ராஜிவ்காந்தி நினைவு நாள் ராகுல்காந்தி 21ம் தேதி தமிழகம் வருகை: ஸ்ரீபெரும்புதூரில் உள்ள நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார்

சென்னை: ராஜிவ் காந்தி நினைவு நாளை முன்னிட்டு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 21ம் தேதி தமிழகம் வருகிறார். ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜிவ்காந்தியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கை: பாரதப் பிரதமராக இருந்து உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை உயர்த்திய ராஜிவ்காந்தியின் 32ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு வரும் 21ம் தேதி காலை 8 மணியளவில் பெரும்புதூரில் அமைந்துள்ள ராஜிவ் காந்தி நினைவிடத்தில் நடைபெறுகிற அஞ்சலி நிகழ்ச்சியில் தலைவர் ராகுல்காந்தி பங்கேற்க இருக்கிறார். கர்நாடக தேர்தலில் பிரதமர் மோடி மேற்கொண்ட வகுப்புவாத, அவதூறு பிரசாரத்தை முறியடித்ததில் தலைவர் ராகுல்காந்திக்கு பெரும் பங்கு உண்டு.

கர்நாடகத்தில் அவர் பாத யாத்திரை மேற்கொண்ட பாதையில் அமைந்துள்ள 51 சட்டமன்ற தொகுதிகளில் 37ல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றிருக்கிறது. ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமைப் பயணத்தின் மூலம் கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் ஏற்படுத்தியிருக்கிற ஆட்சி மாற்றம் 2024 மக்களவை தேர்தலில் மத்தியில் அமைந்துள்ள மோடியின் பாசிச, ஜனநாயக விரோத ஆட்சியை அகற்றுவதற்கு அடித்தளமாக அமைந்திருக்கிறது. இதன்மூலம், இந்தியாவில் உள்ள பாஜவை எதிர்க்கிற மதச்சார்பற்ற அரசியல் கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்படுகிற சூழல் உருவாகியிருக்கிறது. எனவே, தமிழக மக்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம் பெற்ற ராஜிவ்காந்தி நினைவிடத்திற்கு ராகுல்காந்தி வரும் 21ம் தேதி காலை வருகை புரிகிறபோது, காங்கிரஸ் கட்சியினர் திரண்டு பங்கேற்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts

மாவட்டம் முழுவதும் 5000 ஏக்கரில் சாகுபடி தஞ்சாவூரில் எள் அறுவடை பணி விறுவிறுப்பு

போக்சோ வழக்கில் கைது செய்யப்படுவாரா?.. எடியூரப்பாவுக்கு சிஐடி சம்மன்

பள்ளி கட்டிடத்தை விரைந்து சீரமைக்கக்கோரி நெல்லை-திருச்செந்தூர் சாலையில் 7வது வார்டு மக்கள் மறியல்