குத்தகை நிலத்தில் செவ்வாழை!

பக்கா லாபம் பார்க்கும் பஞ்சுப்பழம்

தமிழகத்தின் கடைகோடி மாவட்டம் கன்னியாக்குமரி மாவட்டம். முக்
கடல்கள் சங்கமிக்கும் இந்த பூமியில் தென்னை, ரப்பர், நெல் உள்ளிட்ட பயிர்களுக்கு அடுத்தபடியாக அதிகளவில் வாழையே சாகுபடி செய்யப்படுகிறது. ரசகதளி, மட்டி, செவ்வாழை, சிங்கன், தொழுவன் உள்ளிட்ட வாழை ரகங்களைப் பயிரிடுவதில் விவசாயிகள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இங்கு விளைவிக்கப்படும் வாழைக்குலைகள் பெரும்பாலும் கேரளாவிற்கு கொண்டு செல்லப்படுகிறது. குமரி மாவட்டத்தில் உற்பத்தியாகும் வாழைக்குலைகளுக்கு எப்போதும் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. அதிலும் குமரியில் விளையும் செவ்வாழைக்கும் எப்போதும் மவுசு ஜாஸ்தி. செவ்வாழை சாகுபடிக்கு சிவப்பு மண்ணுடன், களிமண் கலந்து இருக்க வேண்டும். இந்த தன்மை கொண்ட நாகர்கோவில் அருகே உள்ள மறுகால்தலைவிளையில் 4 ஏக்கர் தென்னந்தோப்பில் ஊடுபயிராக செவ்வாழையை சாகுபடி செய்திருக்கிறார் பஞ்சுபழம் என்ற விவசாயி. வாழையில் பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த பஞ்சுப்பழத்தைச் சந்தித்து பேசினோம்.

“நான் கடந்த 30 வருடமாக செவ்வாழை விவசாயம் செய்து வருகிறேன். இதற்கு முன்பு டெய்லராக பணிபுரிந்து வந்தேன். அப்போதே அருகில் இருக்கும் மற்றவர்களின் நிலங்களில் வாழை அறுவடை சீசனில் வேலைக்கு செல்வேன். தற்போது 4 ஏக்கர் தென்னந்தோப்பை குத்தகைக்கு எடுத்து அதில் ஊடுபயிராக செவ்வாழையை சாகுபடி செய்து வருகிறேன். இங்கு இருக்கும் தென்னை மரங்கள் இன்னொருவருக்கு சொந்தமானது. நான் செவ்வாழைக் கன்றுகளை ஒரு கன்று ரூ.21 என்ற கணக்கில் உள்ளூர் விவசாயியிடம் வாங்கி வந்து தென்னையில் ஊடுபயிராக சாகுபடி நடவு செய்திருக்கிறேன். ஒரு ஏக்கருக்கு 450 வாழைக்கன்றுகள் வரை தேவைப்படும். அதுவே ஊடுபயிராக இல்லாமல் நேரடியாக நடவு செய்வதாக இருந்தால் 650 வாழைக்கன்றுகள் வரை தேவைப்படும்.

நடவு செய்வதற்கு முன்பு இரண்டு முறை உழவு செய்தேன். இதற்கு அடிஉரமாக எதையும் போடவில்லை. ஏற்கனவே மண் நல்ல பதத்தில் இருந்ததால் நாங்கள் எதையும் உரமாக போடவில்லை. தென்னைகளுக்கு ஊடுபயிராக சாகுபடி செய்வதால் 8.25 அடி இடைவெளியில், ஒன்றரை அடி அளவில் குழி நடவு செய்துள்ளேன். நடவு செய்த 10 லிருந்து 15வது நாளில் கன்று வேர்விடத் தொடங்கிவிடும். கன்று நடவு செய்த 20 நாட்களில் இலைகள் வரத்தொடங்கிவிடும். இந்தப் பகுதி எப்போதும் ஈரப்பதமாகவே இருக்கும். அதனால் செவ்வாழைக்கு வாரத்திற்கு ஒருமுறை தண்ணீர் பாய்ச்சினால் போதுமானது. அதனுடன் மழை பெய்தால், அதற்கு கிடைக்க வேண்டிய நைட்ரஜன் சத்து நேரடியாக கிடைக்கும். இதனால் வாழை நல்ல திடகாத்திரமாக வளருவதுடன், குலையும் பெரியதாக இருக்கும். நடவு செய்த ஒன்றரை மாதத்தில் ஒரு வாழைக்கு ஒரு பெட்டி சாண உரம் போடவேண்டும். ஒரு வாரம் கடந்த பிறகு பாக்டம்பாஸ், பொட்டாஷ், சூப்பர் பாஸ்பேட் ஆகிய 3 உரங்களையும் சேர்த்து ஒரு வாழைக்கு முக்கால் கிலோ போடவேண்டும். 3வது மாதம் ஒரு வாழைக்கு ஒரு பெட்டி சாண உரம் இடுவோம். மீண்டும் ஒரு வாரம் கடந்த பிறகு பாக்டம்பாஸ், பொட்டாஷ் ஆகிய இரு உரங்களை சேர்த்து முக்கால் கிலோ ஒரு வாழைக்கு என்ற அளவில் இடவேண்டும். 5வது மாதம் ஒரு வாழைக்கு அரை பெட்டி சாணம் வீதம் உரம் வைக்கவேண்டும். பின்பு ஒரு வாரம் கடந்த பிறகு பாக்டம்பாஸ், பொட்டாஷ் ஆகிய இரு உரங்களை சேர்த்து ஒரு வாழைக்கு முக்கால் கிலோ வீதம் போடவேண்டும்.

7வது மாதத்தில் இருந்து வாழையில் இருந்து குலைதள்ளத் தொடங்கும். இதிலிருந்து 15வது நாளில் மரத்தில் பிஞ்சுகள் வரத்தொடங்கும். அனைத்து வாழைகளும் இந்த நேரத்தில் குலைதள்ளாது. சத்து குறைபாடாக இருக்கும் வாழையில் இருந்து குலை தள்ளுவதற்கு கொஞ்ச காலம் எடுத்துக் கொள்ளும். குலை தள்ளாத வாழைக்கு கூடுதலாக சாண உரம் போடுவேன். இதனால் எல்லா வாழைகளும் ஒரே நேரத்தில் குலை தள்ளும். அந்த சமயத்தில் கூன்வண்டு தாக்குதல் அதிகம் இருக்கும். இதனைக் கட்டுப்படுத்த 100 மி.லி மோனோகுரோட்டாபாஸ் மருந்தை 18 லிட்டர் தண்ணீரில் கலந்து வாழையின் மேல் தெளித்துவிடுவேன். இதன் மூலம் கூன்வண்டு தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம். குலை தள்ளிய சில நாட்களில் தென்னை ஓலையால் செய்யப்பட்ட கூடைகளை கொண்டு குலைகளை மூடிவிட வேண்டும். அப்போதுதான் செவ்வாழை நல்ல சிவப்பாக இருக்கும். இல்லையென்றால் பச்சை நிறத்தில் மாறிவிடும்.

4 ஏக்கர் நிலத்தில் 2 ஆயிரம் வாழை மரங்கள் உள்ளன. செவ்வாழைக்கு செலவு அதிகம் என்பதால், ஒரு சில விவசாயிகள் மட்டுமே இதை சாகுபடி செய்து வருகின்றனர். செவ்வாழைக்கு உரம், வேலை ஆட்கள் கூலி என்று ஒரு வாழைக்கு ரூ.450 வரை செலவு செய்கிறேன். குலைகளை 10வது மாதத்தில் அறுவடை செய்யலாம். செவ்வாழை விலை இல்லாதபோது கூட ஒரு குலை சராசரியாக ரூ.800 வரை விலைக்கு போகும். நல்ல விலை இருக்கும்போது ஒரு குலை ரூ.1200 வரை விற்பனையாகும். செவ்வாழை சாகுபடி செய்து குலை அறுவடை செய்யும் வரை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொள்ள வேண்டும். குலைதள்ளிய 85 லிருந்து 90 வது நாளில் அறுவடை செய்வேன். நான் சாகுபடி செய்துள்ள 2 ஆயிரம் வாழைகளுக்கு அறுவடை முடியும் வரை ரூ.9 லட்சம் செலவு ஆகிவிடும். வாழைக்குலையின் தரத்தைப் பொருத்து சராசரியாக ரூ.750 வீதம் விற்றால் வருடத்திற்கு ரூ.15 லட்சம் வரை வருவாய் கிடைக்கும். செலவு ரூ.9 லட்சம் போக மீதம் ரூ.6 லட்சம் லாபமாக கிடைக்கும். கன்று நடவு செய்த தரமான கன்றை தேர்வு செய்து அதனைக் கொண்டு மீண்டும் மீண்டும் சாகுபடி செய்கிறேன்.

இதுபோக சுபமூகூர்த்த தினம் மற்றும் விசேஷ வீடுகளுக்கு குலை வாழை விற்பனை செய்தால் கூடுதலாக பணம் கிடைக்கும். குமரி மாவட்டத்தில் சுபமுகூர்த்த வீடுகளுக்கு வாழை மரங்களை அதிக அளவில் வாங்கிச்செல்கின்றனர். வாழைக்குலைகள் அறுவடை முடிந்தபிறகு, மரங்களைச் சுற்றியுள்ள கன்றுகளையும் விற்பனை செய்து வருகிறேன். நல்ல நேர்த்தியான முறையில் பராமரிப்பு செய்ததால் கடந்த வருடம் 7 ஆயிரம் வாழைக்கன்றுகளை விற்பனை செய்தேன். ஒரு கன்று ரூ.21க்கு விற்பனை செய்தேன். இதில் வேலை ஆட்களுக்கு ரூ.13 கூலியாக சென்றுவிடும். மீதம் 8 ரூபாய் லாபமாக கிடைக்கும். கடந்த வருடம் 7 ஆயிரம் வாழைக்கன்றுகள் விற்பனை செய்ததன் மூலம் ரூ.56 ஆயிரம் லாபம் கிடைத்தது. செவ்வாழையில் நல்ல முறையில் கன்றுகளைத் தேர்வு செய்து உரிய பராமரிப்புடன் மரங்களைக் கவனித்து வந்தால் சிறப்பான வருமானம் ஈட்ட முடியும்’’ என கூறி முடித்தார்.
தொடர்புக்கு:
பஞ்சுப்பழம் 98429 34318.

Related posts

3வது முறையாக பதவியேற்ற பின்னர் முதன்முறையாக பிரதமர் மோடி 20ம் தேதி சென்னை வருகை: 2 வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில் சேவை தொடக்கம்

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் தொடர்பான தேர்தல் ஆணைய அறிவிப்பு தமிழ்நாடு அரசு அரசிதழில் வெளியீடு

டெல்லியில் குடிநீர் வாரிய அலுவலகத்தை அடித்து நொறுக்கி பாஜகவினர் வன்முறை