ஓரினச்சேர்க்கையாளர்கள், திருநங்கைகளின் பிரச்னைகள் குறித்த விழிப்புணர்வுக்காக சென்னையில் வானவில் சுயமரியாதை பேரணி: பல வண்ண ஆடைகளுடன் ஏராளமானோர் பங்கேற்பு

சென்னை: ஓரினச்சேர்க்கையாளர்கள், திருநங்கைகளின் சுயமரியாதையை வலியுறுத்தி சென்னையில் நடைபெற்ற வானவில் திருவிழா சுயமரியாதை பேரணியில் ஏராளமானோர் பல வண்ண ஆடைகள் அணிந்து பதாகைகளை ஏந்தி கலந்துகொண்டனர். உலகம் முழுவதிலும் உள்ள ஓரினச்சேர்க்கையாளர்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்தும் அதற்கான சட்ட உரிமைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவே இந்த பிரைட் மாதம் கொண்டாடப்படுகிறது. பிரைட் மாதம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தில் அனுசரிக்கப்படுகிறது. வெவ்வேறு பாலின இயல்புகளைக் கொண்ட சமூகத்தை ஒட்டுமொத்தமாக குறிக்கப்படும் சொல்தான் எல்ஜிபிடிகியூ கம்யூனிட்டி ஆகும்.

ஓரின சேர்க்கை, ஒரு பால் ஈர்ப்பு என்பது பல நாடுகளில் குற்றமாக கருதப்படுகிறது. உலகில் மொத்தம் 28 நாடுகளில் மட்டுமே ஓரினச்சேர்க்கை திருமணங்களை அங்கீகரிக்கின்றன.
எல்ஜிபிடிகியூ மக்கள் தங்கள் மாதமாக கருதும் ஜூன் மாதத்தில் பிரமாண்ட பேரணியினை உலகெங்கும் நடத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக சென்னையில் நேற்று எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே பேரணியாக சென்றனர். குறிப்பாக சமூகத்தின் பார்வையில் ஆண் பெண் என்ற பாலினம் சிகை அலங்காரம் ஆகியவற்றை விடுத்து தம் உணர்வுகளுக்கு தகுந்தாற் போல பல வண்ண ஆடை அணிந்து சிகை அலங்காரம் செய்து பேரணியில் நடனமாடி மகிழ்ந்தனர்.

ஓரினச்சேர்க்கையாளர்கள், திருநங்கைகள், திருநம்பிகள் மட்டுமின்றி, அவர்களின் உரிமைகளுக்காக போராடும் சமூக செயற்பாட்டாளர்களும் இதில் கலந்துகொண்டு தங்களின் ஆதரவை வெளிப்படுத்தி பதாகைகள் ஏந்தினர். தங்கள் நலனை காக்கும் ஒன்றிய மற்றும் தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்த அவர்கள், மேலும் தங்கள் இருப்பை உரிமையை நிலைநாட்ட அரசு பல்வேறு சலுகைகள் திட்டங்களை கொண்டுவர வேண்டும் என கேட்டுக்கொண்டனர். முக்கியமாக பெற்றோர்களும் ஆதரவு தெரிவித்து இப்பேரணியில் கலந்து கொண்டனர்.

Related posts

டெல்லி திகார் சிறையில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சரணடைந்தார்.

காந்தி நினைவிடம், அனுமன் கோயிலில் பிரார்த்தனை; டெல்லி திகார் சிறையில் கெஜ்ரிவால் சரண்: சுப்ரீம் கோர்ட்டுக்கு நன்றி தெரிவித்தார்

தபால் வாக்குகளை எண்ணி முடித்த பிறகே இவிஎம் வாக்குகளை எண்ண வேண்டும்: இந்தியா கூட்டணி மனு