ஓஎம்ஆரில் ரூ1000 கோடி மதிப்பு ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பு

* 13 ஆண்டுகளுக்கு பின் மீட்கப்பட்ட 24.17 ஏக்கர்
* 6 வழிச்சாலையாக விரிவாக்க செய்யும் பணிகள் தீவிரம்
* நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்கள் புதுச்சேரி மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களுக்கு ஈசிஆர் சாலை வழியாக செல்வதற்காக ஓஎம்ஆர் சாலையை பிரதானமாக பயன்படுத்தி வருகின்றனர். சென்னை அடையாறு மத்திய கைலாஷ் பகுதியில் தொடங்குகிற பழைய மகாபலிபுரம் சாலை மாமல்லபுரம் அருகே முடிவடைகிறது. இந்த வழித்தடத்தில் தான் கலைஞர் கருணாநிதியின் கனவு திட்டமான டைடல் பார்க் பிரமாண்டமாக உயர்ந்து நிற்கிறது. ஓஎம்ஆர் சாலை எனப்படும் ராஜிவ் காந்தி சாலையில் ஏராளமான ஐடி நிறுவனங்கள் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வாழ்வளித்துக் கொண்டிருக்கிறது. இதேபோல் ஓ.எம்.ஆர் சாலை நெடுகிலும் 100க்கும் மேற்பட்ட பெரிய மென்பொருள் நிறுவனங்கள், 20க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள், 3 மருத்துவக் கல்லூரிகள், 5 பல்கலைக் கழகங்கள், தேசிய ஆராய்ச்சி ஆய்வகங்கள், ஏராளமான தனியார் பள்ளிகள், நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் பிரசித்தி பெற்ற திருப்போரூர் முருகன் கோயில் உள்ளிட்ட கோயில்கள் உள்ளன.

இவற்றில் பணியாற்றும் தொழிலாளர்கள், அலுவலர்கள், படிக்கும் மாணவர்களுக்காக 3000க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதன் காரணமாக ஓஎம்ஆர் சாலையில் காலை மற்றும் மாலை வேளைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக சிறுசேரி சிப்காட் வர்த்தக ரீதியிலும், வேலைவாய்ப்பு ரீதியிலும் மிகவும் முக்கியமான இடமாக பார்க்கப்படுகிறது. ஓ.எம்.ஆர் சாலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் பயணம் செய்து வருகின்றனர். முன்பு சென்னையில் இருந்து வெளியேறும் வாகனங்கள் ஜி.எஸ்.டி சாலையை தான் பெரும்பாலும் பயன்படுத்தி வந்தன. இந்த சூழலில் செங்கல்பட்டு வழியாக திருச்சி, சேலம், மதுரை செல்ல திருப்போரூர் வழியை பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். அதிலும் பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் ஜி.எஸ்.டி சாலையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க திருப்போரூர் வழியை பயன்படுத்த போக்குவரத்து காவலர்களே அறிவுறுத்துகின்றனர்.

மேலும், கல்பாக்கம் அணுமின் நிலையம் மற்றும் பிற தொழிற்சாலைகளுக்கு செல்லும் கனரக வாகனங்கள் இவ்வழியாக தான் செல்லும். அதேபோல் கேளம்பாக்கம், கோவளம், திருப்போரூர் மற்றும் அண்டை பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான ஐடி ஊழியர்கள் மகாபலிபுரம் மற்றும் சிறுசேரி இடையேயான பாதையை பயன்படுத்தினர். இந்நிலையில் ஓஎம்ஆர் எனப்படும் ராஜிவ் காந்தி சாலையில் தற்போது உள்ள நான்கு வழிச்சாலையை ஆறுவழிச்சாலையாக அகலப்படுத்த நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை மேற்கொண்டது. அதன்படி சாலை விரிவாக்கப்பணிக்காக கடந்த 2011ம் ஆண்டு முதல் நிலம் கையகப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. சிறுசேரி முதல் படூர் வரை வருவாய் துறை வாயிலாக நிலம் கையகப்படுத்தப்பட்டது. இந்நிலையில் 13 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட வந்த ரூ1075 கோடி மதிப்பிலான அரசு நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது: சென்னை – மாமல்லபுரம் சாலை திருப்போரூர் வழியாக செங்கல்பட்டு உட்கோட்ட பராமரிப்பில் உள்ள ராஜிவ் காந்தி சாலை மிக முக்கிய மாநில நெடுஞ்சாலையாகும். இச்சாலையில் சிறுசேரி முதல் படூர் வரை போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு நான்கு வழிச்சாலையை 6 வழிச்சாலையாக அகலப்படுத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிக்காக 2011ம் ஆண்டு வருவாய் துறை மூலமாக நில எடுப்பு செய்யப்பட்டது. தற்போது சாலை விரிவாக்கப் பணிகள் மற்றும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது. அதன்படி 13 வருடங்களாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வந்த சுமார் ரூ1075 கோடி மதிப்பிலான 24.17 ஏக்கர் அரசு நிலங்கள் செங்கல்பட்டு நெடுஞ்சாலைத்துறை கோட்டம், திருப்போரூர் பிரிவின் மூலம் மீட்கப்பட்டுள்ளது.

மேலும் ஓஎம்ஆர் சாலையில் சிறுசேரி, ஏகாட்டூர், வாணியம்சாவடி, கழிப்பட்டூர், படூர், கோவளம், காலவாக்கம், திருப்போரூர் மற்றும் ஆலத்தூர் போன்ற பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு அரசு நிலங்கள் நெடுஞ்சாலைத்துறை திருப்போரூர் பிரிவின் மூலம் மீட்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக செங்கல்பட்டு நெடுஞ்சாலைத்துறை கோட்டத்தின் பராமரிப்பிலுள்ள சாலைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

செங்கல்பட்டில் அடுத்தடுத்து 5 வாகனங்கள் மீது ஆம்னி பேருந்து மோதி விபத்து

தொடர்மழை காரணமாக சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு 5 நாட்கள் தடை விதிப்பு!

நீலகிரி மாவட்டம் குன்னூரில் மினி டெம்போ கவிழ்ந்து விபத்து: 14 பேர் காயம்