ரோடு ஷோ நடத்தினால் மக்கள் ஓட்டு போடுவார்களா?..பேட்டி கொடுத்தால் மக்கள் ஆதரவு தருவார்களா?: பாஜக அரசு மீது எடப்பாடி பழனிசாமி சரமாரி குற்றச்சாட்டு

கோவை: பொள்ளாச்சியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார். பொள்ளாச்சி தொகுதி அதிமுக வேட்பாளர் கார்த்திகேயனை ஆதரித்து வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, தேர்தல் பிரசார கூட்டம் அல்ல, வெற்றி விழா கூட்டம் போல் காட்சியளிக்கிறது. அதிமுகவை உடைக்க நினைத்த அத்தனை முயற்சிகளும் முறியடிக்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மக்களுக்காகவே வாழ்ந்தார்கள். தமிழ்நாட்டில் 30 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த கட்சி அதிமுக. தமிழகம் முதன்மை மாநிலமாக இருப்பதற்கு காரணம் அதிமுக தான். தமிழ்நாட்டில் உழைப்பவர்களுக்கு தான் மரியாதை உண்டு என தெரிவித்தார்.

ரோடு ஷோ நடத்தினால் மக்கள் ஓட்டு போடுவார்களா?

பிரதமர் மோடியின் ஏமாற்று வேலை தமிழ்நாட்டில் எடுபடாது என்று எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார். விமானத்தில் இருந்து வந்து இறங்கி ரோடு ஷோ நடத்தினால் மக்கள் ஓட்டு போட்டு விடுவார்களா? டெல்லியில் இருந்து அடிக்கடி தமிழ்நாடு வருகிறார்கள்; வந்து என்ன பயன்? என்றும் கேள்வி எழுப்பினார்.

பேட்டி கொடுத்தால் மக்கள் ஆதரவு தருவார்களா?

பேட்டி மட்டுமே கொடுத்து மக்களிடம் வாக்குகளை பெற முயற்சிப்பது எடுபடாது. பேட்டி கொடுத்தே ஒருவர் மக்களை ஈர்க்கப் பார்க்கிறார் என்று அண்ணாமலை மீது எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்தார். நான் இதைச் செய்வேன், அதைச் செய்வேன் என்று அண்ணாமலை தினமும் பேசி வருகிறார். மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தி அரசியல் ஆதாயம் தேட நினைக்கிறார்கள். எத்தனை தலைவர்கள் வந்தாலும் அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

பாஜக அரசு மீது எடப்பாடி சரமாரி குற்றச்சாட்டு:

காவிரி வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை நிறைவேற்ற ஒன்றிய பாஜக அரசு காலதாமதம் செய்தது என்று எடப்பாடி குற்றம்சாட்டியுள்ளார். கூட்டணியில் இருந்தபோதே தமிழ்நாடு சார்ந்த பிரச்சனைகளை பாஜக அரசு தீர்க்கவில்லை. மக்களையும், விவசாயிகளையும் பாஜக ஏமாற்றுவதாக எடப்பாடி பழனிசாமி பரபரப்பு குற்றம்சாட்டினார். நாங்கள் கூட்டணியில் இருந்தபோதே தீர்க்காத பிரச்சனைகளை தற்போது தீர்ப்பதாக பாஜக கூறுகிறது. மேகதாது விவகாரத்தில் ஒன்றிய பாஜக அரசு தலையிட்டு முடிவுக்கு கொண்டு வரவில்லை என்றும் எடப்பாடி தெரிவித்தார்.

மேகதாது விவகாரத்தில் அண்ணாமலை மவுனம்:

கர்நாடகாவில் பாஜக ஆட்சி செய்தபோதும் மேகதாது அணை கட்டப்படும் என்றே சொன்னது. பாஜக ஆட்சியில் மேகதாது அணை கட்டப்படுமென்று சொன்னபோது அண்ணாமலை எதுவும் சொல்லவில்லை. உச்சநீதிமன்ற தீர்ப்பை யாரும் மீறக் கூடாது என்று பிரதமர் மோடி கூறினாரா? என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். 2 மாநில முதல்வர்கள் பேசித் தீர்க்க வேண்டிய பிரச்னைகளை மத்திய அரசு எப்படி தீர்ப்பதாக வாக்குறுதி தரலாம்.

மேகதாதுவில் அணை கட்ட முடியாது என்று பிரதமரோ, ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரோ சொல்வார்களா? என வினவினார். ஆனைமலை – நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற பாடுபட்டது அதிமுக அரசு. கர்நாடக துணை முதல்வர் மேகதாது அணையை கட்டியே தீருவேன் என்று சொல்கிறார் என தெரிவித்தார்.

Related posts

குவைத் தீ விபத்தில் இந்தியர்கள் 40 பேர் உயிரிழந்ததை அடுத்து அந்நாட்டுக்கு விரைகிறார் ஒன்றிய வெளியுறவு இணை அமைச்சர் கே.வி.சிங்

குவைத் தீ விபத்தில் இந்தியர்கள் 40 பேர் உயிரிழந்ததை அடுத்து அந்நாட்டுக்கு விரைகிறார் வெளியுறவு இணை அமைச்சர்

சில்லறை பணவீக்க விகிதம் 4.75%ஆக குறைந்தது: ஒன்றிய அரசு தகவல்