அரசு மகளிர் பள்ளி கட்டிடத்தில் இயங்கும் கல்வி அலுவலகத்தை இடமாற்றம் செய்ய கோரிக்கை

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அரசினர் மகளிர் பள்ளி கட்டிடத்தில் இயங்கும் மாவட்ட கல்வி அலுவலகத்தை வேறு இடத்துக்கு மாற்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சிக்கு உட்பட்ட திருவள்ளூர் சாலையில், அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை சுமார் 960 மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு போதிய வகுப்பறை வசதி இல்லாமல் மாணவிகள் தரையில் அமர்ந்து கல்வி பயின்று வந்தனர். இதையடுத்து, நபார்டு திட்டத்தின் கீழ் 27 வகுப்பறைகள் கொண்ட கட்டிடம் இங்கு கட்டப்பட்டது.

கொரோனா காலக்கட்டத்திற்கு பிறகு இந்த பள்ளியில் மாணவிகள் சேர்க்கை அதிகமானதால், ஒவ்வொரு வகுப்பறையிலும் 60 முதல் 70 மாணவிகள் வரை இட நெருக்கடியில் அமர்ந்து கல்வி பயின்று வருகின்றனர். மேலும், இந்த 27 வகுப்பறைகளில் 7 வகுப்பறைகள் கல்வித்துறை அலுவலக பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. மீதமுள்ள 20 வகுப்புறைகளில் மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில், பள்ளி கட்டிடத்தில் 5 வகுப்பறைகள் தொடங்க பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் முடிவு எடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, எந்த அனுமதியும் இன்றி அந்த கட்டிடத்தை மாவட்ட கல்வி அலுவலகம் கைப்பற்றி, தற்போது அங்கு மாவட்ட கல்வி அலுவலகம் தொடங்கப்பட்டுள்ளது.

அந்த கட்டிடத்தை மீண்டும் மாணவிகளின் நலன் கருதி வகுப்பறையாக பயன்படுத்துவதற்கு கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால், மாவட்ட கல்வி நிர்வாகம் இதற்கு செவி சாய்க்காமல் உள்ளது. மேலும் மாணவிகளின் பள்ளிக்கு போதிய கழிவறை, விளையாட்டு மைதானம் உள்ளிட்ட வசதிகள் இல்லை. இதனால் மாணவிகளின் கல்வியும், விளையாட்டுத் திறனும் கேள்விக்குறியாகும் என்று மாணவிகளின் பெற்றோர் வருத்தம் தெரிவித்துள்ளனர். எனவே, மாவட்ட கல்வி அலுவலகத்தை வேறு இடத்துக்கு மாற்றி அந்த இடத்தில் மாணவிகள் கல்வி பயில ஏதுவாக பழைய கட்டிடத்தை மீண்டும் வகுப்பறையாக மாற்றித் தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related posts

நீலகிரி மலை ரயிலுக்கு 125 வயது: கேக் வெட்டி கொண்டாட்டம்

டூவீலருக்கு தவணை தொகை செலுத்தாத விவகாரம்; நடுரோட்டில் இளம்பெண் மானபங்கம்: தனியார் நிறுவன அதிகாரி மீது வழக்கு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் புதிய இலச்சினை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்