சிவப்பு சிலந்தி நோய் தாக்கி பல ஆயிரம் ஏக்கர் பரப்பிலான தேயிலை தோட்டங்கள் பாதிப்பு

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் பல ஆயிரம் ஏக்கர் தேயிலை தோட்டங்களில் சிவப்பு சிலந்தி நோய் தாக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தேயிலை விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. அரை ஏக்கர் வைத்துள்ள சிறு விவசாயிகள் முதல் பல நூறு மற்றும் பல ஆயிரம் ஏக்கர் வைத்துள்ள தோட்ட முதலாளிகளும் அடங்குவார்கள்.

இதில், சிறு மற்றும் குறு விவசாயிகள் அரை ஏக்கர் முதல் 5 ஏக்கர் வரை வைத்துள்ளவர்களே அதிகம். இவர்கள் நாள்தோறும் தங்களது தேயிலை தோட்டத்தில் பறிக்கப்படும் பசுந்தேயிலையை அரசு மற்றும் தனியார் தேயிலை தொழிற்சாலைகளுக்கு வழங்கி அதிலிருந்து கிடைக்கும் பணத்தை வைத்தே வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக பசுந்தேயிலைக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இம்முறை நீலகிரி மாவட்டத்தில் பனிப்பொழிவு சற்று தாமதமாகவே துவங்கினாலும், தாக்கம் அதிகமாக காணப்பட்டது. பிப்ரவரி மாதம் இறுதி வாரத்தில் பனிப்பொழிவு முடிந்தவுடன், வெயில் காலம் ஆரம்பிக்கும். மார்ச் மாதத்தில் ஒரு சில நாட்கள் கன மழை பெய்யும். இந்த மழையால், பனியால் காய்ந்து போன தேயிலை செடிகள் துளிர்க்க ஆரம்பிக்கும். ஆனால், இம்முறை மார்ச் மாதம் மழை பெய்யாத நிலையில், பனியால் பாதிக்கப்பட்ட தேயிைல செடிகள் துளிர்க்கவில்லை.மாறாக, சிவப்பு சிலந்தி நோய் தாக்கியுள்ளது.

பொதுவாக இந்த நோய் தாக்கம் ஆண்டு தோறும் இருந்தால், ஏதேனும் ஒரு பகுதியில் சிறிதளவே காணப்படும். ஆனால், இம்முறை நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி மற்றும் மஞ்சூர் போன்ற பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தாக்கியுள்ளது. குறிப்பாக,சிறு மற்றும் குறு விவசாயிகளின் தேயிலை தோட்டங்களே அதிகம் பாதித்துள்ளன. இதனால், தேயிலை பறிக்க முடியாத நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். தேயிலைக்கு போதிய விலை கிடைக்காத நிலையில், பலர் தனியார் தேயிலைக்கு பசுந்தேயிலை விநியோகம் செய்து வாழ்க்கை நடத்தி வந்தனர்.இந்நிலையில், தேயிலையை சிவப்பு சிலந்தி நோய் தாக்கியுள்ள நிலையில், விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்வி குறியாக உள்ளது.

Related posts

ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் ஒரு போட்டியில் விளையாட அபராதத்துடன் தடை விதிப்பு

புதிய வழித்தடத்திற்கு சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கை தயாரிக்க மெட்ரோ ரயில் நிறுவனம் முடிவு

தமிழகத்தில் வரும் 17ம் தேதி வரை ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்