அரசியலில் ஈடுபடுவதற்கான சூழல் இருந்தால் தமிழ்நாடு ஆளுநர் மாளிகையை ஆர்.என்.ரவி பயன்படுத்த கூடாது: அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்

சென்னை: ஆளுநர் அரசியல் ரீதியான கருத்துகளை கூறுவது சரியல்ல. அரசியலில் ஈடுபடுவதற்கான சூழல் இருந்தால் தமிழ்நாடு ஆளுநர் மாளிகையை ஆர்.என்.ரவி பயன்படுத்திக் கொள்ளக்கூடாது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னை தலைமை செயலகத்தில் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி முழு அரசியல்வாதியாக மாறி வருகிறார். ஊட்டியில் நடந்த துணைவேந்தர்கள் மாநாட்டில் அரசியல் பேசி உள்ளார். தமிழகத்தில் கல்வி சூழ்நிலை சரியில்லை என்பதை போன்றும், வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை என்றும், தொழில் முதலீடு என்பது ஒரு நாட்டுக்கு பயணம் மேற்கொள்வதன் மூலம் வந்து விடாது என்றும் பேசி உள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் மேற்கொண்ட வெளிநாட்டு பயணத்தை சுட்டிக்காட்டி ஆளுநர் பேசி உள்ளார். துணைவேந்தர்கள் மாநாட்டை முழுக்க முழுக்க அரசியலுக்காக கவர்னர் பயன்படுத்தி உள்ளார். ஏற்கனவே சில பிரச்னைகளில் ஆளுநர் தெரிவித்த கருத்துகள் அவருக்கு எதிராகவே இருப்பதால் அதனை திசை திருப்புவதற்காகவே ஆளுநர் இவ்வாறு செயல்படுகிறார் என்று சந்தேகப்படுகிறேன். ஒன்றிய அரசின் தரவரிசை பட்டியலில் இந்தியாவில் உள்ள 100 பல்கலைக்கழகங்களில் 22 பல்கலைக்கழகங்கள் தமிழகத்தில் உள்ளது. சிறந்த கல்லூரிகளை பொறுத்தமட்டில் 100 கல்லூரிகளில் தமிழகத்தை சேர்ந்த 30 கல்லூரிகள் தரவரிசை பட்டியலில் முன்னிலையில் உள்ளன.

தமிழ்நாட்டில் கல்வி சூழ்நிலை கட்டமைப்பு நன்றாக இருக்கின்ற காரணத்தினால்தான் தரவரிசை பட்டியலில் தமிழக பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் இடம்பெற்றுள்ளன. பல்கலைக்கழகங்களின் வேந்தராக இருக்கக்கூடிய ஆளுநர் எப்படி இந்த உண்மைகளையெல்லாம் மறைத்து விட்டு பேசுகிறார். கல்வியில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது என்பதை ஆளுநர் அறியவில்லையோ அல்லது அறிந்தும் அறியாதது போன்று பேசுகிறாரா? என தெரியவில்லை. வெளிநாடுகளுக்கு சென்று வந்தால் முதலீடுகள் வந்து விடுமா என்ற ஒரு கேள்வியை ஆளுநர் எழுப்பி உள்ளார். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை 108 நிறுவனங்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 81 ஆயிரம் கோடி அளவுக்கு முதலீடுகள் பெறப்பட்டு 1 லட்சத்து 94 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கி கொடுத்துள்ளோம்.

தமிழ்நாடு பொருளாதார ரீதியில் முன்னிலையில் இருக்கும் மாநிலம் என நிதி ஆயோக் கூறி இருக்கிறது. இப்படி இருக்கும்போது தமிழ்நாட்டில் கல்வி சூழல் சரியில்லை, வேலைவாய்ப்பு உருவாக்கப்படவில்லை என பேசுவதா?. தமிழ்நாட்டின் கல்வி வரலாற்றை ஆளுநர் அறிந்து கொள்ளாமல் பேசுகிறார். மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் கல்வி கட்டமைப்பில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலினின் வெளிநாட்டு பயணத்தை கொச்சைப்படுத்தி ஆளுநர் பேசியதை ஏற்க முடியாது. இதுபோன்ற பயணங்களை தமிழக முதல்வர் மட்டுமா மேற்கொண்டு இருக்கிறார்.

பிரதமர் மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது, சிங்கப்பூர், ஜப்பான், சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு தொழில் முதலீட்டை ஈர்க்க பயணம் மேற்கொண்டுள்ளார். ஆளுநர் தற்போது எழுப்பி உள்ள கேள்வி எங்களை முன்னிறுத்தி பிரதமரை நோக்கி எழுப்பி உள்ளாரோ என்ற சந்தேகம் உள்ளது. எனவே, பாஜவினர் தான் இதுகுறித்து ஆளுநரிடம் கேட்க வேண்டும். எங்களை பொறுத்தமட்டில் நாட்டின் வளர்ச்சிக்காக தொழில் முதலீட்டுக்காக இத்தகைய பயணங்களை மேற்கொள்கிறோம். அப்படி பயணங்களை மேற்கொண்டதன் விளைவு என்ன என்பதை தான் பார்க்க வேண்டும்.

முதல்வரின் ஜப்பான், சிங்கப்பூர் பயணத்தின் மூலம் ரூ.3 ஆயிரம் கோடிக்கு மேல் முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளன. உலகளாவிய நிறுவனங்கள் தொழில் தொடங்க முன்வந்துள்ளன. தொழில் தொடங்க உகந்த மாநிலமாக தமிழகம் திகழுகிறது. உகந்த சூழல் காரணமாக தமிழகத்தை நோக்கி உலக முதலீட்டாளர்கள் படையெடுக்கிறார்கள். கல்வி, தொழில், வேலைவாய்ப்பில் உயர்ந்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. ஆளுநர் அரசியல் ரீதியான கருத்துகளை கூறுவது சரியல்ல. அரசியலில் ஈடுபடுவதற்கான சூழல் இருந்தால் ஆளுநர் மாளிகையை அவர் பயன்படுத்தி கொள்ளக்கூடாது.

ஆளுநர் ஏற்கனவே கூறி உள்ள கருத்துகளை திசை திருப்புவதற்காக உண்மைக்கு மாறான கருத்துகளை தொடர்ந்து கூறி வருகிறார். துணைவேந்தர்களிடம் கல்வி சூழ்நிலை பற்றி பேசலாம். கல்வி தொடர்பாக பேசலாம். அதையெல்லாம் விடுத்து விட்டு மறைமுகமாக அரசியல் பேசுவதை நிச்சயமாக ஏற்றுக்கொள்ள முடியாது. அரசியல் உள்நோக்கங்களுக்காக இத்தகைய நடவடிக்கைகளில் ஆளுநர் ஈடுபடுகிறார் என்பது தான் எங்களது கருத்து. ஆளுநரின் இத்தகைய நடவடிக்கையை எதிர்த்து தேவைப்பட்டால் திமுக போராட்டம் நடத்தும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

பயங்கரவாதிகள் தாக்குதலில் 4 விமானப்படை வீரர்கள் காயம்

பாலியல் வன்கொடுமை வழக்கில் தலைமறைவாக உள்ள பிரஜ்வலின் தந்தையும் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகனுமான ரேவண்ணா கைது

மே 7 முதல் உதகையில் இ-பாஸ் நடைமுறை அமல்