ராமேஸ்வரம் மீனவர்கள் 24 பேரை இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவு

கொழும்பு: ராமேஸ்வரம் மீனவர்கள் 24 பேரை இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. கடந்த 21ம் தேதி கைதான 25 பேரில் ஒருவருக்கு மட்டும் 6 மாதம் சிறை தண்டனை விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்திய எல்லையை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருவதும் அவ்வப்போது விடுதலை செய்யப்படுவது தொடந்து நடைபெற்று வருகிறது. ராமேஸ்வரத்தை சேர்ந்த 25 பேர் 3 விசைப் படகுகளில் நெடுந்தீவு அருகே மார்ச் 21ம் தேதி மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது எல்லை தாண்டியதாக இலங்கை கடற்படை கைது செய்தது.

சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் 25 பேரையும் காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்திய இலங்கை கடற்படையினர் ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது 25 பேரையும் ஏப்ரல் 4ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில் இன்று இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 25 பேரில் 24 பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒரு படகோட்டி மட்டும் 6 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட 3 விசைப் படகுகளில் இருவர் படகுகளுக்கு உரிமையாளராக இருப்பதால் விசைப் படகுகளை அரசுடைமையாக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர். மற்றொருவர் படகின் உரிமையாளர் இல்லாதவர் என்பதால் இந்த வழக்கு அடுத்த மாதம் நடைபெறும் எனவும் படகை இயக்கி வந்தவருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்தும் இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related posts

மனநலம் பாதிப்பால் காணாமல் போன விமானப்படை அதிகாரி 92 வயது தாயுடன் மீண்டும் இணைந்த நெகிழ்ச்சி சம்பவம்: 33 ஆண்டுக்கு பிறகு ஓய்வூதியமும் கிடைத்தது

அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் அரசு மருத்துவமனைகளில் ரூ.10 லட்சம் வரை இலவச சிகிச்சை: சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி தகவல்

லஞ்ச வழக்கில் பிடிபடும் ஊழியரை விடுவிப்பது உடலில் கேன்சர் செல்லை செலுத்துவது போலாகும்: சஸ்பெண்ட் உத்தரவை எதிர்த்த வழக்கில் ஐகோர்ட் கருத்து