அனுமதியின்றி வைக்கப்பட்ட தமிழக வெற்றிக்கழக கொடி கம்பங்கள் அகற்றம்

*போலீசார் நடவடிக்கை

உளுந்தூர்பேட்டை :உளுந்தூர்பேட்டை பகுதியில் நடிகர் விஜய் கட்சியான தமிழக வெற்றிக்கழகம் சார்பில் அனுமதியின்றி வைக்கப்பட்ட கொடி கம்பங்களை போலீசார் இரவோடு இரவாக அகற்றினர். அங்கு ரசிகர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட ஈஸ்வரகண்டநல்லூர், மட்டிகை, புத்தமங்கலம், நெடுமானூர், அலங்கிரி உள்ளிட்ட கிராமங்களில் நேற்றுமுன்தினம் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் கொடியேற்று விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் மாவட்ட பொறுப்பாளர் பரணி பாலாஜி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு கொடி ஏற்றி இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

இந்த நிலையில் இந்த கிராமங்களில் கட்சியின் கொடி ஏற்றுவதற்கு வருவாய் துறை மற்றும் காவல்துறையிடம் உரிய அனுமதி பெறவில்லை என தெரிகிறது. இதை தொடர்ந்து இந்த கிராமங்களின் கிராம நிர்வாக அலுவலர்கள் திருநாவலூர் மற்றும் எலவனாசூர்கோட்டை காவல் நிலையங்களில் கொடுத்த புகார்களின் பேரில் மாவட்ட பொறுப்பாளர் பரணிபாலாஜி, மாவட்ட இளைஞரணி தலைவர் மோகன், செயலாளர் பழனிவேல், பாலு உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மீது திருநாவலூர் மற்றும் எலவனாசூர்பேட்டை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதை தொடர்ந்து அனுமதியின்றி வைக்கப்பட்ட கொடி கம்பங்களை போலீசார் நேற்றுமுன்தினம் இரவோடு இரவாக அகற்றினர். அப்போது அங்கு நடிகர் விஜய்யின் ரசிகர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

Related posts

குளச்சல் பகுதியில் கனமழை: கட்டுமரங்கள் மீன் பிடிக்க செல்லவில்லை

திண்டுக்கல் குடிநீருக்கு பயன்படும் ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்க நீர்மட்டம் உயர்வு: பொதுமக்கள் மகிழ்ச்சி

பெரும்பாறை மலைப்பகுதியில் கனமழை; புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் கொட்டும் தண்ணீர்: பாசன விவசாயிகள் மகிழ்ச்சி