குடியிருப்பு பகுதியில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை மாற்ற கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

*மரக்காணம் அருகே பரபரப்பு

மரக்காணம் : மரக்காணம் ஒன்றியத்துக்கு உட்பட்டது கொளத்தூர் ஊராட்சி. இந்த ஊராட்சியில் 35க்கும் மேற்பட்ட இருளர் குடும்பங்கள் உள்ளது. இந்த பகுதியில் மின் கம்பங்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு இந்த மின் கம்பிகளை சரி செய்யவில்லை என குறை கூறுகின்றனர். இதனால் குடியிருப்பு பகுதிகளில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை சரி செய்ய வேண்டுமென பல மாதங்களாக மரக்காணம் வட்டாட்சியர், முறுக்கேறி பகுதியில் உள்ள துணை மின் நிலைய மின்சாரத்துறை அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். ஆனால் அதிகாரிகளோ இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குறை கூறுகின்றனர். இதனால் ஆத்திரமடைந்த இருளர் பகுதியை பொதுமக்கள் முறிக்கேறி-அடசல் சாலையில் மின்துறை அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

இதுகுறித்து தகவலறிந்த பிரம்மதேசம் போலீசார் மற்றும் சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டிருந்த முக்கியஸ்தர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அங்கிருந்தவர்கள் எங்கள் பகுதியில் மின் கம்பிகள் மிகவும் தாழ்வாக உள்ளது. இந்த கம்பிகளை தெருவில் விளையாடும் சிறு குழந்தைகள் கூட இரும்பு கம்பிகளால் தொட்டால் கூட உயிருக்கே ஆபத்து ஏற்படும் அபாய நிலை உள்ளது.

எனவே தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். அப்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உங்களது கோரிக்கை உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் முறுக்கேறி-நடுக்குப்பம் சாலையில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related posts

சென்னையில் அடுத்த ஒரு மாதத்தில் தெரு நாய்கள் கணக்கெடுப்பு நடத்தப்படும்: மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உறுதி

ஆளும் பாஜக அரசு தேர்தலில் தோல்வி அடைந்தால் ஆட்சி மாற்றம் என்பது சுமுகமாக இருக்காது : ஜனாதிபதிக்கு முன்னாள் நீதிபதிகள் கடிதம்!!

டெல்லி சரிதா விஹார் காவல் நிலையம் அருகே பஞ்சாப் விரைவு ரயில் பெட்டியில் பயங்கரத் தீ விபத்து..!!