ராமேஸ்வரத்தில் கடல் நீரோட்டத்திற்கு ஏற்ப மீன் கூண்டுகள் இடமாற்றம்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் கூண்டு மீன் வளர்ப்பு முறையில் வளர்க்கப்படும் மீன்கள், கடல் நீரோட்டத்திற்கு ஏற்ப வேறு பகுதிக்கு மாற்றப்படுகின்றன. தமிழகத்தில் மீன்வளர்ப்பில் 100க்கும் மேற்பட்ட வழிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. குறைந்து வரும் காட்டு மீன்வளம், மோசமான பண்ணை பொருளாதாரம் போன்றவை புதிய மீன் வளர்ப்பு முறைகள் குறித்த தேடுதலுக்கு காரணிகளாக அமைகின்றன.

இதில், கூண்டு மீன் வளர்ப்பு சமீப காலமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக, ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் அருகே பாம்பன், தங்கச்சிமடம் உள்ளிட்ட பகுதிகளில் மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி கடலில் கூண்டு மீன் வளர்ப்பில் மீனவர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். மன்னார் வளைகுடா கடலில் அமைக்கப்பட்டுள்ள மீன் கூண்டுகளில் அதிகளவு கொடுவாய் மீன்கள் வளர்க்கப்படுகின்றன.

இந்த முறையில் மீன்கள் வளர்க்கப்படும் கூண்டுகளை அவ்வப்போது கடல் நீரோட்டத்திற்கு ஏற்றவாறு பிற பகுதிகளுக்கு மாற்றுவது வழக்கம். இதன்படி, பாம்பன் குந்துகால் கடல் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மீன் கூண்டுகளை அங்கிருந்து அகற்றி நேற்று வடகடல் பகுதிக்கு கொண்டு சென்றனர். இதற்காக பெரிய நாட்டுப் படகுகளில் மீன் கூண்டுகள் கட்டப்பட்டு கடலில் இழுத்துச் செல்லப்பட்டன. பாம்பன் தூக்குப்பாலம் திறக்கப்படாத நிலையில், கப்பல் கால்வாய் வழியாக கடந்து பாக் ஜலசந்தி கடல் பகுதிக்கு மீன் கூண்டுகளை மீனவர்கள் கொண்டு சென்றனர்.

Related posts

யூடியூபர் சங்கருக்கு ஒரு நாள் போலீஸ் காவல்

நெல்லை அரசு மருத்துவக்கல்லூரியில் ராகிங் கொடுமையால் மோதல் 2 மாணவர்கள் சஸ்பெண்ட்: விடுதி வார்டன் கார் கண்ணாடி உடைப்பு

தனியார் பஸ்சில் ₹10 லட்சம் சிக்கியது சென்னை வாலிபரிடம் ஐடி விசாரணை