மழைக்காலம் தீவிரம் அடையும் முன்பு நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்

*குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

திருவண்ணாமலை : திருவண்ணாமலை தாலுகாவில் மழைக்காலம் தீவிரம் அடையும் முன்பு ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று தாலுகா அளவிலான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நடந்தது. அதன்படி, திருவண்ணாமலை பிடிஓ அலுவலக கூட்ட அரங்கத்தில், தாலுகா அளவிலான குறைதீர்வு கூட்டம் நடந்தது. மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சிவா தலைமை தாங்கினார்.

கூட்டத்தில், வட்டார வளர்ச்சி அலுவலர் அருணாச்சலம், வேளாண் உதவி இயக்குநர் கோபாலகிருஷ்ணன், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் பரிமளா உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.அப்போது, விவசாயிகள் தரப்பில் தெரிவித்த கோரிக்கைகள் விபரம்:பருவமழைக்காலம் தீவிரமடைய தொடங்கியிருக்கிறது. எனவே, அதற்குள் ஏரிகள் மற்றும் நீர்வரத்து கால்வாய்கள் உள்ளிட்ட நீர்நிலைப் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். அப்போதுதான், மழைகாலத்தில் நீர்நிலைகள் முழுமையாக நிரம்பும்.

பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும். அதற்காக, விரைவில் முத்தரப்பு கூட்டம் நடத்த வேண்டும். ஆவினில் நெய், தயிர் ேபான்றவை தட்டுப்பாடு உள்ளது. பால் கொள்முதலில் முதலிடத்தில் உள்ள திருவண்ணாமலை மாவட்டத்தில் பால் உற்பத்தியாளர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும்.பயிர் காப்பீடு திட்டத்தில் சேர்ந்துள்ள விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு கிடைப்பதில்லை. பயிர் கடன் வாங்கினால் கட்டாயப்படுத்தி காப்பீடு திட்டத்தில் சேர்க்கின்றனர். எனவே, பயிர் பாதிப்புக்கு உரிய இழப்பீடு பெற்றுத்தர வேண்டும். கூட்டுறவு சங்கங்களில் தேவையான அளவில் கடனுதவி அளிக்க வேண்டும்.

இவ்வாறு தெரிவித்தனர். மேலும், காலை உணவு திட்டத்தினால் விவசாயிகளின் குழந்தைகள் பெரிதும் பயன்பெறுகின்றனர். எனவே, இத்திட்டத்தை கொண்டுவந்த தமிழ்நாடு முதல்வருக்கு விவசாயிகள் தரப்பில் நன்றி தெரிவிப்பதாக கூறினர். அதோடு, மணிலா விவசாயிகளின் நலனுக்காக சமையல் எண்ணெய் சந்தைப்படுத்தும் மையம் அமைத்ததற்கும் நன்றி தெரிவித்தனர்.
தண்டராம்பட்டு:

தண்டராம்பட்டு வேளாண்மை அலுவலக வளாகத்தில் சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் வெங்கடேசன் தலைமையில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நடந்தது. கூட்டத்தில், விவசாயிகள் கூறுகையில், அரசு மருத்துவமனைகளில் பாம்பு கடி மருந்து இருப்பு வைக்க வேண்டும். கொளமஞ்சனூர் ஏரிக்கரைக்கு சுற்றுச்சுவர் கட்ட வேண்டும். பதிவு செய்துள்ளவர்களுக்கு சிறு, குறு விவசாய சான்று விரைந்து வழங்க வேண்டும். கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசியை மழைக்காலத்திற்கு முன்பே போட வேண்டும். தோட்டக்கலை உதவி அலுவலர்கள் காய்கறி பயிர்களை பார்வையிட்டு ஆலோசனை வழங்க வேண்டும். தரமான விதைகளை வழங்க வேண்டும். அதிகாரிகள் விதை விற்பனை செய்யும் மையங்களில் ஆய்வு செய்ய வேண்டும் என்றனர்.

சேத்துப்பட்டு: சேத்துப்பட்டு வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நடந்தது. தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் சிவகுமார் தலைமை தாங்கினார். தாசில்தார் வெங்கடேசன், வேளாண்மை உதவி இயக்குனர் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தனர். வேளாண்மை உதவியாளர் முனியப்பன் வரவேற்றார். செய்யாறு ஊரக வளர்ச்சித்துறை இணை இயக்குனர் சுரேஷ்குமார் கூட்டத்தை தொடங்கி வைத்தார். கூட்டத்தில், அதிகாரிகள் விவசாயிகளின் சந்தேகங்களுக்கு பதில் அளிக்க வேண்டும். விவசாயத்தை நம்பி வாழும் மக்களுக்கு அரசு உறுதுணையாக இருந்து 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களை விவசாய பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பேசினர்.

போளூர்: போளூர் வேளாண்மை அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் தேர்தல் பிரிவு துணை ஆட்சியர் குமரன் தலைமையில் நடந்தது. தாசில்தார் சஜேஷ்பாபு, வேளாண்மை உதவி இயக்குனர் நாராயணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மண்டல துணை தாசில்தார் தட்சணாமூர்த்தி வரவேற்றார். கூட்டத்தில் விவசாயிகள் கூறுகையில், கலைஞர் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் குறித்து விவசாயிகளுக்கு விளக்க வேண்டும்.

மண்டகொளத்தூர், ஈயகொளத்தூர் ஏரிகளை தூர்வார வேண்டும். போளூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நெல் மூட்டைகளை பாதுகாப்பாக வைக்க புதிய இருப்பு அறை கட்டித்தர வேண்டும். மணல் தேவைப்படுவதால் உரிய முறையில் எடுத்து செல்ல வருவாய்த்துறை அனுமதி தர வேண்டும் என்றனர். முடிவில் உதவி வேளாண்மை அலுவலர் ராமு நன்றி கூறினார்.

வந்தவாசி: வந்தவாசி வட்டார வளர்ச்சி அலுவலக கூட்டரங்கில், வேளாண்மை மற்றும் உழவர் துறை சார்பில் வட்டார அளவிலான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் யுவராஜ் தலைமை தாங்கினார். தாசில்தார் பொன்னுசாமி முன்னிலை வகித்தார்.கூட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். அப்போது, மழையூர் கிராமத்தில் செயல்பட்டு வந்த நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை மீண்டும் திறக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையில், வந்தவாசி அடுத்த தெள்ளாறு ஒன்றியத்துக்கு உட்பட்ட கூத்தம்பட்டு, கீழ்வெள்ளியூர், கீழ்நமண்டி, ஆச்சமங்கலம் ஆகிய கிராமங்களில் ஆதிதிராவிட மக்கள் பயன்படுத்தும் சுடுகாட்டுக்கு செல்வதற்கு பாதை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தி அந்த கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் பாடை கட்டி ஊர்வலமாக வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த உதவி இயக்குனர் யுவராஜ், தாசில்தார் பொன்னுசாமி, பிடிஓ ராஜன்பாபு ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அதிகாரிகள் இதுகுறித்து நேரில் ஆய்வு செய்து ஒருவாரத்திற்குள் ஜல்லி சாலை அமைக்கும் பணி மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர். இதையேற்று விவசாயிகள் கலைந்து சென்றனர்.

ஆரணி: ஆரணி மற்றும் மேற்கு ஆரணி வட்டார விவசாயிகளுக்கான குறைதீர்வு கூட்டம் மேற்கு ஆரணி வேளாண்மை துறை அலுவலகத்தில் வேளாண்மை உதவி இயக்குநர் புஷ்பா தலைமையில் நடந்தது. வட்டார போக்குவரத்து அலுவலர் சரவணன், தாசில்தார் மஞ்சுளா மற்றும் பிற துறை அதிகாரிகள் முன்னிலை வகித்தனர். தோட்டக்கலை உதவி இயக்குனர் கவுசிகா வரவேற்றார். ஆர்டிஓ தனலட்சுமி கூட்டத்தை தொடங்கி வைத்தார்.

கூட்டத்தில் விவசாயிகள் கூறுகையில், விதைகள், உயிர் உரங்களை முறையாக வழங்க வேண்டும். பயிர்களில் நோய் தாக்குதல் குறித்து புகார் தெரிவித்தால் அதிகாரிகள் வந்து பார்வையிட வேண்டும். நீர்வரத்து கால்வாய் மற்றும் ஏரியில் இருந்து விவசாய நிலங்களுக்கு செல்லும் பாசன கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். விவசாய மின் இணைப்புகளுக்கு விண்ணப்பிக்க என்ஓசி சான்று வழங்க வேண்டும். அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க வேண்டும் என்றனர். முன்னதாக, குறைதீர்வு கூட்டத்தில் அளிக்கும் கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி விவசாயிகள் சங்க மாவட்ட துணைத்தலைவர் மூர்த்தி தலைமையில் விவசாயிகள் தங்களது கையில் வேப்பிலை ஏந்தி நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Related posts

தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம்

இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம்

சென்னையில் வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் விலை குறைப்பு!!