ரூ.1,000 கோடி மதிப்பிலான 110 கிரவுண்ட் நிலத்தை மீட்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கலாம்: தோட்டக்கலை சங்கத்தின் மேல்முறையீடு தள்ளுபடி

சென்னை: சென்னை கதீட்ரல் சாலை ஆக்கிரமிப்பு விவகாரம் தொடர்பாக தோட்டக்கலை சங்கத்தின் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை அண்ணா மேம்பாலத்தை ஒட்டிய கதீட்ரல் சாலையில் தமிழக அரசுக்கு சொந்தமான நிலத்தில் அதிமுக பிரமுகரான தோட்டக்கலை வி.கிருஷ்ணமூர்த்தி என்பவர் தோட்டக்கலை சங்கம் என்ற அமைப்பை உருவாக்கி நிர்வகித்து வந்தார். தமிழக அரசுக்கு சொந்தமான இந்த நிலத்தை மீட்க கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக அரசு தரப்பில் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், ரூ.1,000 கோடி மதிப்பிலான 110 கிரவுண்ட் நிலத்தை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் கடந்த சில வாரங்களுக்கு முன் உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவுக்கு எதிராக தோட்டக்கலை சங்கம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி தினேஷ் மகேஸ்வரி தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் வில்சன் மற்றும் குமணன் ஆகியோர், “இந்த விவகாரத்தை பொறுத்தமட்டில் உயர் நீதிமன்றம் விரிவாக விசாரித்துதான் தெளிவான உத்தரவை பிறப்பித்துள்ளது” என தெரிவித்தனர். இதை ஏற்பதாக தெரிவித்த நீதிபதிகள், “தமிழக அரசின் சார்பில் மனுதாரர் இந்த விவகாரத்தில் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவர் அதற்கு எந்தவித விளக்கங்களையோ, ஆவணங்களையோ ஏன் தாக்கல் செய்யவில்லை” என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Related posts

இளைஞர் கொலை வழக்கில் சிறுவன் உள்பட 3 பேர் கைது..!!

நகை கடை நடத்தி ரூ.100 கோடி மோசடி: தலைமறைவாக இருந்த உரிமையாளர் கைது

அரைவேக்காடு அண்ணாமலையுடன் எப்படி விவாதிப்பது?: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆவேச பேட்டி