ரஷ்ய ராணுவத்தில் உதவியாளர்களாக வேலை பார்த்த இந்தியர்கள் விடுவிப்பு: வெளியுறவு அமைச்சகம் தகவல்

புதுடெல்லி: ரஷ்ய ராணுவத்தில் உதவியாளர்களாக வேலை பார்த்தவர்கள் இந்தியாவின் கோரிக்கையை அடுத்து விடுவிக்கப்பட்டுள்ளனர் என ஒன்றிய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ரஷ்யாவில்,ராணுவ உதவியாளர் மற்றும் பாதுகாவலர் வேலைக்கு சென்றவர்கள் உக்ரைன் ராணுவத்துடனான போரில் பங்கேற்க நிர்ப்பந்திக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

குஜராத்தில் இருந்து அவ்வாறு வேலைக்கு சென்ற ஒருவர் ரஷ்ய எல்லையில் நடந்த சண்டையில் டிரோன் தாக்குதலில் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.அதே போல் நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் ஏஜென்ட்டுகளால் ஏமாற்றப்பட்டு ரஷ்ய ராணுவத்தில் உதவியாளர்களாக பணிபுரிய அனுப்பப்பட்டதாக தகவல்கள் வந்தன. கடந்தவாரம் இது பற்றி பேசிய ஒன்றிய வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால்,‘‘ரஷ்ய ராணுவத்தில் உதவியாளர்களாக பணிபுரிய இந்தியர்கள் சிலர் ஒப்பந்தம் செய்துள்ளதாக அறிந்தோம். அவர்களை பணியில் இருந்து விடுவிப்பது தொடர்பாக ரஷ்யாவில் உள்ள இந்திய தூதரகம் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசி வருகிறது. போர் நடக்கும் பகுதிகளில் இருந்து இந்தியர்கள் வெளியேற வேண்டும்’’ என்றார். இந்நிலையில் இந்திய துாதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரஷ்ய ராணுவத்தில் உள்ள இந்தியர்கள் தங்களை காப்பாற்றும்படி கோரிக்கை விடுத்துள்ளதாக மீடியாக்களில் செய்தி வெளியாகி உள்ளன.

இது தொடர்பாக வரும் ஒவ்வொரு புகார்கள் குறித்தும் ரஷ்ய அதிகாரிகளுடன் இந்திய அதிகாரிகள் தொடர்பு கொண்டு பேசினர். அதே போல் டெல்லியில் உள்ள ரஷ்ய தூதரக அதிகாரிகளின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதன் பயனாக ரஷ்ய ராணுவத்தில் இருந்த பல இந்தியர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளது.

Related posts

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டரின் உடைந்த பாகங்கள் கண்டெடுப்பு!

மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்: மீன்வளத்துறை எச்சரிக்கை!

மக்களவை தேர்தலுக்கான 5-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!