞ்சம் பெற்றுக்கொண்டு வழக்குப்பதிய குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் பரிந்துரை பெண் வழக்கறிஞருக்கு எதிரான போக்சோ வழக்கு ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

விளையாட்டு விடுதி மாணவர்கள் சேர்க்கைக்கான மாநில அளவிலான தேர்வுகள் ஒத்திவைப்பு