ஜோலார்பேட்டையில் பரபரப்பு; ரயிலில் வடமாநில வாலிபர்கள் ஆக்கிரமிப்பால் கழிவறை செல்ல முடியாமல் பெண்கள் தவிப்பு: அபாய சங்கிலியை இழுத்து பயணிகள் சரமாரி புகார்


ஜோலார்பேட்டை: ரயிலில் வடமாநில வாலிபர்களின் ஆக்கிரமிப்பால் கழிவறை செல்ல முடியாமல் தவித்த பயணிகள், ஜோலார்பேட்டையில் அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினர். பின்னர் போலீசில் சரமாரியாக புகார் தெரிவித்தனர். கேரள மாநிலம் கொச்சிவெலியில் இருந்து உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் செல்லும் ரப்திசாகர் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்றிரவு கொச்சுவேலியில் இருந்து புறப்பட்டது. இந்த ரயிலில் கோவையை சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் தனது சகோதரியுடன் கோவையில் இருந்து விஜயவாடாவுக்கு முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் ஏறி பயணம் செய்தார். முன்பதிவு செய்யப்பட்ட இந்த பெட்டி மற்றும் கழிவறை அருகில் முன்பதிவு செய்யாத ஏராளமான வடமாநில வாலிபர்கள் நிற்பதற்கு கூட இடமின்றி நெரிசலாக பயணம் செய்தனர்.

இதனால் அந்த பெட்டிகளில் இருந்த பயணிகள், கழிவறைக்கு செல்ல முடியாமல் தவித்தனர். குறிப்பாக பெண்கள் நீண்ட நேரம் காத்திருந்தனர். இரவு 8 மணியளவில் ஜோலார்பேட்டை நிலையத்தில் ரயில் நின்றது. அங்கு 3 நிமிடம் ரயில் நின்று மீண்டும் புறப்பட்டது. அப்போது கழிவறை செல்ல முடியாத நிலையில் இருந்த பயணிகள், திடீரென அபாய சங்கிலியை பிடித்து இழுத்தனர். இதனால் ரயில் நிறுத்தப்பட்டது. தகவலறிந்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார், விரைந்து சென்று விசாரித்தனர். அப்போது, கழிவறையை பயன்படுத்த முடியாத வகையில் வடமாநில வாலிபர்கள் பயணம் செய்வதை கூறினர்.

இதையடுத்து எஸ் 3 பெட்டியில் ஏறிய போலீசார், கழிவறை மற்றும் வழியில் அமர்ந்திருந்த வடமாநில பயணிகளை வெளியேற்றிவிட்டு பெண் பயணிகளை கழிவறைக்கு அனுப்பினர். அதேபோல் எஸ் 1, எஸ் 2, எஸ் 3 ஆகிய 3 ரிசர்வ் பெட்டிகளிலும் முன்பதிவு செய்யாமல் பயணித்தவர்களை பொதுஜன பெட்டிக்கு அனுப்பினர். இதையடுத்து சுமார் 15 நிமிடம் தாமதமாக ரயில் புறப்பட்டு சென்றது. கடந்த வாரம் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் ஆய்வு செய்த ரயில்வே எஸ்பி, வடமாநில ரயில்களில் அடிக்கடி சோதனையிட்டு முன் பதிவில்லாத நபர்கள் ஏறினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதாக எச்சரித்திருந்தார். இந்நிலையில் ரப்திசாகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் கழிவறையை வடமாநில வாலிபர்கள் ஆக்கிரமித்து பயணிகளை அவதிப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

தமிழ்நாட்டில் கோயம்புத்தூர், திருப்பூர், தேனி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரை சென்னையில் நடத்துவதற்கு உலக செஸ் கூட்டமைப்பிடம் தமிழ்நாடு அரசு விண்ணப்பம்

நெல்லை – சென்னை சிறப்பு ரயில் ஜூன் மாதம் முழுவதும் நீட்டிப்பு: பயணிகள் மகிழ்ச்சி